Wednesday, January 4, 2012

விடை கண்டுபிடயுங்கள்

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.
நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.
தமிழகத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் நான் அல்லாஹ்விற்காக எந்த அமைப்பில் சேர்ந்து பணியாற்றுவது என்று இன்று வரை குழம்பி வருகிறேன். அல்லாஹ்விற்காக எனது சிந்தனைக்கு இஸ்லாமிய முறையில் விடை காண்பியுங்கள்.
இன்று வரை முஸ்லிம் அமைப்புக்கள் செய்யக்கூடிய தவறகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவைகளே என் குழப்பத்திற்கு காரணம் !!
1) முஸ்லிம்களின் பெயரால் அரசியல் இயகத்தை தொடங்கியவர்கள் முஸ்லிம்களுக்கு பயனில்லாத விதத்தில் (அடிமை)அரசியலை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்ற விஷயத்திலும், மேலும் தவ்ஹீதின்(அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற) வாசனையே இல்லாமல், இணை வைத்தல் காரியங்களிலும், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டே இஸ்லாமிய இயக்கம் செயல்பட வேண்டும் என்ற கொள்கையில்லாமலும் செயல்படுகின்ற விஷயத்திலும் இந்த இயக்கம் தவறு செய்கிறது (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்).
நிச்சயமாக, இஸ்லாத்தின் அடிப்படையே தவ்ஹீது தான், மேலும் இஸ்லாம் கண்ணியத்தை போதிக்கிறது அடிமைத்தனத்தை (அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அடிமையாக இருப்பதை) வெறுக்கின்றது.
2) நபிவழியின் பெயரால் இயக்கத்தை தொடங்கியவர்கள், நபிவழிக்கு மாற்றமான பித்அத்தை அறிந்தோ அறியாமலோ பின்பற்றும் விஷயத்தில் தவறு செய்கிறீர்கள். (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்).
நிச்சயமாக, அல்லாஹவின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இல்லாத எந்த ஒரு மார்க்க விஷயமும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்படாது மாறாக நிராகரிக்கப்படும்.
3) இஸ்லாத்தின் பெயரால் இயக்கத்தை தொடங்கியவர்கள், முஸ்லிம்களுக்கு தஃவா பணி, முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை தெளிவுபடுத்தி எடுத்துரைத்தல், சமுதாயத்தின் நீதிக்காக மறைமுகமாகவும் குரல் கொடுத்தல், சமுதாயத்திற்கு உதவுதல் போன்ற நல்ல பல பணிகளை செய்து வருகிறார்கள். (அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்).
ஆனால் மார்க்க விஷயங்களில் (COMPRIMISE) சமாதானப் பேச்சு எனும் விஷயத்தில் இந்த இயக்கம் தவறு செய்கிறது (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்). நிச்சயமாக, சத்தியம் – அசத்தியம் தெளிவாகவே உள்ளது, மார்க்க விஷயங்களில் (அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அனுமதித்தைத் தவிர) சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
4) முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக இயக்கத்தை தொடங்கியவர்கள், முஸ்லிம்களின் இவ்வுலக முன்னேற்றத்திற்காக அதிகமாக பாடுபடுகிறீர்கள் (அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்). மறுமை வெற்றிக்காகவும் பாடுபடுகிறீர்கள் (முதலினும் குறைவாக). உங்கள் கொள்கைகளும் செயல்பாடுகளும் ஒரு முஸ்லிமின் மறுமை முன்னேற்றத்தை விட இவ்வுலக முன்னேற்றமே முக்கியம் எனும் வகையில் பிற்காலத்தில் மாற்றப்பட்டுள்ளது.
முன்னர் மார்க்க விஷயங்களின் பகிரங்மாக பிரச்சாரம் செய்த நீங்கள், உங்களின் புதிய பாதைக்காக மார்க்கத்தையும் மார்க்கப்பிரச்சாரத்தையும் தளரும்படி செய்துள்ளீர்கள். இஸ்லாமிய கொள்கையில் உறுதியுள்ளவர்கள் குறைவாக இருந்தாலும் அல்லாஹ்வின் பொருத்தம் அதிலே அதிகமிருக்கும் என்பதை மறந்து எண்ணிகை தான் அரசு அதிகாரங்களை மிரளவைக்கும் என்ற அரசியல் சித்தாந்தத்தின் பால் (முஸ்லிம்களின் உரிமைகளையும் மானத்தையும் மீட்கவும் காக்கவும்) தள்ளப்பட்டுள்ளீர்கள். (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்).
நிச்சயமாக ஒரு முஸ்லிமுக்கு இம்மையும் மறுமையும் வேண்டும். ஆனால் மறுமைக்கே முன்னுரிமை, மேலும் கூட்டம் குறைவாக இருந்தாலும் சத்தியவான்களாக இருந்தால் அல்லாஹ்வின் உதவி அதிகமாகயிருக்கும்.
5) தவ்ஹீதின் பெயரால் இயக்கத்தை தொடங்கியவர்கள், மாஷா அல்லாஹ் – தவ்ஹீது பிராச்சாரத்தை நானறிந்தவரை முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியிலும் நன்றாக செய்கிறார்கள் (அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்).
உங்கள் இயக்கமல்லாத மற்ற இயக்கத்தினரை தரைக்குறைவாக விமர்சிக்கிறீர்கள். (இதுவே நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு).
தவறுகளை சுட்டிக்காட்டுவதில் இஸ்லாத்தில் அழகிய வழிமுறை உண்டு அதனை முற்றாக மறந்துவிட்டீர்கள்.
உங்கள் இயக்கம் சாராத தவ்ஹீதுவாதிகளும் உண்டு என்பதையும் மறந்துவிட்டீர்கள். (அல்லாஹ்விற்காக திருத்திக்கொள்ளுங்கள்).
ஒருவர் தவறு செய்தால் அவரை திருத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைப்படி சுட்டிக்காட்டுங்கள். அவரை கேவலப்படுத்துவதற்காக அவரது தவறுகளை அவருக்கெதிரான ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள். அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி, அவனக்கு இணையேதும் வைக்காத அனைவரும் தவ்ஹீதுவாதிகள் என்பதை அன்புடன் நினைவூட்டுகிறேன்.
Thnxs:Abdul Rahman

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes