Saturday, June 9, 2012

செண்பக பூக்கள்

Medicinal Uses Michelia Champaca Aid0091
வாத பித்த அத்திசுரம் மாமேகம் சுத்தம் சுரந்
தாதுநட்டங் கண்ணழற்சி தங்காவே-மாதே கேள்
திண்புறு மனக்களிப் பாந் திவ்யமனம் உட்டினஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்

என்று செண்பகப் பூக்களின் மகத்துவம் பற்றி சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செண்பக மரம் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது.

மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
செண்பகத்தின் மலர்கள், இலை மற்றும் கனி உறைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் மானோ மற்றும் செஸ்குயிட்டர் பென்ஸ் உள்ளன. மைக்கிலியோலைடு, லிரியோடினைன், மேசிலைன் போன்ற வேதிப்பொருட்களும் இதில் காணப்படுகின்றன.

விதை, வேர், பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. செண்பக மரத்தின் மலர்கள், விதைகள், வேர் பகுதி மருத்துவ குணம் கொண்டவை.

கண்களில் ஒளியேற்றும் செண்பகப் பூக்கள்

செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன.

கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், “கஞ்சக்டிவா" எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும். இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள்.

செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க

செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும். செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

பித்தம் குறைக்கும் பூ
பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஆகியவை உண்டாகும். செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும்

செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

காய்ச்சல் குணமாகும்

வைரஸ், பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

வாசனை திரவியங்கள்

பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

செண்பகப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் சம்ப்பா எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் தலைவலி, கண்நோய்கள் குணமாகும். மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை போக்கும்.
வேர்களும், கனிகளும்
உலர்த்தப்பட்ட வேர், வேர்பட்டை மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் தொல்லைகள் போக்க வல்லது. கனிகள் சிறுநீர் மண்டல நோய்களில் உதவுகிறது. விதைகளின் எண்ணெய் வயிற்று உப்புசம் போக்கும் பாதங்களில் வெடிப்பு போக்கவும் உதவுகிறது.



0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes