Monday, April 9, 2012

ரத்தக்கட்டுக் காயங்களை அலட்சியப்படுத்த வேண்டாம்


சாதாரணக் காயம்தானே’ என்று நாம் கவனிக்காமல் விட்டுவிடும் சின்னக்  காயங்கள்கூட சில நேரங்களில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். அந்த வகையைச் சேர்ந்ததுதான் ரத்தக்கட்டு.
விளையாடும்போதோ, எங்கேயாவது இடித்துக்கொள்ளும்போதோ அல்லது தவறி விழும்போதோ வெளிப்புறமாக ஏற்படுவதுதான் இந்த ரத்தக்கட்டு. ரத்தக்கட்டுக் காயங்களை அலட்சியப்படுத்தினால், நாளடைவில் அந்த இடத்தில் ரத்த அழற்சி ஏற்பட்டு, கட்டிகளாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட பகுதியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலைகூட ஏற்படலாம்'' என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன்.
உடல் உறுப்புகளில் அடி ஏற்படும்போது, தோலுக்கு அடியில் உள்ள மெல்லிய 'முடிவு ரத்த நாளங்கள்’மற்றும் தசை செல்களில் சிதைவு ஏற்படும். இதனால், தோல் பகுதியைக் கிழித்துக்கொண்டு ரத்தம் வெளியேற முடியாமல் தோலுக்கு உள்ளேயே தேங்கி நின்றுவிடும். இதைத்தான் ரத்தக்கட்டு    (Hematoma) என்கிறோம்.
பொதுவாகக் காயம் ஏற்பட்டவுடன் அதைக் குணப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட இடத்தில் நிணநீர் (Lymph)  வந்து சேரும். காயமானது சிறிய அளவில் இருந்தால் நிணநீர் மூலம் தானாகவே குணமாகிவிடும். ஆனால், காயம் வலுவானதாக இருந்தாலோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ, இது சாத்தியம் இல்லை. இதுபோன்ற சூழலில் ரத்தக்கட்டைக் கரைக்க நிறைய வழிகள் இருக்கின்றன.
முதலில் அடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
ஆமணக்கு இலை, நொச்சி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, விளக்கெண்ணையில் வதக்கி, வெள்ளைத் துணியில் வைத்துக் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இதற்கு வீக்கத்தை உருக்கி ரத்தக்கட்டைப் போக்கும் தன்மை அதிகம்.
வெறும் விறலி மஞ்சளைப் பொடி செய்து, அரை ஸ்பூன் பொடியினை ஒன்றரை கப் தண்ணீரில் கலந்து, இளஞ்சூடாக்கி ரத்தக்கட்டு உள்ள இடத்தின் மேல் பத்து போடலாம். மஞ்சளுக்கு ரத்தக்கட்டைக் குணமாக்கும் தன்மை உண்டு.
சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் அமுக்கிராங்கிழங்குச் சூரணத்தை வாங்கி, ஒரு கோப்பை பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் ஐந்து நாட்கள் குடித்து வர, ரத்தக்கட்டு கரைந்துவிடும். அமுக்கிராங் கிழங்குச் சூரண மாத்திரைகளும் சாப்பிடலாம்.
கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து அதில் கால் ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, பொடி அரிசிக் கஞ்சியில் போட்டுவேகவைத்துக் குடிக்கலாம். ஆனால், கர்ப்பிணிகளோ, கருத்தரிக்கும் நேரத்தில் உள்ள பெண்களோ கருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்'' என்கிறார் அக்கறையோடு.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes