Wednesday, October 12, 2011

1-நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்

o  கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
o  ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
o  ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
o  ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
o  ஸைனப் பின்த் குஸைமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன்?
ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர் அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே! இது காம உணர்வு மிக்கவராகவல்லவா நபியவர்களை அடையாளம் காட்டுகிறது? -என்பது இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் கேள்வியாகும்.
இந்த விமர்சனம் இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்களால் செய்யப்பட்டாலும் பாரம்பர்ய முஸ்லிம்களில் பலரின் உள்ளங்களில் கூட இந்தச் சந்தேகம் குடிகொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்தச் சந்தேகத்தைப் பகிரங்கமாக அவர்கள் வெளிப்படுத்தாவிடினும் இப்படி ஒரு எண்ணம் அவர்களின் அடி மனதில் குடி கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. புதிதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களினது முதல் கேள்வியும் கூட இது பற்றியதாகவே அமைந்துள்ளது.
இந்த ஐயத்தை அகற்றும் விதமாக அறிஞர் பெருமக்கள் மிகுந்த ஆராய்ச்சி செய்து மறுப்புகள் பல அளித்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமனங்கள் செய்ததற்குப் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளனர். அந்தக் காரணங்களில் பெரும்பாலானவை சந்தேகங்களை நீக்கி தெளிவைத் தருவதற்குப் பதிலாக மேலும் சந்தேகங்களையே அதிகப்படுத்தி விட்டன. அந்த அறிஞர்கள் சொல்லக் கூடிய பொருந்தாத காரணங்களை முதலில் பார்த்து விட்டு உண்மையான காரணங்களைக் காண்போம்.
விதவைகளுக்கு மறுவாழ்வளிப்பதற்கா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இஸ்லாம் பல போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து நபியவர்களுக்குத் துணை நின்ற பல நபித்தோழர்கள் தங்கள் இன்னுயிரை அல்லாஹ்வின் பாதையில் அந்தப் போர்க்களங்களில் அர்ப்பனம் செய்தனர். இதன் காரணமாக விதவைகளாகி விட்ட அந்த நபித்தோழர்களின் மணைவியருக்கு வாழ்வளிக்கவும், விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த விதவைகளை மணம் செய்தனர் என்று சில அறிஞர்கள் காரணம் கூறுகின்றனர்.
இந்தக் காரணம் அறிவுடையோரால் ஏற்க முடியாததாகும். விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டவும், விதவைகளுக்கு வாழ்வளிக்கவும் தான் நபியவர்கள் நான்குக்கு மேற்பட்ட மணைவியரை மணந்தார்கள் என்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் இது அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணற்ற விதவைகளில் பத்துப்பண்ணிரென்டு விதவைகளுக்கு மாத்திரமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வளித்தார்கள். அனைத்து விதவைகளுக்கும் இதன் மூலம் மறுவாழ்வு கிடைத்திருக்கப் போவதில்லை.
விதவைகளுக்கு மறுவாழ்வளிப்பது தான் காரணம் என்றால் இந்தக் காரணம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, யாரெல்லாம் இந்தக் காரணத்தைச் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் அத்தகையவர்களுக்கு நான்கு எனும் வரம்பு தளர்த்தப்பட வேண்டும். ஆனால் ஒரே சமயத்தில் நான்குக்கு மேல் மணம் செய்வதை எக்காலத்துக்கும் என்ன காரணத்திற்காக இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவிர மற்றவர்களுக்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்தக் காரணம் சரியானதன்று. நபியவர்கள் காலத்தில் விதவை மறுமணம் ஆர்வமூட்டப்பட வேண்டிய நிலைமையில் இருக்கவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திற்கு முன்பே அன்றைய அரபுகள் சர்வசாதாரணமாக விதவை மறுமணம் செய்து வந்தனர். இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்த அரபுகளும் விதவை மறுமணம் செய்திருந்தனர். இதற்கு சான்றாக கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் முந்தைய திருமணங்களைக் கூறலாம்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முன்னர் அபூ ஹாலா என்பவரின் மனைவியாக இருந்தார்கள். அவர் மரணித்த பின் அதீக் பின் ஆயித் என்பவரைத் திருமணம் செய்தார்கள். அவரும் மரணமடைந்த பிறகே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் செய்தார்கள். (பார்க்க : அல் இஸாஃபா)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணப்பதற்கு முன்பே விதவையாக இருந்த கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அதீக் என்பவர் மணந்திருக்கிறார் என்பதை இதிலிருந்து அறியலாம். அன்றைய அரபுலக வரலாறுகளைப் பார்க்கும் போது இந்தியாவில் இருந்தது போல் விதவை மறுமணம் மறுக்கப்பட்டிருக்கவில்லை. ஏராளமானோர் விதவை மறுமணம் செய்திருந்தனர் என்பதை அறியலாம். அந்த நல்ல வழக்கத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அங்கீகரித்தார்கள். இது தான் வரலாற்று உண்மை.
இந்த உண்மைக்கு மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் தான் விதவை மறுமணம் செய்தார்கள் என்பதும், விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டுவதற்காக நிறைய விதவைகளைத் திருமணம் செய்தார்கள் என்பதும் பொருந்தாத காரணங்களாகும்.
நட்பைப் பலப்படுத்துவதற்கா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த உறவை பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில திருமணங்களைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புதல்வி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புதல்வி ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.
இந்தக் காரணமும் பொருந்தாக் காரணமேயாகும். நண்பர்களுடன் உள்ள உறவைப் பலப்படுத்துவதற்காக நான்கு என்ற வரம்பு நீக்கப்பட்டதென்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் வரம்பு நீக்கப்பட்டிருக்க வேண்டும். நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக இது போன்று யார் செய்தாலும் வரவேற்கத்தக்க காரியம் தான் என்று மார்க்கம் சொல்லி இருக்க வேண்டும்.
மேலும் திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே இடைவெளி எதுவுமிருக்கவில்லை. இந்தத் திருமணங்கள் நடந்திருந்தாலும், நடக்காதிருந்தாலும் அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை எதிர்பார்க்காது தங்கள் தலைவராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.
இந்தக் காரணம் சரியென வைத்துக் கொண்டாலும் ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தி வருமேயன்றி அனைத்து திருமணங்களுக்கும் இது பொருந்தி வராது என்பதால் இந்தக் காரணத்தையும் ஏற்க இயலாது.
எதிர்ப்பை மழுங்கச் செய்வதற்கா?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைச் சுற்றிலும் பலம் பொருந்திய கோத்திரத்தினரை - அண்டை நாட்டு தலைவர்களை எதிரிகளாகப் பெற்றிருந்தார்கள். அவர்களது எதிர்ப்பின் வேகத்தைக் குன்றச் செய்வதற்காக அவர்களின் கோத்திரத்தில் திருமணம் செய்து அதன் வேகத்தைக் குறைத்தனர் என்பர் இன்னும் சிலர்.
இதுவும் பொருந்தாத காரணமேயாகும். ஏனெனில் இது போல் திருமணம் நடந்த பின் ஒரு சில கோத்திரத்தில் எதிர்ப்பு வேகம் குறைந்திருந்தாலும், மற்றும் சிலருடைய எதிர்ப்பு வேகம் அதிகரித்திருந்தது.
அபூ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணம் முடித்திருந்தும் பல்லாண்டுகள் நபியவர்களின் எதிரியாகவே அவர் திகழ்ந்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக படை எடுத்து வந்து யுத்தங்கள் செய்தார். எனவே இந்தக் காரணமும் சரியானதல்ல.
நாட்டுத் தலைவர் என்ற முறையில் பகைமையைக் குறைத்துக் கொள்வதற்காக மனைவியர் எண்ணிக்கையில் விதிவிலக்கு உண்டென்றால், இஸ்லாமிய ஆட்சித் தலைவராக வரும் தலைவர்கள் அனைவருக்கும் மட்டுமாவது இதே காரணத்துக்காக நான்குக்கு மேல் மணமுடிக்க அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி அனுமதி மார்க்கத்தில் வழங்கப்படவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்குக்கு மேல் மணம் செய்து கொண்டிருப்பதற்குக் கூறப்படும் இது போன்ற காரணங்கள் ஏற்க இயலாதவையாகும். எளிதில் எவராலும் மறுத்துரைக்கத் தக்கவைகளாகும்.
காமவெறி தான் காரணமா?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல பெண்களை மணந்ததற்கு இவை காரணமல்லவென்றால் உண்மையான காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல பெண்களை மணந்ததற்கு மிதமிஞ்சிய இச்சை உணர்வே காரணம் என்ற பிரச்சாரம் எவ்வளவு தவறானது என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.
ஒரு ஆண் மகனுக்கு அவனது இளமைப் பருவத்தில் தான் பெண்களின் பால் அதிக நாட்டம் இருக்கும். பெண்களை அனுபவிப்பதற்கான வலிமையும் இளமைப் பருவத்தில் தான் மிகுதியாக இருக்கும். உலகத்து இன்பங்களை - குறிப்பாக உடலுறவு மூலம் கிடைக்கும் இன்பத்தை - அனுபவிக்க வேண்டும் என்ற வெறி மேலோங்கி நிற்பதும் அந்தப் பருவத்தில் தான்.
வயதான காலத்தில் கூட சிலர் இதில் இளைஞர்களை விட அதிக நாட்டம் கொள்கிறார்களே என்று சிலருக்குத் தோன்றலாம். இது உண்மை தான்,எனினும் முதிய வயதில் பெண்களை அதிகம் நாடுபவர்கள், அவர்களின் இளமைக் காலத்தில் அதை விடவும் அதிகம் நாடியிருப்பார்கள். அவரவர்களின் இளமைப் பருவத்துடன் அவரவர்களின் முதுமைப் பருவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இளமைப் பருவம் தான் அந்த இன்பத்தை அனுபவிக்க ஏற்ற பருவமாகும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது. பெண்களுடன் தகாத முறையில் சல்லாபம் செய்வது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் அவர்கள் மட்டும் - அவர்கள் மட்டுமே - இந்த அற்புத வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார்கள்.
அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று பிரகடனம் செய்த போது முதல் ஆதாரமாக தமது அப்பழுக்கற்ற நாற்பதாண்டு கால தூய வாழ்வைத் தான் அவர்கள் முன்வைத்தார்கள்.
எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் "நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது'' என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.
தாம் இறைத் தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.
இதை முன்வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.
''அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!'' (அல்குர்ஆன் 10:16 )
தம்மை இறைத் தூதர் என்று வாதிட்ட நாற்பதாம் வயது வரை அவர்கள் பெண்கள் விஷயம் உட்பட அனைத்திலும் குறை சொல்ல முடியாத வாழ்க்கை வாழ்ந்துள்ளதில் இருந்து அவர்கள் காமவெறி காரணமாகப் பல திருமணங்களைச் செய்தார்கள் எனக் கூறுவது அடிப்படை அற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பிற்காலத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்திட வேண்டும் என்கிற அளவுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயம் அவர்களை வெறுத்தது. பல்வேறு இழிந்த பட்டங்களைச் சூட்டி அவர்களை இழிவு படுத்த முனைந்த அந்தக் கூட்டம், இவ்வளவு வெறுப்புக்குரியவராக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆகிவிட்ட பின்னரும் கூட நபியவர்களின் கடந்த கால ஒழுக்க வாழ்வு பற்றி விமர்சித்ததில்லை.
கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடைக் கண்ணால் பார்த்தார்கள் என்ற அளவாவது அவர்களால் கூற முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. எதிரிகளாலும் விமர்சிக்க முடியாத பரிசுத்த வாழ்வு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடையது.
தாய், தந்தையின்றி வளரும் குழந்தைகள் தறுதலைகளாகத் திகழ்வது தான் இயல்பபு. தாய், தந்தையின்றி வளர்ந்த நபியவர்களுக்கு கெட்டுப் போவதற்க்கான எல்லா வசதியும் இருந்தது. அன்றைய சூழ்நிலை கெட்டுப் போவதற்கான எல்லா வாசல்களையும் திறந்து விட்டு வாய்ப்புக்களைத் தாராளமாக வழங்கியிருந்தது. இந்த நிலையிலும் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காம இச்சை மிகுந்தவர்களாக இருந்தார்கள் என்ற விமர்சனத்தை இது பொய்யாக்கி விடுகின்றது.
தமது இருபத்தைந்தாம் வயதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து கொண்ட முதல் திருமணம் கூட அவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்ததில்லை என்பதை உணர்த்தும்.
இருபத்தைந்து வயதில் ஆணழகராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பருவத்தில் எவரும் ஆசைப் படக்கூடிய கட்டழகுக் கண்ணியை மணக்கவில்லை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு நபியவர்களை விட பதினைந்து வயது அதிகமாகிப் போன நாற்பது வயது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் செய்து கொள்கிறார்கள்.
தவறான வழியில் சென்று விடாமல் இருக்க ஒரு மணைவி தேவை என்ற சாதாரண நோக்கம் தான் அவர்களுக்கு இருந்ததே அன்றி இளமை, அழகு, கண்ணித் தன்மை எல்லாம் நிறைந்திருக்கக் கூடிய அதிகத் தகுதியுள்ள மணைவி வேண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்களின் நோக்கம் விரிந்திருக்கவில்லை. இந்தப் பருவத்தில் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விடவும் குறைந்த அளவையே அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் முதல் திருமணமே சான்றாக உள்ளது.
இல்லற வாழ்வுக்குக் கண்ணியரை விட விதவைகள் தான் அதிகம் பொருத்தமானவர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எண்ணி இருக்கலாமோ என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் ஒரு இளைஞன் கண்ணியரை மணப்பதே சிறந்தது என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு என்ற இளைஞனிடம் நீ திருமணம் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கிறார்கள். அவர் ஆம்! என்றார். கண்ணியா? விதவையா? என்று நபியவர்கள் கேட்டார்கள். அவர் விதவை தான் என்று பதிலளிக்கிறார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ ஒரு கண்ணியை மணந்திருக்கக் கூடாதா? அவளுடன் நீ விளையாடவும் உன்னுடன் அவள் விளையாடவும்,அவளுடன் நீ மகிழ்ச்சியாக இருக்கவும்,உண்ணுடன் அவள் மகிழ்ச்சியாக இருக்கவும் கண்ணிப் பெண்ணே ஏற்றவள் என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 2097, 2309, 5247)
ஒரு இளைஞன் தன் காம உணர்வைத் தணித்துக் கொள்ள அவனுக்கு ஈடு கொடுத்து முழு அளவில் திருப்திப்படுத்த கண்ணிப் பெண்ணே தகுதியானவள் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தும் இந்த அதிகபட்சத் தகுதியைப் பிறருக்கு சிபாரிசு செய்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்காக அதை விரும்பவில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய இருபத்தைந்தாவது வயது முதல் ஐம்பதாவது வயது வரை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா (40 முதல் 65 வயது வரை) எனும் விதவையுடன் மாத்திரமே வாழ்ந்தார்கள். வேறு எவரையும் மணக்கவில்லை. இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள கால கட்டம் தான் ஆண்களின் காம உணர்வு மேலோங்கி நிற்கும் காலம். அதன் பின் படிப்படியாக அந்த உணர்வு குறையத் தொடங்கி விடும்.
நன்றாக அனுபவிக்க வேண்டிய அந்தப் பருவத்தில் ஒரேயொரு மணைவியுடன் விதவையுடன் - தம்மை விட பதினைந்து வயது மூத்த விதவையுடன் – மட்டும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பிற்காலத்தில் செய்து கொண்ட திருமணங்களுக்கு காம உணர்வு காரணமே இல்லை என்பது இதிலிருந்தும் தெளிவாகின்றது.
இன்னொரு கோணத்திலும் நாம் இதைச் சிந்திக்க வேண்டும். இல்லறத்தில் ஈடுபடுவதற்கு பெண்ணுக்கு முழு ஈடுபாடு இல்லாத போது ஆண் மட்டும் தயாரானால் அந்த உறவு முழுமையானதாக அமையாது. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமது நாற்பதாம் வயது முதல் அவர்கள் மரணமடைந்து அறுபத்தைந்தாம் வயது வரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். நாற்பதாம் வயது முதலே உடலுறவில் உள்ள ஆர்வம் படிப்படியாகக் குறைந்து, ஐம்பது, ஐம்பத்தைந்தாம் வயதில் அதை அறவே விரும்பாத நிலையைப் பெண்கள் அடைந்து விடுவார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயதோ இல்லறத்தை பெரிதும் விரும்பக் கூடிய வயது. அவர்களின் மணைவியின் வயதோ அதை அவ்வளவு விரும்ப முடியாத வயது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளமை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் நிலையில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்வதென்றால் பெரும்பாலான பெண்கள் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரை இல்லற வாழ்வை அறவே விரும்ப மாட்டார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரையிலான பத்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டிருக்க முடியுமா? என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிதமிஞ்சிய இச்சை உணர்வு இருந்தது உண்மையாக இருந்தால், தம் மணைவி இல்லற சுகம் தருவதற்கான தகுதியை இழந்த பின்னும் அவர்களுடன் மட்டுமே பெயரளவுக்கு எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்திருக்க முடியும்? இல்லற சுகத்தை நாடக்கூடிய வயதில் அது கிடைக்காவிட்டால் விரக்தி ஏற்பட்டு இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்காதா? குறைந்த பட்சம் கதீஜாவுடன் வாழ்ந்த கடைசி பத்தாண்டுகளிலாவது இந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காதா? அப்படியெல்லாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எண்ணமே வரவில்லை. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணிக்கும் வரை மறுமணம் பற்றிய சிந்தனை எதுவுமின்றி தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அன்றைய அரபுகள் சர்வ சாதாரணமாகப் பத்து முதல் இருபது மணைவியர் வரை மணந்து கொண்டிருந்தனர். அன்றைய காலத்து ஆண்களோ, பெண்களோ எவருமே பலதார மணத்தைத் தவறான ஒன்றாகக் கருதியதில்லை. இந்த நிலையில் நபியவர்கள் மற்றொரு திருமணம் செய்திருந்தால் எவருமே அதை ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லொழுக்கம், நேர்மை, நற்குணம், அதிசயிக்க வைக்கும் பேரழகு, இளமை இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்த அன்றைய மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெண் கொடுக்கவும் மறுத்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாய்ப்பு இருந்தும், நபியவர்கள் தனது ஐம்பதாம் வயது வரை - கதீஜா ரளியல்லாஹு அன்ஹா மரணிக்கும் வரை – இன்னொரு திருமணமே செய்யவில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட காலத்தை விட அவ்வாறு அறிவிக்காத நாற்பது வயது வரையிலான வாழ்க்கை தான் பல திருமணங்கள் செய்வதற்கு வசதியானது. தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்ளாத காலத்தில் அவர்களின் செயலை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டார்கள். ஆனால் இறைத்தூதர் என்று தம்மைப் பிரகடனப்படுத்திய காலத்து அவர்களின் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும். எனவே காம உணர்வுக்காக பல திருமணம் செய்வது அவர்களின் நோக்கமாக இருந்தால் நாற்பது வயது அவர்கள் பல மனைவியருடன் வாழ்வதை தேர்வு செய்திருப்பார்கள். ஆனாலும் தமது ஐம்பது வயது வரை அறுபத்து வயதுப் பெண்ணுடன் மட்டுமே வாழ்ந்தார்கள் என்பதே அனைத்து விமர்சனங்களுக்கும் தக்க மறுப்பாக அமைந்துள்ளது.
இவ்வளவு வாய்ப்புக்கள் அமைந்திருந்தும் ஒரு வயோதிகப் பெண்ணுடன் மட்டுமே அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விட குறைந்த அளவு தான் காம உணர்வுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கிறது.
மறுமணம் செய்யாவிட்டாலும், தமக்குப் பூரண சுகம் தர முடியாமல் மணைவி அமைந்தால் குறைந்த பட்சம் அந்த மனைவியின் மேல் வெறுப்பாவது ஏற்பட்டிருக்கும். அவர்களின் தாம்பத்திய வாழ்வில் பூசலும், பிணக்குகளும் ஏற்பட்டிருக்கும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் அந்த வெறியைத் தனித்துக் கொள்ள முடியாத போது தாங்கிக் கொள்ள முடியாத ஆத்திரமும், வெறுப்பும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வு நரக வாழ்வாகத் தோன்றியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் அந்தக் காலகட்டத்தில் ஏற்படவே இல்லை.
காம உணர்வு மேலோங்கிய ஒருவர் தனக்கென ஒரு மனைவி இருக்கும் போது பல நாட்கள் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகையில் போய் தனியாக தவம் இருப்பாரா? நாற்பதாம் வயதில் அவர்கள் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்த்தும் அவர்கள் காம உணர்வில் மிஞ்சியவர்களாக இருக்கவில்லை என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.
உடலுறவுக்கும் அப்பாற்பட்ட உளப்பூர்வமான நெருக்கம் தான் அவர்களிடையே இருந்து வந்தது. ஹிரா மலைக் குகையில் தனித்து இருந்து சிந்தித்துக் கொண்டிருந்த காலங்களில், 55 வயதை அடைந்து விட்ட ஹதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களுக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்க நடந்து போய்க் கொடுப்பார்கள். அவர்களுக்கு இருந்த வசதிக்கு தமது பணியாளர்கள் மூலமே அதைக் கொடுத்து விட்டு இருக்க முடியும். அவ்வாறு இருந்தும் தாமே எடுத்துச் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உபசரிப்பார்கள் என்றால் அவர்களுக்கிடையே இருந்த நேசம், உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்று கூற இயலுமா?
தமக்கு இறைவனிடமிருந்து இறைச் செய்தி வந்ததாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது, முஹம்மதுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அரபு உலகமே எள்ளி நகையாடிய போது, எனக்குப் பயமாக இருக்கிறது; என்னைப் போர்த்துங்கள் என்று நடுங்கினார்கள். அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் உங்களுக்கு ஒரு குறைவும் வராது. நீங்கள் அநாதைகளை ஆதரிக்கிறீர்கள், ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள். அடிமைகளை விடுதலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றும் நேராது. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்றெல்லாம் ஆறுதல் கூறி அன்று வாழ்ந்த மக்களில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியத்தையும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே பெற்றார்கள்.
நபியவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் அதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தால் அதற்கு ஈடு கொடுக்க முடியாத கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு கூறியிருக்கவே முடியாது. உலகம் பைத்தியக்காரர் என்று பட்டம் சூட்டுவதற்கு முன் முதலில் கதீஜாவே அந்தப் பட்டத்தைச் சூட்டியிருப்பார்கள்.
காம வெறிக்கெல்லாம் அப்பாற்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தவ வாழ்வை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கண்கூடாகக் கண்டதால் தான் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா இறைத் தூதர் என்று முதலில் நம்பும் பெருமையைப் பெற்றார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் அந்த நோக்கம் பிரதானமானதாக இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நபியவர்கள் தவம் செய்யச் சென்ற காலங்களில் அதைத் தடுத்திருப்பார்கள். அவ்வாறெல்லாம் செய்யாது அந்தத் தவ வாழ்வுக்குப் பக்கபலமாகவே இருந்தார்கள்.
இதன் காரணமாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு இறைச் செய்தி வந்ததாகக் கூறிய போது, அநாதைகளுக்கு உதவுதல், ஏழைகளை அரவணைத்தல், அடிமைகளை விடுவித்தல் போன்ற அருங்குணங்களைக் கூறி ஆறுதல் படுத்துகிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமைந்திருந்த இந்த நற்குணங்களையே கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் காதலித்தார்கள். வெறும் கட்டுடலை அல்ல என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாக உள்ளன.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் தமக்கு உடல் சுகம் தர இயலாத கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்ததற்காக இடிந்து போயிருக்க மாட்டார்கள். இனியாவது மகிழ்ச்சியில் திளைக்கலாமே என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் கதீஜா அவர்கள் மரணித்ததற்காக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலைப் பட்டது போல் வேறு எவரது இழப்புக்காகவும் கவலைப் பட்டதில்லை. அவர்களின் கவலையை வர்ணிக்க வார்த்தை தேடிய சரித்திர ஆசிரியர்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்த ஆண்டை ஆமுல் ஹுஸ்ன் - கவலை ஆண்டு என சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு கவலைப்பட்டிருக்கிறார்கள். கதீஜா அவர்களை நினைவில் வைத்திருந்தது போல் வேறு எவரையும் அவர்கள் நிணைவு கூரவில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணைவியரிலே கண்ணியாக இருந்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூட கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இடத்தை அடைய முடியவில்லை. நானே பொறாமைப்படும் அளவுக்கு எப்போது பார்த்தாலும் கதீஜா அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிணைவு கூர்வார்கள், புகழ்ந்துரைப்பார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே அறிவிக்கிறார்கள். (நூல் புகாரி 3816, 3817, 3818, 5229, 6004)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காம உணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்றால் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அதிகம் நேசித்திருக்க வேண்டும். ஆனால் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் கூட அந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
தமது இல்லத்தில் ஆடு அறுக்கப்படுமானால் கதீஜாவின் தோழியருக்குக் கொடுத்தனுப்புங்கள் என்று கூறுவார்கள். ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று நான் கேட்ட போது கதீஜாவின் தோழியர்களை நானும் விரும்புகிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல் : புகாரி 3816, 3817, 3818, 5229, 6004)
இந்த உலகத்தில் உள்ள பெண்களிலேயே மிகவும் சிறந்தவர்கள் இம்ரானுடைய மகள் மர்யமும், குவைலித் என்பவரின் மகள் கதீஜாவும் ஆவார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டதாக அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: புகாரி 3432)
ஆயிஷாவின் இல்லத்திற்கு ஒரு மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க வந்த போது அவர்களுக்கு மரியாதை செய்து தமது மேலாடையை விரித்து, அதில் அந்த மூதாட்டியை அமரச் செய்தார்கள். அந்த மூதாட்டி திரும்பிச் சென்ற பின் இதன் காரணத்தை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்ட போது, கதீஜாவை அடிக்கடி இந்தப் பெண் சந்திக்க வருவார். அதுவே காரணம் என்றார்கள்.
கதீஜாவைப் புகழ்ந்துரைத்த நபி மொழிகளையெல்லாம் எழுதினால் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால் சுருக்கமாக தந்திருக்கிறோம்.
தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பது வயது வரை நாற்பது முதல் அறுபத்தி ஐந்து வயது கொண்ட கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கத்தை உலகுக்குத் தெளிவாக அறிவிக்கின்றது.
ஐம்பது வயது வரை ஒருவருக்குக் காம வெறி இல்லாமல் அதற்கான அறிகுறி கூட இல்லாமல் இருந்து ஐம்பது வயதைக் கடந்த பின் காம வெறி திடீரென்று ஏற்பட்டு வி;ட்டது என்று எவறேனும் கூறினால் அறிவுடைய - அனுபவமுடைய - யாரும் அதை ஏற்பார்களா?

ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முதல் மணைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம்.
ஸக்ரான் இப்னு அம்ரு அல்அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் மனைவி ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள். தங்களின் கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக இத்தம்பதியினர் அபீஸீனிய்யா நாட்டுக்கு ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) செய்தனர். மக்காவில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு வி;ட்டது என்ற தவறான தகவலின் அடிப்படையில் மக்காவுக்கே இருவரும் திரும்பி வந்தனர். திரும்பியதும் ஸக்ரான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் மணைவி ஸவ்தா அவர்களை விதவையாக விட்டுவிட்டு மரணமடைந்தார்.
இந்த விதவையைத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள். விதவை என்றால் இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவையாகவே அவர்கள் இருந்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்யும் போது ஸவ்தாவின் வயது ஐம்பத்தைந்து. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயது ஐம்பது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காம உணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்று வைத்துக் கொண்டால், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்வு அந்தக் காம உணர்வுக்கு ஈடு கொடுக்கத்தக்க விதமாக அமைந்திருக்காத நிலையில் முதல் திருமணத்தில் தம்முடைய காம உணர்வுக்கு சரியான துணை அமையவில்லை என்ற நிலையில் இந்த இரண்டாம் திருமணத்தின் போதாவது இளம் பெண்ணை விரும்பியிருக்க வேண்டும். காம உணர்வைப் பிரதானமாகக் கொண்டவர் நீண்டகாலம் அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டவர் இளம் வயதுப் பெண்ணைத் தான் தேர்வு செய்வார்.
இவ்வாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்வு செய்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் தடை ஏதும் இருக்கவில்லை. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் திரண்ட செல்வங்களுக்கு ஒரே வாரிசாக அவர்கள் இருந்ததால் பணத்தாசையைக் காட்டியாவது இளம் பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கியிருக்க முடியும். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் இரண்டாவது மணைவியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது தம்மை விட ஐந்து வயது அதிகமான இல்வாழ்வுக்கான தகுதியை இழக்கும் நிலையில் இருந்த விதவையான ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தான். நிச்சயமாக காம உணர்வு இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்பது இதிலிருந்தும் தெளிவாகும்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்த பின் அவர்கள் மூலம் பிறந்த தமது பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற காரணம் தான் இதற்கு இருக்க முடியும்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
இதன் பிறகு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே. அன்றைக்குப் பால்ய விவாகம் சர்வ சாதாரணமாக இருந்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறகு இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டு விட்டது. பார்க்க;
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மாத்திரமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணைவியரில் கன்னியாக இருந்தவர்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்ததற்குக் கூட காம வெறியைக் காரணமாகக் கூற முடியாத அளவுக்கு நியாயங்கள் உள்ளன.
காம வெறிக்காக திருமணம் செய்பவர்கள் அப்போதைக்கு காம உணர்வைத் தணித்துக் கொள்ள தகுதியான ஒருத்தியைத் தான் மணமுடிப்பார்கள். உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட காரியங்கள் யாவுமே அப்போதே அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தன்மை வாய்ந்தவை தான்.
ஒருவனுக்குக் காம உணர்வு மேலோங்கி பெண்களை அனுபவிக்கும் எண்ணம் வந்து விட்டால் உடனேயே அந்த உணர்வைத் தணித்துக் கொள்ளத் தக்க பெண்களைத் தான் நாடுவானேயன்றி ஐந்து வருடங்களுக்குப் பின் பருவமடையக் கூடியவளை மணக்க மாட்டான். அவ்வாறு எவரேனும் மணந்தால் அதற்குக் காம உணர்வு அல்லாத வேறு ஏதோ பின்னணி இருக்கும். எல்லா உணர்வுகளின் நிலையும் இது தான்.
இப்போது ஒருவனுக்குப் பசித்தால் இப்போதே அதற்குரிய உணவைத் தேடுவானே அன்றி, இப்போதைய பசிக்கு மூன்று நாட்கள் கழித்துப் பழுக்கக் கூடிய காய்களைத் தேட மாட்டான். முதல் மணைவியுடனும் கடைசிப் பத்தாண்டுகளாக இல்லற வாழ்வு கிடைக்காத நிலை. இரண்டாம் மணைவியும் அதற்குரிய தகுதியை இழந்துவிட்ட முதிர் விதவை.
இந்த நிலையில் பதின்மூன்று ஆண்டு காலம் இல்வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்த ஒருவர் - காம வெறி மேலோங்கி நிற்கும் ஒருவர் – அடுத்து தேர்ந்தெடுக்கும் மனைவி உடனே அனுபவிக்க ஏற்றவளாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்.
ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நிலையை அடைந்திருந்தும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மூன்றாவதாக மண்ம் புரிந்த போது ஆயிஷா அவர்களின் வயது வெறும் ஆறு மட்டுமே! இல்லறத்துக்குத் தகுதியில்லாத அவர்களை பெயரளவுக்குத் தான் திருமணம் செய்கிறார்கள்.
இத்திருமணம் நடந்த பின் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தனது தந்தை வீட்டில் தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா உடன் இல்லறம் நடத்தவில்லை. மக்காவை விட்டு நாடு துறந்து மதீனா சென்ற பின்பு தான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பருவ வயதை அடைந்தார்கள். அதன் பின்னர் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்கு மனைவியாக அனுப்பப்பட்டார்கள்.
எனவே இத்திருமணத்திற்கு காம வெறியை காரணமாகக் கூற இது தடையாக நிற்கிறது.
உலகமெல்லாம் நபியவர்களைப் பொய்யர் எனக் கூறிய போது உண்மையாளர் என்று ஏற்றவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தை அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மக்காவில் வசிக்க முடியாத அளவுக்கு நிலைமை முற்றிய போது அவர்களைக் கொலை செய்ய திட்டம் தீட்டிய போது யாருக்கும் தெரியாமல் மதீனாவுக்கு புறப்பட்டார்கள். உயிரைப் பணயம் வைத்து செய்த இந்தப் பயணத்தில் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குத் துணையாக வந்தனர். இந்த சமுதாயத்திலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர் நேசித்த அளவுக்கு வேறு எவரும் நேசிக்க முடியாது என்ற அளவுக்கு நபியவர்களுக்கு நெருக்கமானவர்.
இந்த நேசத்துடன் நெருக்கமான சொந்தமும் ஏற்பட வேண்டும் என்ற காரணம் இருந்தால் மட்டுமே பருவமடையாத ஆயிஷாவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனந்திருக்க முடியும். இதனால் தான் அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனமகிழ்வுடன் தம் மகளைத் திருமணம் செய்விக்கிறார்கள். மற்றவர்களை விட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் நான்குக்கு மேல் மணம் முடிக்க சலுகை வழங்கப்பட்டதற்கு இதைக் காரணமாக்க் கூற முடியாது என்றாலும், பிரத்தியேகமாக ஆயிஷாவைத் தேர்வு செய்ததற்கு நிச்சயமாக இதைக் காரணமாகக் கூற இயலும். நான்குக்கு மேல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்ததற்குரிய காரணத்தை நாம் பின்னர் விளக்கும் போது அது இந்தத் திருமணத்திற்கும் பொருந்தும்.
மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளமைக் காலத்திலும், கதீஜாவை மணந்த இறுதிக் காலத்திலும், ஸவ்தாவை மணந்த காலத்திலும் பொங்கியெழாத காம வெறி அவர்களின் ஐம்பத்தி மூன்றாம் வயதில் திடீரென பொங்கி எழ முடியுமா?
இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று திருமணங்கள் செய்து விட்டிருந்தாலும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா மரணமடைந்து விட்டதால் இரண்டு மணைவியருடன் மட்டுமே வாழ்ந்தார்கள். இந்த நிலைமை நபியவர்களின் ஐம்பத்தி ஆறாவது வயது வரை நீடித்தது.
இரண்டு மனைவியருடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவது கூட சரியாக இருக்காது. ஏனெனில் ஆயிஷாவுடன் மதீனா சென்ற பிறகு தான் வாழ்ந்தார்கள். மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் கால கட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.
அதாவது ஐம்பது வயது நிரம்பிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐம்பத்தைந்து வயதுடைய முதிய விதவையான ஸவ்தாவுடனும், இல்வாழ்வுக்குரிய தகுதியைப் பெற்றிராத சிறுமி ஆயிஷாவுடனும் பெயரளவுக்கு இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஐம்பத்தி ஆறாவது வயது வரை இந்த நிலையே நீடித்தது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களுக்குக் காம உணர்வைக் காரணமாகக் கூறுவோர் இதை இங்கே கவனிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இருபத்தி ஐந்து வயதுடைய கட்டழகு இளைஞன் நாற்பது வயது விதவையைத் திருமணம் செய்து அவளுடனேயே தனது ஐம்பது வயது வரை - அவளுடைய அறுபத்தைந்து வயது வரை- வாழ்ந்தால் அறிவுடைய எவரேனும் இதற்குக் காம உணர்வைக் காரணமாக்க் கூற துணிய மாட்டார்.
அதே மனிதன் தனது ஐம்பதாவது வயதில், ஐம்பத்தைந்து வயது விதவையை மீண்டும் திருமணம் செய்தால் அதற்கும் காம வெறியைக் காரணமாக்க் கூற எந்த அறிவாளியும் முன்வர மாட்டார்.
ஐம்பத்தைந்து வயது பெண்ணுடன் இல்லறம் நடத்துவது சாத்தியமாகாது என்பதை அறிந்த எவறுமே இவ்வாறு கூறத் துணிய மாட்டார்.
அதுவும் திருமணம் செய்யும் நேரத்தில் தான் அந்தப் பெண் ஐம்பத்தி ஐந்து வயதில் இருக்கிறார். அந்தக் கணவர் மரணிக்கும் காலத்திலோ அப்பெண் அறுபத்தி எட்டு வயதுடையவளாக இருக்கிறார். ஐம்பத்தி ஐந்து முதல் அறுபத்தி எட்டு வயது உள்ள பெண்ணிடம் என்ன காம சுகம் அனுபவித்திட இயலும்?
இதே கட்டத்தில் அந்த மனிதர் ஆறு வயது சிறுமியைப் பெயரளவுக்கு மணமுடித்தால் அதற்கும் காம வெறியை எந்த புத்திசாலியும் காரணம் காட்ட மாட்டார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களில் இது வரை கூறப்பட்ட மூன்று திருமணங்களும் இந்த நிலையில் தான் இருக்கிறது என்பதை களங்கம் சுமத்துவோர் கவணிக்க வேண்டும். நபியவர்களின் நான்காவது திருமணத்தைக் காண்போம்.

ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
ஹிஸ்னு பின் ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப் பங்கெடுத்துக் கொண்டனர். அந்தப் போரில் தமது தியாக முத்திரையைப் பதித்து விட்டு ஹிஸ்னு பின் ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீர மரணம் அடைகிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்தல், தண்ணீர் வழங்குதல் போன்ற பணிகளை இந்தக் கட்டத்திலும் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் செய்யத் தவறவில்லை. இஸ்லாமிய வரலாறு கண்ட வீரப் பெண்மணிகளில் இவர்களுக்குத் தலையாய இடமுண்டு.
கணவரைப் பறி கொடுத்து விட்டு விதவையாகிப் போன ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாவது வயதில் திருமணம் செய்தார்கள். இந்தத் திருமணம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்காவது திருமணம் என்றாலும், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முன்பே மரணித்து விட்டதால் இவர்களையும் சேர்த்து இந்தச் சமயத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மூன்று மனைவியர் தான் இருந்தார்கள்.
ஒரு சமயத்தில் நான்கு பெண்கள் வரை தா மணந்து கொள்ளலாம் என்று அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்த பொதுவான அனுமதியை இந்த சந்தர்ப்பத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடந்து விடவில்லை.
நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யலாம் என்று மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதிக்குரிய நியாயங்களே இத்திருமணங்களுக்கும் பொருந்தும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய தோழர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்த தமது துணிச்சலான நடவடிக்கைகளால் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்த்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமகளாக இந்த ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்தது இத்திருமணத்திற்கு பிரத்தியேக்க் காரணமாக இருக்கலாம்.
இந்தப் பிரத்தியேகக் காரணம் இல்லாவிட்டால் கூட இந்தத் திருமணம் செய்த போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு மனைவிக்கு மேல் கூடாது எனும் வரம்பைக் கடந்து விடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்தாவது திருமனத்தைக் காண்போம்.

ஸைனப் பின்த் குஸைமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். அவர் திடீரென மரணமடைந்த்தால் அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனைவியானார்கள். இவர் பத்ருப் போரில் இந்த மார்க்கத்தை நிலைநாட்டச் செய்வதற்காக பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணமும் அடைந்தார். ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீண்டும் விதவையானார்கள். இதன் பிறகு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரைத் திருமணம் செய்தார்கள். இரண்டாண்டுகள் மட்டுமே அவர்களின் இல்லறம் நடந்தது. அதன் பிறகு நடந்த உஹத் போரில் அப்துல்லாஹ் பினி ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணம் அடைந்தார்கள். ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீண்டும் விதவையானார்கள்.
ஏற்கெனவே மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப் பட்டு, மூன்று முறை விதவையாகி நின்ற ஸைனப் பின்து குஸைமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐந்தாவது மனைவியாக ஏற்கிறார்கள்.
ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு புனித ரமழானில் இவர்களை நபியவர்கள் மணந்தார்கள். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ரபியுல் அவ்வலில் அதாவது எட்டு மாதங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்து விட்டு ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணமடைந்தார்கள். மூன்று கணவர்களுடன் வாழ்ந்து மூன்று முறை விதவையான ஒரு முதிய வயதுப் பெண்ணைத் திருமனம் செய்ததற்கு காம வெறிதான் காரணம் என்று சிந்திக்கும் எவராவது கூற முடியுமா? இதுவரை சொல்லப்பட்ட திருமணங்களில் எதுவுமே காம வெறியைக் காரணமாக்க் கூற முடியாதவாறு தான் அமைந்துள்ளது.
இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐந்து திருமணங்கள் செய்து விட்டாலும், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா முன்னரே மரணித்து விட்டதாலும் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா எட்டு மாதங்களில் மரணித்து விட்ட்தாலும் இப்போது உயிரோடு இருந்தவர்கள் ஸவ்தா, ஆயிஷா, ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹுமா ஆகிய மூவர் மட்டுமே!
இனி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடுத்தடுத்த திருமணங்களைக் காண்போம்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes