Wednesday, July 20, 2011

முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்

முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்
நான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று ('ஃபதக்' சொத்து தொடர்பான பிரச்சினை குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:
நான் ('கலீஃபா) உமர்(ரலி) (அழைத்தன் பேரில் அவர்கள்) இடம் சென்றேன். (சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.) அப்போது உமர்(ரலி) அவர்களின் மெய்க்காவலர் 'யர்ஃபஉ' என்பவர் அவர்களிடம் வந்து, 'உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?' என்று கேட்டார். உமர்(ரலி), 'சரி' என்று கூறி, அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து, சலாம் (முகமன்) சொல்லி அமர்ந்தார்கள். பிறகு சற்று நேரம் கழித்து யர்ஃபஉ (வந்து) உமர்(ரலி) அவர்களிடம், 'அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் சந்திக்கத் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டதற்கு உமர்(ரலி), 'ஆம்' என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர்.
அப்பாஸ்(ரலி), 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்' என்று கூறினார்கள்.
அப்போது உஸ்மான்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் அடங்கிய குழுவினர், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவரிடையே தீர்ப்பளித்து, ஒருவரின் பிடியிலிருந்து மற்றவரை விடுவித்து விடுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே!' என்று இறைத்தூதராகிய தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அந்தக் குழுவினர், 'அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்லத்தான் செய்தார்கள்' என்று பதிலளித்தார்கள்.
பிறகு உமர்(ரலி) (வாதியும் பிரதிவாதியுமான) அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள்.
அவ்விருவரும், '(ஆம்) அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்' என்று பதிலளித்தார்கள்.
உமர்(ரலி), 'அவ்வாறெனில், உங்களிடம் நான் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ) செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை அளிக்கவில்லை' (என்று கூறிவிட்டு,) 'அல்லாஹ் எச்செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பி அளித்தானோ அச்செல்வம், உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்தன்று. மாறாக, அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்' எனும் (திருக்குர்ஆன் 59:6 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
தொடர்ந்து, 'எனவே இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை நபி(ஸல்) அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கு வழங்கவே செய்தார்கள். உங்களிடையே வழங்கவே செய்தார்கள். உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் (இறைத்தூதர் நிதியான) அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்கு வழங்கி வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் (சேமநல நிதியாக வைத்துச்) செலவிட்டு வந்தார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். எனவே, அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள்.
அதற்கு (அங்கிருந்த குழுவினரான) அவர்கள், 'ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தார்கள். (பிறகு) அலீ(ரலி) அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், 'உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா?' என்று கேட்க, அவர்களிருவரும் 'ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தார்கள்.
(தொடர்ந்து உமர்(ரலி),) 'பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது (ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட) அபூ பக்ர்(ரலி), 'நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்' என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்' (என்று கூறிவிட்டு,) அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ருலி) அவர்களையும் நோக்கி உமர்(ரலி), 'அப்போதும் நீங்கள் இருவரும் அபூ பக்ர்(ரலி) இப்படி இப்படி(ச் சொல்கிறார்கள்; இறைத்தூதர் நிதியான எங்களுடைய சொத்தைத் தர மறுக்கிறார்கள்)' என்று சொன்னீர்கள்! (ஆனால்,) அபூ பக்ர்(ரலி) அந்த விஷயத்தில் உண்மையே கூறினார்கள்; நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்; நேர்வழி நடந்து வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.
அப்போது (ஆட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட) நான் 'அல்லாஹ்வின் தூதரு(டைய ஆட்சி)க்கும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிரதிநிதியாவேன்' என்று கூறி அ(ந்தச் செல்வத்)தை என்னுடைய ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (அவர்களுக்குப் பிறகு) அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்து கொண்ட முறைப்படி நானும் செய்லபட்டு வந்தேன்.
பிறகு நீங்கள் இருவரும் (இச்செல்வம் தொடர்பாகப் பேச) என்னிடம் வந்தீர்கள். உங்களிருவரின் பேச்சும் ஒன்றாகவே இருந்தது; இருவரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்தது.
'(அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் புதல்வரிடமிருந்து (-நபியிடமிருந்து) உங்களுக்குச் சேரவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள்.
(இதோ!) இவரும் (அலீயும்) என்னிடம் தம் மனைவிக்கு அவரின் தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்கைக் கேட்டபடி வந்தார். அப்போது (உங்கள் இருவரிடமும்) நான் 'நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, 'அதன் விஷயத்தில், இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி), செயல்பட்டவாறும், நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து செயல்பட்படியுமே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும்' எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் இச்செல்வத்தை ஒப்படைத்துவிடுகிறேன். அவ்வாறில்லையாயின், இது தொடர்பாக என்னிடம் நீங்கள் இருவரும் பேச வேண்டாம்' என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும் 'அ(ந்)த (நிபந்தனையி)ன் அடிப்படையில் அதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்' என்று சொன்னீர்கள். அதன்படியே அ(ச்செல்வத்)தை உங்கள் இருவரிடமும் நான் ஒப்படைத்தேன்' என்று கூறினார்கள்.
பிறகு (அங்கிருந்த குழுவினரிடம்), 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: நான் அ(ச் செல்வத்)தை இவர்கள் இருவரிடமும் அ(ந்)த (நிபந்தனையி)ன்படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?)' என்று கேட்க, அதற்கு அக்குழுவினர் 'ஆம்' என்றார்கள்.
அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி உமர்(ரலி), 'நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நான் அ(ச் செல்வத்)தை உங்கள் இருவரிடமும் அ(ந்)த நிபந்தனையி)ன் படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?)' என்று கேட்க, அவ்விருவரும் 'ஆம்' என்று பதிலளித்தார்கள்.
உமர்(ரலி) 'இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடம் கோருகிறீர்களா? எவனுடைய கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்த தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டான். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்' என்று கூறினார்கள். 10
Volume :6 Book :69

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes