Monday, October 24, 2011

அனைவரும் இணைய வரவேற்போம்

இஸ்லாம் என்பது மார்க்கம் - இதில்
இணைபவர் எங்கள் வர்க்கம்
இனிய வாழ்வியல் கற்கும் - இங்கு
இல்லை நமக்குள் தர்க்கம்

வணக்கத்துக்குரியன ஏதுமில்லை - அந்த

வல்லோனைத் தவிர யாருமில்லை
வழிகாட்டித் தந்திட நபியவர்கள் - வந்து
வழங்கிய நெறிகளெம் வழியென்போம்


உள்ளத்துத் தூய்மைக்கு இறையச்சம் - உடலில்
உள்ளவைத் தூய்மைக்கு ஒளூச்செய்தும்
உடலோடு உயிரும் ஒன்றித்தொழ - நாளில்
உனக்கான கடமைகள் ஐவேளை

அருந்தாமல் பருகாமல் பொறுத்திருந்து - உணவு

அண்மையில் தொடும்தூரம் அடுத்திருந்தும்
அருமையான நோன்பை அகம்கொண்டு - மனத்தை
அடக்குவர் அல்லாஹ்வின் அடியாரே


எத்தனை வளங்களைப் படைத்துவைத்தான் - இறை
அத்தனை செல்வமும் நமக்களித்தான்
இத்தனைக் கித்தனை என்றெடுத்து
இல்லார்க்கு தானமாய் ஈந்துவப்போம்

மனிதருள் மாணிக்கம் மீட்டெடுத்த - அந்த
புனிதமிகு கஃபாவை நேசிக்கனும்
கனிவான அல்லாஹ்வின் அருள்வேண்டி- நாம்
புனிதப் பயணமொன்று மேற்கொள்ளனும்

வான்மறையை வானோரை நம்பனும் - புவியில்

வாழ்ந்தபின் வருமறுமை அஞ்சனும்
வழியை முடிவென்று மயங்காது - தீர்ப்பு
வரும்நாளே இறுதியென்று நம்பனும்

சகோதரத்துவம் என்பதெங்கள் பண்பு - என்றும்

சாகாவரம் பெற்றதெங்கள் அன்பு
சச்சரவை ஒதுக்கும் எங்கள் பண்பு - இதுவே
சன்மார்க்க சனங்களின் மாண்பு

மன்னருக்கும் மக்களுக்கும் ஓரிறை - பசும்

மரங்களுக்கும் வனங்களுக்கும் ஓரிறை
பறப்பவைக்கும் பிறப்பவைக்கும் ஓரிறை - பாரில்
படைக்கப்பட்ட மொத்ததிற்கும் ஓரிறை

எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஒரு குலம் - இந்த

எளியநல் சித்தாந்தம் எமதே
எல்லாமும் எல்லார்க்கும் நெறிமுறை - இதில்
எந்நாளும் தவறாது தலைமுறை

அடிப்படை அன்பு அதன்மேல் மனிதம் - என

அடுக்கடுக்காய் நற் பண்புகளால்
அமையப்பெற்ற தெம் மார்க்கம் - இதில்
அனைவரும் இணைய வரவேற்போம்!

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes