Sunday, November 18, 2012

வெந்தயக்கீரை



சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. 

சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம். 

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். 

குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். 

நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். 

இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். 

வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. 

சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes