Friday, July 1, 2011

தொழுகையின் மூலம் அல்லாஹ்விடத்தில் எல்லாவிதமான உதவிகளையும் தேடலாம்.

தொழுகையின் மூலம் அல்லாஹ்விடத்தில் எல்லாவிதமான உதவிகளையும் தேடலாம். பின்வரும் குர்ஆன் வசனங்கள் அறிவிக்கின்றன. 2:45, 2:153 ஆகிய வசனங்கள். அவற்றுள் 2:45 குர்ஆன் வசனத்தை நோக்குவோம். “பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்”.
இந்தக் குர்ஆன் வசனத்தின்படி, இறையுதவி தொழுகையாளிக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பது தெளிவாகின்றது. எனவே, ஒவ்வொருவரும் தொழுகையைச் சரிவர தொழுவதன் மூலம் தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுக் கொள்வோம்.
2:153 ஆம் வசனமும் இந்த உண்மையையே உறுதிப்படுத்துகின்றது. “நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். அல்லாஹ் பொறுமை யாளர்களுடன் இருக்கின்றான்”.
தொழுவோருக்குக் கிடைக்கும் பயன்கள் பின்வரும் குர்ஆன் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. 2:177, 2:277, 4:162, 5:12, 7:170, 9:71, 13:22, 22:35, 27:3, 30:31, 35:29, 42:38, 70:23, 70:34 அவற்றுள் முதலாவது குர்ஆன் வசனத்தை நோக்குவோம்.
“உங்கள் முகங்கள் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று, மாறாக அல்லாஹ் இறுதி நாள், வானவர்கள், வேதம் மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அநாதைகள் ஏழைகள் நாடோடிகள், யாசிப்போர் மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸக்காத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய் மற்றும் போர்க் களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்”. (2:177).
மேலும், முஸ்லிம்களின் பிரதான அடையாளம் தொழுகை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 9:5, 9:11, 22:41, ஆகியன. அவற்றுள் 9:5 ஆம் குர்ஆன் வசனத்தை ஈண்டு நோக்குவோம்.
“எனவே, புனித மாதங்கள் கழிந்ததும், அந்த இணை கற்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு தொழுகையை நிலைநாட்டி, ஸக்காத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன்” (9:5).
தொழுகையைக் கடைப்பிடித்தால், அல்லாஹ் விடம் மன்னிப்பும் அருளும் சகலருக்கும் கிடைக்கும் என்பது தெளிவாகின்றது.
மேலும், தொழுகை அல்லாஹ்வுக்கே என்பது பின்வரும் குர்ஆன் விசனங்கள் மூலம் நிரூபிக்கப்படுகின்றன. 6:162, 163, 108:2 அவற்றுள் முதலாவது குர்ஆன் வணக்கத்தை நோக்குவோம். எனது தொழுகை, எனது வணக்க முறை எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன.
அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன். முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக. (6:162, 163).
எனவே, எமது தொழுகை அல்லாஹ்வுக்கன்றி வேறு எவருக்கும் உரியதல்ல ஏகத்துவம் பேணப்படுகின்றது. வேறு எதனையும் வணங்கக் கூடாது என்பது வலியுறுத்தப்படுகின்றது. எமது முழு வாழ்க்கையும் இறைவணக்கமாக அமைகின்றது.
அத்துடன், மறுமை நம்பிக்கையின் அடையாளம் தொழுகை என்பது பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் தெளிவாகின்றது.
“இது தாய் கிராமத்தை (மக்காவையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம். பாக்கியம் பெற்றதும், தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்தக் கூடியதுமாகும். மறுமையை நம்புவோர் இதை நம்புகின்றனர்.
அவர்கள் தமது தொழுகையில் பேணுதலாகவும் உள்ளனர். (6:92) இந்த குர்ஆன் வசனத்தின் மூலம் மறுமை வாழ்க்கை இன்பமாக அமைய வேண்டுமாயின் நாம் தொழுகையில் பேணுவதலாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. தொழுகை ‘சுவர்க்கத்தின் திறவு கோல்’ என்பதிலிருந்தும் மறுமை பயன் சுட்டிக் காட்டப்படுகின்றது.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes