Thursday, August 11, 2011

வெற்றியில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, தோல்வியில் பொறுமையைக் கடைபிடித்து வாழ்பவன் முஃமின்

எண்ணிறந்த விடயங்களில் பலவாறான முயற்சிகளை மனிதன் செய்து வருகிறான். அவன் முனையாத துறைகள் கிடையாது. நிலத்தில், நீரில், ஆகாயத்தில் விரிந்து பரந்து சிறிய, பெரிய முயற்சிகள் பலவற்றை மேற்கொள்கிறான். முயன்றால் தான் முன்னேறலாம் என்பது மனிதனின் திடமான நம்பிக்கை.
மனித முயற்சிகள் எல்லாமே வெற்றியாக அமைவதில்லை. சில வெற்றியளிக்க, சில தோல்வியைக் கொடுக்கின்றன. தெண்டிப்புகள் வெற்றியளிப்பது அல்லாஹ்வின் கையிலுள்ளது, அவனின் விதியைப் பொறுத்தது. உயர்ந்திட வேண்டும், உயரப் பறந்திட வேண்டும், அடைய வேண்டும், ஆள வேண்டும் என ஆசைகளை, இலட்சியங்களை அகத்தில் அள்ளிக் கட்டிக் கொண்டு பகீரதப் பிரயத்தனம் செய்வோர் பலர். இவர்களில் சிலர் தம் இலக்குகளை அடைய, சிலர் தோல்வியை சந்திப்பது கண்கூடு. இது இறை விதியின் வெளிப்பாடன்றி வேறேது?
முஃமின் கழாஃ, கதரை விசுவாசித்தவன். வெற்றி, தோல்வி கழாஃ, கதரிலுள்ள படி தான் தனக்கு கிடைக்கின்றது என உறுதியாக நம்ப வேண்டும். கிடைத்தது, கிடைக்காது போனது எல்லாமே அல்லாஹ்வின் எழுத்து தான் என உறுதியாக நம்பி வாழ வேண்டும். இதனைத் தான் பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
“உமக்கு கிடைத்தது உமக்கு தவறுவதற்கிருக்கவில்லை. இன்னும் உமக்கு தவறியது உமக்கு கிடைப்பதற்கிருக்கவில்லை என்பதை நீர் அறிந்து கொள்க!” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
ஒரு விசுவாசியைப் பொறுத்த மட்டில் அவனின் எத்தனங்கள் வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி இரு சந்தர்ப்பங்களையும் சரி நிகர் சமானமாக ஏற்றுக் கொள்கின்ற மனப் பக்குவமுள்ளவன். வெற்றியின் நிமித்தம் வரம்பு மீறி களிப்படையவோ, தோல்வியைக் கண்டு துவண்டுபோகவோ மாட்டான். வல்லவன் அல்லாஹ் வான்மறையில் “உங்களுக்கு தவறிப் போனதையிட்டு நீங்கள் கவலைப்படாதிருக்கவும், அவன் (அல்லாஹ்) உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் எக்களிக்காதிருக்கவும்…” (57:23) என இயம்புகிறான்.
நம் முயற்சிகள் கைகூட அல்லாஹ்வின் அருள் இன்றியமையாதது. எமது அறிவு, விவேகம், புலமை, ஆற்றல், அனுபவம், செல்வாக்கு, பலம் என்பன காரியசித்தியளிப்பதில்லை. ஆகவே காரியசித்தியின் போது, வெற்றியீட்டும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்து, துதித்திட வேண்டும். எமது எத்தனங்களில் தப்புத் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடவும் வேண்டும். அல்-குர் ஆனின் அல்-நஸர் அத்தியாயத்தில் இவ்வழிகாட்டலைக் காணலாம்.
“அல்லாஹ்வின் உதவி மற்றும் வெற்றி வந்து மேலும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீர் கண்டால் உமது இரட்சகனைப் புகழ்வதுடன் துதிப்பீராக! இன்னும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்பை மிகவும் ஏற்பவனாக இருக்கிறான்” (110:01 –03)
வெற்றி வாகை சூடும் சமயம் பணிவைக் கைக்கொள்ள வேண்டும். ஷைத்தானிய தூண்டுதல்கள் மண்டைக்கனத்தைக் கொண்டு வரும். ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். ரஸ¤ல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புனித மக்காவை வெற்றிகொண்டு உட்பிரவேசிக்கும் போது பணிவின் காரணமாக தலையைக் குனிந்திருந்த அவர்களின் தாடி சேணத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது.
வெற்றிக் கழிபேருவகை அடுத்தவரின் உரிமை, உயிர், உடல், உடைமை என்பவற்றுக்கு ஊறு விளைவிக்கவோ, அவரின் உணர்வைப் புண்படுத்தவோ, அவரை மானப்பங்கப்படுத்தவோ இட்டுச் செல்லலாகாது. தனது உரிமைகள் முற்றாக மறுக்கப்பட்ட நிலையில் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவை வெற்றிகொண்ட வேளை மக்காவாசிகள் அனைவரையும் மிகவும் கண்ணியமாக நடத்தினார்கள். அவர்கள், அவர்களின் கடந்த கால பிழைகள், தன்னை வெளியேற்றியமை பற்றி எந்தக் குறையும் சொல்லவில்லை.
தோல்வியை சந்தித்தவர் அங்கலாய்த்தல், அழுது புலம்பலாகாது. மாறாக அதனை ஒரு தற்காலிக பின்னடைவாக பார்த்தல் வேண்டும். மனந் தளர்ந்து நிராசை கொண்டு விடாது அல்லாஹ்வின் பேரருளால் இன்றில்லாவிடினும் நாளையாவது வெற்றி நிச்சயம் என உறுதியுடன் மீண்டும் எத்தணிக்க வேண்டும். வெற்றி, தோல்வி இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை சதா வெற்றியே குவிந்து கொண்டிருந்தால் வெற்றியைச் சரியாக அனுபவிக்க, சுவைக்க தெரியாது போகும்.
தோல்வியும் இடைக்கிடையே வர வேண்டும். அப்போது தான் வெற்றியின் அருமை, பெருமை நன்கு புரியும், அதனை உள்ளபடி அனுபவிக்க முடியும். இரவை அனுபவித்து உணரும் போது பகலையும், சூட்டை அனுபவித்து விளங்கும் போது குளிரையும், இருளை அனுபவித்து புரியும் போது வெளிச்சத்தையும் நன்கு விளங்க முடிகிறதல்லவா! “பொருட்கள், விடயங்கள் அவற்றின் எதிர்மறைகளைக் கொண்டுதான் வேறுபடுகின்றன” என்பர் அரபிகள்.
அதேவேளை தன் முயற்சி தோல்வியைத் தழுவியதற்கான காரணத்தையும் தேடிப் பார்த்தல் அதி முக்கியம். சென்ற வழிகள், கையாண்ட பொறிமுறைகள், துணைக்கு சேர்த்துக் கொண்ட ஆட்கள் பற்றியெல்லாம் மீள்பார்வை செய்து, செப்பனிட்டு, செவ்வைப்படுத்தி, செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கூட இருந்து குழிபறிக்கும், கழுத்தறுக்கும் புல்லுருவிகளை, காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களை இனங்கண்டு களைபிடுங்க வேண்டும்.
“நமது பெரும் புகழ் ஒரு போதும் விழாதிருப்பதில் இல்லை. என்றாலும் விழும் போதெல்லாம் எழுந்து நிற்பதில் தான் உள்ளது” என்ற கொன்பியுஸியஸின் கருத்து கவனத்திற்குரியது.
வெற்றியைக் கண்டு அளவு கடந்து குதூகலிக்கவோ, தோல்வியைக் கண்டு துயருறவோ இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை.
வெற்றியில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, தோல்வியில் பொறுமையைக் கடைபிடித்து வாழ்பவன் முஃமின்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes