Tuesday, September 20, 2011

வட்டி என்றால் என்ன..?

வட்டி - வங்கி -முஸ்லிம்கள் பகுதி (1)
உலகெங்கும் வங்கிகள் வியாபித்துள்ள நிலையில் வங்கி முதலீடு அதிலிருந்து வரும் வருவாய் போன்றவற்றில் அகில உலக முஸ்லிம்களுக்கும் சந்தேகங்கள் நீடித்தவண்ணமுள்ளன. வெளிநாடுகளில் இது பற்றிய ஆய்வுகளும், விளக்கங்களும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகவே இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்கு.. இந்தக்கட்டுரையின் கருத்துக்களை இஸ்லாமிய (இறுதி) தீர்வாக நாம் வைக்கவில்லை. பலகோணங்களில் படித்து கேட்டு விளங்கி ஆய்வு செய்ததையே முதல் முறையாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். முறையான விளக்கங்களும் ஆதாரங்களும் கிடைக்கும் போது இந்த கட்டுரையின் கருத்துக்களில் மாற்றங்கள் வரலாம்.

இதுபற்றிய ஒரு விரிவான ஆய்வுகளத்தில் உங்களையும் கலந்துக் கொள்ளுமாறு அழைக்கின்றோம். ஆதவான, எதிர்மறையான, சந்தேகமான அனைத்துக் கருத்துக்களையும் தயக்கமின்றி, அலட்சியமின்றி எழுதுங்கள்.
குர்ஆன் சுன்னா வழிகாட்டும் அந்த பொருளாதார அமைப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
..................................
  • அ) வட்டி என்றால் என்ன..?
  • ஆ) நம் விருப்பத்துடன் வட்டி நம் பொருளாதாரத்துடன் இணைய வேண்டுமானால் அதற்குரிய நிபந்தனைகள் என்னென்ன..?
  • இ) இன்றைக்கு உலகம் எதை வட்டி என்று சொல்கிறதோ இதைத்தான் இஸ்லாமும் வட்டி என்று சொல்கிறதா.. அல்லது இஸ்லாம் வட்டி என்று சொல்வது இன்னும் அழுத்தம் வாய்ந்தவையா..?
இவற்றிற்கான பதிலை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
முதலில் குர் ஆன் வட்டி என்று எதை குறிப்பிடுகிறது என்பதை விளங்குவோம்.
வட்டியின் வகைகள்.
ஒரு முறை லாபம் கிடைக்கும் வகை.
வியாபாரம் வட்டியைப் போன்றதே... என்ற வாதத்தை முன் வைத்து அன்றைக்கு பலர் தங்கள் பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இறைவன் இதை மறுத்து 'அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துவிட்டான்' என்கிறான். 2:275
வட்டியும் வியாபாரமும் ஒன்று என்று கூறியவர்கள் 'இரண்டிலிருந்தும் லாபம் கிடைப்பதயே கருத்தில் கொண்டிருந்தார்கள்' இறைவன் இதை மறுக்கிறான். என்னக் காரணம்?
வியாபரம் என்பது பணம் பொருளாக மாறும் அடிப்படையையும் - இயல்பையும் கொண்டதாகும். வட்டி என்பது பணம் பணமாகவே மாறும் இயல்பைக் கொண்டதாகும். பணம் பொருளாக மாறும் போது அது உற்பத்தி பெருக்கத்தையும் தொழில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும். மக்களின் வாழ்வாதார தேவைகள் பூர்த்தியாகும். பணம் பணமாக மாறும் போது இதில் எதுவுமே சாத்தியமில்லை என்பது மட்டுமல்லாமல் பணம் முடங்கி கிடக்கும் சூழ் நிலையையும் உருவாக்கி விடுகிறது.
பொதுவாக செல்வம் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதையோ அது ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருப்பதையோ இஸ்லாம் விரும்பவில்லை.
உங்களில் செல்வந்தர்களிடையே மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது. (அல் குர் ஆன் 59:7)
பணம் பொருளாக மாறாமல் பணமாக மாறும்போது அவை பணம் படைத்தவர்களிடமே பதுங்கி கிடப்பதை இயல்பாக கொண்டுவிடும். மார்வாடி வகைறாக்கள் இதற்கு உதாரணம். தொழில் அல்லது வியாபாரம் செய்வதற்கு ஓரளவாவது பணம் தேவைப்படும். வட்டிக்கு இந்த முதலீடுகள் தேவையில்லை. 100 ரூபாயை வைத்து வியாபாரம் செய்ய முடியாத ஒருவனால் 100 ரூபாயை வட்டிக்கு விட்டு 105 ரூபாய் சம்பாதித்துவிட முடியும்.
இந்த வகையில் சில்லரையாகவும் பெருமளவு பணம் முடக்கப்படுவதால் பண வீக்கம் அதிகமாகி எத்துனையோ கெடுதிகள் முளைத்து நிற்கின்றன. பணம் கொடுத்து கூடுதல் பணம் பெருவதே இங்கு வட்டியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை விளங்கலாம். வியாபாரத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்று ஒரு தொகையை கொடுத்து விட்டு அதை திரும்ப பெறும்போது கூடுதலாக ஒருமுறை வட்டிப் பெறும் முறை 'வட்டி முறைகளில்' ஒன்றாக இருந்தது. அது இந்த வசனத்தின் வழியாக இறைவன் தடுத்துவிட்டான்.
தொடர் வட்டி.
இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).
இவை 'தொடர் வட்டி'க்கு எதிராக இறங்கிய வசனமாகும்.

'பல மடங்காக பெருகும் நிலையில்' என்பது. சேமிப்பு - முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை குறிப்பதாகும். தொடர் லாபம் என்பது வட்டிக்கு மட்டுமே உரிய வஞ்சனைத்தன்மையாகும். ஒரு பொருளுக்கு விற்பனையின் போது ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்றத் தன்மை கொடும் வட்டியான தொடர் வட்டிக்கு இல்லை. தொடர் வட்டியின் மூலதனம் ஒரு நாடு அல்லது அந்த நாட்டு மக்களின் இயலாமையும் பலவீனமுமே காரணமாக அமைந்து விடுகின்றன. நான் உனக்கு ரூ1000 கொடுப்பேன் அதை திருப்பி அடைக்கும் வரை மாதாமாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை ஈட்டித்தரும் வட்டியாகும். இந்த வட்டி முறை உலகலாவிய வலையைப் பின்னி பல நாடுகளை செல்லாக் காசாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வட்டி முறை மிகப்பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்த வல்லது என்பதால் இஸ்லாம் இதற்கு எதிராக முன்னணியில் நின்று போர் பிரகடனம் செய்கிறது. இத்தகைய வட்டி முறைகளை எந்த சமாதான வார்த்தைகளாலும் நியாயப் படுத்தவே முடியாது என்பதுதான் நமது நிலைப்பாடு.
அடுத்து,
வங்கி - வங்கியில் செய்யும் முதலீடு அல்லது சேமிப்பு- அவற்றிலிருந்து கிடைக்கும் (வருமானம்) வட்டி இவற்றை மேற்குறிப்பிட்டுள்ள வட்டி முறையோடு ஒப்பிடுவதும் - ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று சொல்லுவதும் எந்த அளவிற்கு நியாயமானது என்பதை பார்ப்போம்.
வங்கியும் - வட்டியும்.
வங்கி என்பது சிறு தொகை முதல் பெரும் தொகை வரை மக்கள் முதலீடு செய்யும் ஒரு நிருவனமாகும். இந்த நிருவனம் தேசிய அளவில் ஒரு வலையைப் பிண்ணிக் கொண்டு தன்னுடைய பணியை துவங்குகிறது. இதன் பணி முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மேட்டுக் கு,டி நடுத்தர வர்கம், வறுமைக்கோடு என்று வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்களின் தேவைக்கு பணம் கொடுத்து மேலதிகமாக பணம் பெற்று முதலீட்டாளர்களையும் தன்னையும் வளப்படுத்திக் கொள்கிறது.
பணம் கொடுத்து கூடுதலாக பணம் பெறுவது வட்டிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வங்கிகள் இந்த வேலையை மட்டும் தான் செய்கின்றனவா... என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விவசாயம் - தொழில் - வீட்டுவசதி போன்றத் தேவைகளுக்காக மட்டும் ஒரு வங்கி இயங்கினால் அந்த வங்கியில் கையிருப்பு என்பது மிக குறைந்த அளவைப் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது.
உதாரணமாக, அன்னிய செலவாணி அறவே இல்லாத - உள் நாட்டு அளவில் மட்டுமே இயங்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொல்வோம். இதில் அன்னிய செலவாணி இல்லாததால் வட்டி சதவிகிதம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் குறைவாகவே இருப்பார்கள். இந்த வங்கி முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டையும் கடனாக கொடுக்கும் பட்சத்தில் வரும் வட்டி மட்டுமே கையிருப்பாக வைக்கும் சூழல் அந்த வங்கிக்கு உருவாகி வங்கி பெரும் பிண்ணடைவை அடைந்துவிடும். அதனால் கடனுதவி என்பதோடு மட்டும் நின்று விடாமல் நல்ல லாபம் ஈட்டும் நிலையில் உள்ள தொழில் மற்றும் வியாபாரத்திலும் வங்கிகள் முதலீடு செய்து வருவாயை பெருக்கிக் கொள்ளவே செய்யும்.
அன்னிய செலவானியைப் பெற்றிருக்கும் வங்கிகளும் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் தொகையை முடக்கி லாபம் பெறவே செய்யும். வெறும் கடனுக்கு வட்டி என்ற நிலை மட்டும் வங்கிகளில் இருந்தால் அதன் கையிருப்பு குறையும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.
ஒரு வங்கி விவசாயம் - தொழில் - வீட்டு வசதி போன்றவற்றிற்கு மட்டும் கடன் கொடுத்து வட்டி வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் இப்போது கடனுக்காக அது ஒதுக்கும் தொகையின் அளவு என்ன..?
விவசாயத்திற்கென்று விவசாயிகள் அய்ம்பது லட்சம் பேர் (இவை மிக குறைந்த அளவே) வங்கியிலிருந்து நபர் ஒருவர் தலா ஒரு லட்சம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி அதற்காக ஒதுக்க வேண்டிய தொகை மொத்தம் அய்னூரு ஆயிரம் கோடிகளாகும்.
தொழில் - வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றை கணக்கிடும் போது இவை இன்னும் பல மடங்காக உயரும். கடனுக்கு உத்திரவாதமாக வங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும் ஒழுங்காக வட்டிக் கட்டப்படாமல் - திருப்பி அடைக்க வழியில்லாமல் போய் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் பல ஆயிரம் கோடிகளை தொடும். (தேவைப்பட்டால் இதுபற்றி மேலும் விளக்கலாம்)
இந் நிலையில் பணம் கொடுத்து பணம் பெருவது என்ற அந்த ஒன்றை மட்டுமே வங்கி மூல்தனமாகக் கொண்டிருந்தால் அதன் கையிருப்பு மற்றும் வருவாயில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும். இதை சரிகட்டுவதற்காக வங்கிகள் பெரும் - பெரும் தொழில் நிருவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன. பங்க சந்தை, பத்திரங்கள், உட்பட பணம் பண்ணும் வழிகளை வங்கிகள் தெளிவாகவே கண்டு வைத்துள்ளன. வாடிக்கையாளர்களின் பணம் பல நிலைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அவற்றிலிருந்து வரும் லாபங்கள் கடனுக்கான வட்டியுடன் கலந்தே வாடிக்கையாளர்களை அடைகின்றன.
லாபமும் வட்டியும் கலந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை பேணுதல் அடிப்படையில் தவிர்த்துக் கொள்ளலாம் என்று கூறலாமே தவிர அவற்றை 'ஹராம்' என்று கூறுவது முறையல்ல என்றே கருதுகிறாம்..
'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதின் பொருள் என்னவென்பதை இப்போது பார்ப்போம்.
இஸ்லாம் 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதை இரண்டு அர்த்தங்களில் முன்வைக்கிறது.
1) விலக்கப்பட்டவை என்று தெரிந்து அதை தவிர்த்துக் கொள்ளுவது.
2) ஒன்றின் மீது சந்தேகம் வரும் போது அதை தவிர்த்து விடுவது.
நம் தேவைக்காக வங்கியில் சேமிக்கப்படும் பணத்திற்கு மேலதிகமாக கிடைக்கும் தொகை 'வட்டியோ...' என்று சந்தேகம் வரும் போது அத்தகைய பணத்தை தன் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்ற அர்த்தத்தில் இங்கு குறிப்பிடுகின்றோம்.
வங்கிகள் எத்தகைய தொழிலிலும் பணத்தை முடக்காமல் கடன் மட்டுமே கொடுத்து வட்டிப் பெறுகிறது என்று தெளிவாக நிருபிக்கப் படாதவரை அது மேலதிகமாக கொடுக்கும் தொகையின் மீது 'சந்தேகம்'மட்டுமே நிலைத்திருக்கும்.
'ஹலாலும் தெளிவானது - ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார்' என்பது நபி மொழி. (புகாரி)
இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.
இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.
நபி(ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் 'தெளிவாக' அறிவிக்கப்பட்டன. ஹராமோ - ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் 'இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு' என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
அன்றைக்கு அந்த மக்களிடம் இருந்த பொருளாதார திட்டம், வழக்கம், பொருள்மாற்று வழிமுறைகள் போன்ற அனைத்தும் அடுத்து வந்த சில நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை கண்டு விட்டது. இருபதாம் நூற்றாண்டில் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலிருந்த பொருளாதார பார்வை, மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தலைகீழ் மாற்றமாகி போயின. ஊர் சந்தை வியாபாரம் என்ற நிலை உலக சந்தையானது. பொருளாதாரம் அகலமாக கண்களை விரித்து முழு உலகையும் பார்த்தது. விளைவு வங்கி உட்பட அனேக பொருளாதார நிருவனங்கள் உலகில் முளைத்து தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு வாழ்பவர்கள் புதிய பொருளாதார சிக்கல்களை சந்திக்கின்றார்கள். வைப்பதிலும், பெருவதிலும், கொடுப்பதிலும் புதிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். தான் ஒரு முஸ்லிமாக இருப்பதால் இந்த பொருளாதார வழிகளை எப்படி கையாள்வது என்பதில் அவர்களுக்கு சந்தேகம் வருகின்றது.
ஹலாலென்றோ ஹராமென்றோ தீர்மானித்து விட முடியாத இக்கட்டான நிலைகளில் கிடந்து மனம் தடுமாறுகின்றது. இத்தகையவர்களுக்கு ஆருதலளித்து வழிகாட்டுகிறது இந்த நபிமொழி. குறிப்பாக வங்கியில் நாம் சேமிக்கும் பணத்திற்கு மேலதிகமாக கொடுக்கப்படும் பணம் பற்றிய சந்கேத்திற்கு வழி காட்டுகிறது.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes