Wednesday, January 4, 2012

ஸஜ்தா செய்யுங்கள்!

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! என்று சொன்ன போது இப்லீஸித் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவன் மறுத்து அகந்தை பேசினான். நிராகரிப்பவர்களில் ஒருவனாக அவன் ஆனான். (அல்குர்ஆன்2:34)                                        
       இந்த வசனத்தில் கூறப்படும் செய்தி எல்லா  முஸ்லிம்களுக்கும்  தெரிந்த ஒன்றே. மலக்குகள் எனும் வானவர்கள் முதல் மனிதராகிய  ஆதம் (அலை)  அவர்களுக்கும்  ஸஜ்தா செய்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இந்தக் கருத்து திருகுரானிலும் இன்னும் அனேக இடங்களில் கூறப்படுகின்றது.
    15:30,37:73,7:11,17:61.18:50,20:11 ஆகிய வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வசனங்கள் பற்றி ஏகத்துவவாதிகளுக்கு இடையே ஒரு குழப்பம். இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும் எனும் போது வானவர்களும் கூட இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய கடமைப்பட்டு இருக்கும் போது அவர்கள் ஏன் ஆதமுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும்? அவ்வாறு செய்யுமாறு இறைவன் ஏன் கட்டளையிட வேண்டும்? இந்தக் கேள்விகளால் அவர்களுக்கிடையே குழப்பம்.
    ஏகத்துவத்துக்கு எதிரானவர்களுக்கோ இந்த வசனம் ஒரு வரப்பிரசாதம். ஆதம் அவர்களுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததால் பெரியவர்களுக்கு மகான்களுக்கு சாதாரணமானவர்கள் ஸஜ்தா செய்யலாம் என வாதிடுவோருக்கு இந்த வசனமும் இந்தக் கருத்திலமைந்த  ஏனைய வசனங்களும் மிகப் பெரும் சான்றுகளாகத்  தெரிகின்றன.
    இரண்டிலும் சேராதவர்களுக்கோ தடுமாற்றம்! எங்கே சாய்வது என்று தீர்மானிக்க முடியாதது அவர்களது நிலைமை. இஸ்லாத்திலேயே முரண்பாடுகள் உள்ளனவோ என்ற எண்ணத்தைக் கூட சிலர் இதனால் தங்கள் அடி மனதில் புதைத்து வைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இந்த வசனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகி விடுகின்றது.
    “ஆதம்(அலை) அவர்களுக்கு வானவர்கள் ஸஜ்தா செய்தனர்” என இங்கே கூறப்படுகின்றது. ‘ஸஜ்தா’ என்றதும் நெற்றியைத் தரையில் வைத்து பணிவது தான் நமது நினைவுக்கு வரும். ஸஜ்தா என்பதை இந்த ஒரு பொருளில் தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம் என்பது தான் இதற்குக் காரணம்.
    ‘ஸஜ்தா’ என்பதற்கு நாம் நினைக்கின்றது போல் நெற்றி தரையில் படுமாறு பணிதல், என்று அர்த்தம் இருப்பது போலவே அதற்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளன. இதற்கான சான்றுகளும் திருக்குர் ஆனிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. முதலில் ‘ஸஜ்தா’வுக்குரிய ஏனைய அர்த்தங்களை அறிந்துவிட்டு இந்த இடத்தில் எது பொருத்தமான பொருள் என்பதையும் தக்க சான்றுகளுடன் விளங்குவோம்.
   மூசா(அலை)  அவர்களின்  சமுதாயத்தை  ஒரு  நகருக்குள்  பிரவேசிக்குமாறு  இறைவன்  கூறும் போது, “ஸஜ்தா செய்தவர்களாக இந்த வாசல் வழியாக நுழையுங்கள்” என்று இறைவன் கட்டளையிட்டான். இந்தக் கட்டளை 2:58,4:154,7:161 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது.
    இந்த இடத்தில் பரவலாக நாம் விளங்கி வைத்திருக்கின்றவாறு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தப் பொருளின்படி ஸஜ்தா செய்தால் உள்ளே செல்லுங்கள் என்றே இதற்கு பொருள் கொள்ள புடியும். மணிவுக்கும், அடக்கத்துக்கும் ‘ஸஜ்தா’ எனும் பதத்தை  இறைவன் இங்கே       பயன்படுத்தியிருக்கிறான். ” மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) ஸஜ்தா செய்கின்றன”. (அல்குர்ஆன் 55:6)
    இந்த வசனத்தில் மரம் செடிகள் ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் கூறுகிறான். இந்த   இடத்தில் முதலாவது அர்த்தமும் இரண்டாவது அர்த்தமும் கொள்ள முடியாது. ஏனெனில் மரம் செடிகளுக்கு நெற்றி கிடையாது அதை தரையில் வைப்பதென்பதும் கிடையாது.முதலாவது அர்த்தம் கொள்ள இந்த இடத்தில் வழியே இல்லை. இரண்டாம் அர்த்தம் செய்யவும் வழியில்லை. ஏனெனில் மரம் செடிகளிடம் பெருமையையும்,பணிவையும் கற்பனை செய்ய முடியாது,அவை எவ்வாறு இருக்க வேண்டுமென இறைவன் விதித்திருக்கின்றானோ அவ்வாறு அவை நடக்கின்றன என்பதே இதன் பொருளாக இருக்க முடியும்.அவை ஸஜ்தா செய்கின்றன என்றால் இறைவன் என்ன நோக்கத்தில் அதை படைத்துள்ளானோ அதன்படி அவை இயங்குகின்றன என்பதே  பொருள்.
  அல்லாஹ் படைத்திருப்பவைகளை அவர்கள் உற்று நோக்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும்,இடமுமாக இறைவனுக்காக ஸஜ்தா செய்தவையாக சாய்கின்றன. மேலும் அவை அல்லாஹ்வுக்கு பணிகின்றன. (அல்குர் ஆன் 16:48) வலமும் இடமுமாக பொருள்களின் நிழல்கள் சாய்வதை இங்கே இறைவன் ஸஜ்தா என்று குறிப்பிடுகிறான்.அதை தொடர்ந்து
வானங்களிலிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும், ஜீவராசிகளூம் மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (அல்குர்ஆன் 16:49)
  வானம், பூமியில் உள்ள யாவும்,சகல ஜீவராசிகளூம் இறைவனுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான்.நெற்றியை நிலத்தில் வைத்துப் பணிவது என்ற அர்த்தத்தை இங்கே இடம் பெற்ற ஸஜ்தா எனும் சொல்லுக்கு கொடுக்க முடியாது.
  பதினோரு நட்சத்திரங்களூம், சூரியனும் சந்திரனும் எனக்கு ஸஜ்தா செய்யக் கூடியவையாக நான் கனவு கண்டேன்.  (அல்குர்ஆன் 12:4)
  யூசுப் நபியவர்கள் இவ்வாறு கனவு கண்டதாக அல்லாஹ் கூறுகிறான். சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களூம் நாம் நினைக்கின்ற அர்த்தத்தில் ஸஜ்தா செய்திருக்க முடியாது. எனெனில் ஸஜ்தாவுக்குரிய உறுப்புகள் அவற்றுக்குக் கிடையாது இந்தச் சான்றுகளிலிருந்து ஸஜ்தாவுக்குப் பல பொருள்கள் இருப்பதை நாம் அறிய முடிகின்றது.
  அப்படியானால் இந்த இடத்தில் ஆதம் [அலை] அவர்களூக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படும் இடத்தில் ஸஜ்தாவுக்கு எந்தப் பொருள் கொள்ள வேண்டும்.தொழுகையில் நாம் செய்கின்ற இந்த ஸஜ்தாவையே அவர்கள் செய்தார்களா? அவ்வாறு பொருள் கொள்ள முடியுமா?
    நிச்சயமாக அவ்வாறு பொருள் கொள்ள முடியாது.இந்த ஸஜ்தாவை மலக்குகள் இறைவனைத் தவிர வேறு எவருக்கும் செய்ய மாட்டார்கள் என்று திருக்குர்ஆனே தெளிவுபடுத்தி விடுகின்றது.
  உம்முடைய இறைவனிடத்தில் இருப்பவர்கள் (வானவர்கள்) அவனை வணங்குவதைவிட்டும் பெருமையடிப்பதில்லை.அவனைத் துதிக்கின்றனர்.மேலும் அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்.  (அல்குர்ஆன் 7:206)
    இந்த வசனத்தில் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்று இறைவன்  குறிப்பிடுகிறான். ‘யஸ்ஜுதூன லஹு’ என்பதற்கும் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்பதற்க்கும் வித்தியாசம் உள்ளது. ‘யஸ்ஜுதூன லஹு’ என்று சொன்னால் ‘அவனுக்கு ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள் என்று சொன்னால்  ‘அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள்.அதாவது வேறு எவருக்கும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள் என்பது இதன் கருத்து.
  மலக்குகள் இறைவனுக்கு ஸஜ்தா செய்வதுடன் வேறு எவருக்கும் ஸஜ்தா செய்யாமலிருப்பார்கள் என்று அவர்களைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர்கள் இறைவனுக்குச்  செய்யப்படும் ஸஜ்தாவை ஆதமுக்கு செய்திருக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவாக விளங்கலாம் இந்த வசனத்திற்கு முரண்படாத வகையிலேயே 2:34 வசனத்தையும் நாம் விளங்க வேண்டும்.
  அப்படியானால் மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்ற அந்த வசனத்தின் பொருள் என்ன? ஆதம்  (அலை)அவர்களைப் படைக்க இறைவன் விரும்பி மலக்குகளிடம் சொன்ன போது அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள்.அவரைவிட தாங்களே உயர்ந்தவர்கள் எனவும் கூறினார்கள்.அல்குர்ஆனின் 2:30 வசனத்திலிருந்து இதை அறியலாம்.மனிதனைவிடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை தவறென்று காட்டுவதற்காக அவர்களைவிட ஆதம்(அலை) அவர்கள் தமது ஞானத்தை வெளிப்படுத்தியபின், அவருடைய உயர்வை அவருக்கு இருக்கும் சிறப்பை மலக்குகள் ஒப்புக் கொண்டனர்.
    மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்றால் ஆதம்(அலை) தங்களை விட அறிவில் சிறந்தவர் என்று அவரது உயர்வை ஒப்புக் கொண்டார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் பொருள் கொள்ளக் காரணம் அல்குர்ஆன் 7:20ம்  வசனத்தில் மலக்குகள் இறைவனைத்தவிர வேறு எவருக்கும் (சிரம்பணியும்)ஸஜ்தாவை செய்ய மாட்டார்கள் என்று இறைவன் குறிப்பிடுவதானாலேயே.
    மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு தவறான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு போலி ஷைகுகள் தங்கள் முரீதுகளைக் காலடியில் விழச் செய்வதற்கும்,ஸஜ்தா செய்ய வைப்பதற்கும் இந்த வசனத்தில் எந்தச் சான்றுமே கிடையாது.
    ஸஜ்தா என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஒரு வாதத்துக்காக மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தது நாம் தொழுகையில் ஸஜ்தா செய்வது போன்றதே என்பதை எற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு சாதகமாக இதில் எந்தச் சான்றும் இல்லை என்பதை உணர வேண்டும். அவர்கள் செய்யும் அர்த்தம் சரி என்று வைத்துக் கொண்டாலும் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
   மலக்குகளும், மனிதர்களும் வெவ்வேறானவர்கள். மனிதர்களுக்கு இருப்பது போன்ற சட்டதிட்டங்கள் மலக்குகளுக்குக் கிடையாது.மலக்குகள் செயததை எல்லாம் மனிதர்களும் செய்ய முடியாது. இது முதலாவது வித்தியாசம். ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளை யிட்டதனாலேயே மலக்குகள் ஸஜ்தாச் செய்தனர். சுயமாக அவர்கள் செய்யவில்லை. ஆனால் அல்லாஹ், ஷைகுகளுக்கும், பெரியார்களுக்கும் ஸஜ்தாச் செய்யுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை.மாறாக அவனது திருத்தூதர் மூலமாக இதற்கு இறைவன் தடையும் விதிக்கின்றான்.
“நான் ‘ஹியாரா’ எனும் பகுதிக்குச் சென்றேன். அங்குள்ள மக்கள் தங்கள் தலைவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன்”. நபி(ஸல்) அவர்கள்தாம் ஸஜ்தா செய்யப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என்று (எனக்குள்) சொல்லிக் கொண்டேன். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஸஜ்தாச் செய்ய உங்களுக்கு மிகவும் தகுதி உண்டு என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் அடக்கஸ்தலத்தின் அருகே சென்றால் நீ அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று கேட்டார்கள். நான் ‘மாட்டேன்’ என்றேன். (அதே போல் உயிருடன் இருக்கும் போதும்) செய்யாதே! ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்; என்று நபி(ஸல்) கூறினார்கள்”. கைஸ் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபுதாவுத், தாரிமீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
     இதே கருத்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிப்பதாக இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு கூட ஸஜ்தா செய்ய அனுமதியில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
  ஆதம்(அலை) அவர்கள் மலக்குகளுக்கு கற்றுத்தரும் ஆசானாக ஆனதால் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எனவே இந்த அடிப்படையில் ஞானத்தை கற்றுத்தரும் ஷைகுகளுக்கு ஸஜ்தா செய்யலாம் என்ற இந்த ஷைகுகளில் வாதத்திற்கு இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளதை உணரலாம்.
   நபி(ஸல்) அவர்கள் தாம் அஞ்ஞானத்தில் இருந்த மக்களுக்கு சரியான ஞானத்தைப் போதித்தவர்கள். அவர்களை விட சிறப்பாக உலகில் எவருமே போதிக்க அனுமதி கேட்ட நபித்தோழருக்கு அனுமதி மறுக்கின்றார்கள்.இந்த ஷைகுமார்கள் நபி(ஸல்) அவர்களை விடவும் தங்களை உயர்ந்தவர்களாக கருதுகின்றார்கள் என்பதைத்தான் இவர்களின் போக்கு காட்டுகின்றது.
   நபி(ஸல்) அவர்கள் கைஸர், கிஸ்ரா,அலெக்ஸான்ரிய மன்னர் ஆகியோரிடம் தூதர்களை அனுப்பினார்கள். என்னை நஜ்ஜாஷி மன்னரிடம் அனுப்பினார்கள். நான் நஜ்ஜாஷி மன்னரிடம் வந்தபோது சிறிய வாசல் வழியாக குனிந்தவர்களாக மக்கள் உள்ளே செல்வதைக் கண்டேன். (அரசரைச் சந்திக்க செல்லும்) அந்த வாசல் குனிந்து செல்லும் அளவுக்கு உயரம் குறைந்ததாகவே அமைக்கப்பட்டிருந்தது.
  “நான் உள்ளே நுழையும் போது முதுகுபக்கம் திரும்பிக் குனிந்தவனாக உள்ளே சென்று நிமிர்ந்தேன். அபீஸீனிய மக்கள் இதைக் கண்டு திடுக்குற்றனர். என்னைக் கொல்ல அவர்கள் நாடினார்கள். நாங்கள் நுழைந்தது போலவே நீரும் ஏன் நுழையவில்லை? என்று என்னிடம் கேட்டனர்” நாங்கள் எங்கள் நபிக்கே இவ்வாறு (மரியாதை) செய்ய மாட்டோம். இவ்வாறு செய்வது (கூடுமென்றால்) நபி(ஸல்) அவர்களுக்கே தகுமாகும் என்று நான் கூறினேன்” என்று அம்ரு இப்னு உமய்யா அள்ளமீர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியின் அவ்ஸத் நூலில் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது
  அரசரை நோக்கிச் செல்லும் வாசல் உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருந்தால் அதில் குனிந்து தான் செல்லவேண்டும். அரசருக்காக் குனிந்ததாக ஆகிவிடுமோ என்று அம்ரு அவர்கள் முதுகைக்காட்டிக் குனிந்து உள்ளே சென்று நிமிர்ந்தார் என்றால் நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தவர் எவ்வாறு சுயமரியாதை மிக்கவர்களாக உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதை விளங்கலாம்.
    தனி மனிதனுக்காக குனிவதும் கூட கூடாது என்றால் ஒரு மனிதரின் காலில் விழுந்து ஸஜ்தா செய்வது எப்படி அனுமதிக்கப்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கே இவ்வாறு குனிந்து மரியாதை செய்யமாட்டோம் என்ற அம்ரு(ரலி) அவர்களின் கூற்றும் சிந்திக்கத்தக்கது.
  ஆக ஆதம்(அலை) அவர்களுக்கு மலக்குகள் செய்த ஸஜ்தாவுக்கு நாம் சாதாரணமாக நினைக்கும் அர்த்தம் அல்ல. அதுதான் அர்த்தம் என்று வைத்து கொண்டாலும் மனிதர்களின் கால்களில் விழவோ அவர்களுக்காக குணிந்து மரியாதை செய்யவோ நமக்கு அனுமதி இல்லை என்பதையாவது சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும். இந்த வசனத்தை கொண்டு மக்களை ஏமாற்றி அடிமைப் படுத்த நினைக்கும் முரீது வியாபாரிகளிடம் ஜாக்கிரிதையாக நாம் இருக்க வேண்டும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes