பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஈமான் பறிபோகலாமா?
அன்புச் சகோதர சகோதரிகளே! நம்மை படைத்து பரிபாலிக்கும் இறைவன் நம்மை சோதித்துப்பார்ப்பதற்காகவே நன்மைகளையும், தீமைகளையும் உருவாக்கியுள்ளான். உதாரணமாக
நன்மைகளின் மூலம் சோதனைகள்!
நம்மில் சிலர் சிலருடைய வாழ்க்கையில்கு தீமைகளை விட நன்மைகள் அதிகம் நடக்கும் பொருளாதாரத்தில், மனைவி, மக்கள், சொத்து, சுகம் போன்றவற்றில் சீரும் சிறப்பும் பெற்றிருப்பார்கள்! இப்படிப்பட்ட சுகங்களை அனுபவிக்கொண்டு படைத்த ரப்புக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்களா? என்பதற்காக நன்மைகள் கொடுத்து சோதிக்கிறான்!
தீமைகள் மூலம் சோதனைகள்!
நம்மில் சிலர் சிலருக்கு அடிமேல் அடி விழுந்துக்கொண்டே இருக்கும், அதிகமாக பேரிழப்புகள், தொழில் நஷ்டங்கள், மனைவி மக்களின் தவறாக வழிமுறைகளால் குடும்பத்தில் நிம்மதி யின்மை, துக்கம், அழுகை போன்றவை காணப்படும் இப்படிப்பட்ட சோதனைகளை கொடுத்தால் ஒருவன் தனக்கு கீழ்படிகிறானா? அல்லது தன்னுடைய கட்டளைகளுக்கு மாறு செய்கிறானா என்று படைத்த ரப்புல் ஆலமீன் சோதிக்கிறான்!
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)
ஆனால் நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட நன்மைகளை கண்டு நமக்கு இல்லையே என்றும், நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட தீமைகளைக் கண்டு அப்பாடா நாம் தப்பித்தோம் என்றும் வாழ்ந்து வருகிறோம். மேலும் முஸ்லிம்களாகிய நம்மில் சிலர் நன்மையோ தீமையே எப்போது வரும்? எவ்வாறு தடுப்பது? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு மாற்றுமதத்தவர்களின் காலடியில் விழுந்து ஈமானை இழந்துவிடுகிறோம் அவர்கள் கூறுவதை அப்படியே பின்பற்றுகிறோம்! இதோ ஈமானை இழக்கும் காரியங்கள் உங்கள் பார்வைக்கு:
ஜாதகம் கணிப்பது! நாடி சோதிடம் கணிப்பது!
ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தை பிறந்த நாள், நேரம், வினாடி போன்றவற்றை துள்ளியமாக வைத்துக்கொண்டு அதன்மூலம் அந்த குழந்தையின் எதிர்காலம், அதனுடைய தந்தையின் வெற்றி தோல்வி ஆகியன கணிக்கிறார்கள். கேட்டால் குழந்தையின் பிறப்பின் குறிப்பிட்ட வினாடியின்போதுதான் விதி தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள் இது முற்றிலும் பொய் என்பதற்கு ஆதாரம் உள்ளது!
மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி
இந்த நபிமொழியின் மூலம் நமக்கு தெளிவாக புரிவது என்னவென்றால் விதியை குழந்தை பிறக்கும் போது தீர்மாணிக்கப்படுவது கிடையாது மாறாக கருவறைக்குள் இருக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது என்பதே! மேலும் கருவரை யில் எந்த வினாடி விதி நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் என்ன விதி எழுதப்பட்டுள்ளது என்பதும் படைத்த இறைவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை அவ்வாறு இருக்க பிறந்த நொடியை வைத்து எவ்வாறு ஜாதகம் கணிப்பீர்கள்! சில ஜாதக-புரோகிதர்கள் குழந்தை பிறந்த வினாடி வைத்த ஜாதகம் கணிக்கிறார்களே இவர்கள் பொய்யர்கள் என்பது இந்த நபிமொழியின் வாயிலாக தெளிவாக புலப்படவில்லையா! இன்னுமா நீங்கள் இப்படிப்பட்ட மனிதர்களிடம் சென்று ஏமாறவேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கண்கள், காதுகள், நாக்கு, வாய், பற்கள் இருப்பது போன்று கைகளில் ரேகைகள் இருப்பதும் சகஜம்தான் ஆனால் இதில் கூட கணிப்புகள் கணிக்கின்றனர். கைகளில் உள்ள ரேகைகளை பார்த்தால் போதுமாம் அவன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான், அவனுக்கு எத்தனை திருமணங்கள் நடக்கும், அவனது கையில் செல்வம் நிலைக்குமா இல்லை ஓட்டைக் கையா? என்று பார்ப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் கைரேகையில் அதிர்ஷ்டம் கொட்டும் என்பார்கள் அதை பார்த்துவிட்டு வீட்டுக் செல்லும் வழியில் விபத்து நேர்ந்து மரணித்தவர்கள் எத்தனைபேர். அந்த விபத்தில் கைகளை இழந்தவர்கள் எத்தனை பேர் கைகள் அறுபட்டவர்களுக்கு எதிர்காலம் இல்லையா? அல்லது கைரேகைகள் இல்லாததால் நல்ல நேரம், கெட்ட நேரம் முடிந்துவிட்டதா?
13ம் நம்பர் வீடு பேய்வீடு என்பார்கள், வண்டியின் வாகன எண் 8ஆக இருந்தால் கெடுதல் என்று கூறுவார்கள். இவர்களின் கணிப்பினால் வீட்டை காலி செய்தவர்கள் எத்தனைபேர் புது வண்டியை அற்ப விலைக்கு நஷ்டத்தில் விற்றவர்கள் எத்தனைபேர்! அருமைச் சகோதரர்களே! சற்று சிந்தித்துப்பாருங்கள் 13ம் நாளிலோ அல்லது 8ம் நாளிலோ நீங்கள் பிறந்திருந்தால் உடனே தற்கொலை செய்துக் கொள்வீர்களா? அல்லது எண்கணித நிபுணர் தான் இதை செய்வானா? 786 என்ற அவலம் கூட இந்த கூத்துக்களில் அடங்குகிறது என்ன செய்ய நம்முடைய குர்ஆன்-ஹதீஸ்களை விளங்காத மக்கள் கூட படைத்த இறைவனை நம்புவதைவிட இந்த எண்களை அதிகம் நம்புகிறார்களே! (அல்லாஹ் காப்பாத்தனும்)
ஆகாயத்தில் தன் ஜோடியுடன் சுந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் கிளியை பிடித்து அதன் இறக்கைகளை உடைத்து அதை பறக்காதவிதமாக ஊணமாக்கி ஒரு கூண்டில் அடைத்துவிட்டு பின்னர் அதனிடம் சீட்டுக்களை எடுக்க சொல்கிறார்கள் இது முறையா? சிந்தித்துப்பாருங்கள் உங்கள் மனைவியுடன் நீங்கள் சுதந்திரமாக இல்லறத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கும் நேரத்தில் உங்களை பிடித்து உங்கள் கை, கால்களை உடைத்து ஊணமாக்கி கூண்டில் அடைத்துவிட்டு எனக்கு நல்ல நேரம் கூறு என்றால் எப்படி இருக்கும்! அந்த கிளியோ பாவம் பசிக்காக சீட்டை எடுத்து கொடுக்கிறது இல்லையெனில் இறை கிடைக்காது! ஆனால் நம்மில் சிலர் ரசிப்பதற்காக அதனிடம் செல்கிறார்கள்! அல்லாஹ் படைத்த உயிரினத்தை கொடுமை படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754)
பசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
பல்லி சத்தம் போட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் ஆனால் அதே பல்லி தலையில் விழுந்துவிட்டால் அவசகுணமாம்! பல்லி இறையைத் தேடவும் தன் உறவைத் தேடவும் அழைப்பு கொடுப்பது அதன் சப்தத்தால்தானே ஆனால் இந்த பல்லியின் சப்தம் எவ்வாறு சில அறிவாளிகளுக்கு மட்டும் சகுனமாக தென்படுகிறது! பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்த இவர்களுககு பல்லி ஆசிரியராக வந்து தன்னுடைய சப்த சகுணத்தின் பாடம் கற்பித்ததா? என்னய்யா வேடிக்கை இது!
நம் பேசிக்கொண்டிருக்கும் போது தேவாலயத்தில் மணி அடிக்கப்பட்டால் அல்லது செல்போனில் ரிங் ஒலித்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் இப்படியும் ஒரு சில அறிவாளிகள் இருக்கின்றனர் ஆனால் இவர்கள் (மரணித்த) எளவு-வீட்டில் அமர்ந்துக் கொண்டு மரணித்த மனிதனை நோக்கி உயிர்பெற்றுவிடு என்று நினைக்க அந்த நேரத்தில் ஆலயமணி அல்லது செல்போன் ரிங் அடிக்கப்பட்டால் அந்த மரணித்த மனிதன் உயிர்பெற்றுவிடுவானா?
ஒரு பூனை பசியுடன் அங்கும் இங்கும் அலைந்துதிரியும் எலி கிடைக்கவில்லையெனில் தாருமாறாக ஓடும் ஆனால் நம்மவர்களோ பூனை குறுக்கே வந்துவிட்டது போகும் காரியம் நடக்காது என்பார்கள்! சிந்தித்துப்பாருங்கள்! பூனை இறைதேடும் போது நாம் குறுக்கே வந்திருப்போம் நம்மை பார்த்து எலி பயந்து ஓடியிருக்கும் இதனால் பூனையின் உணவு பறிபோயிருக்கும்! பூனைக்கு பேசும் ஆற்றல் இருந்து அது நம்மை பார்த்து அவசகுணம் பிடித்தவனே ஏன்டா நடுவில் வந்தாய் என்று கூறினால் எப்படி இருக்கும்?
கைம்பெண்கள் (கணவன் இளந்தவர்கள்) பாவம கணவனை இழந்து நொந்து நூலாக மாறி அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்யவது பெற்ற பிள்ளை குட்டிகளை எவ்வாறு பராமறிப்பது என்று ஏங்கித்தவிக்கும்! இப்படிப்பட்ட பெண்களுக்கு கருணை காட்டாமல் இவர்கள் நடுவே வந்துவிட்டால் போன காரியம் உருப்படியாகாது என்கிறீர்களே சிந்தித்துப்பாருங்கள் தந்தைய இழந்த எததனை மகன்கள் விடிந்ததும் அவர்களுடைய விதவைத் தாயை பார்க்கிறார்கள் பெற்ற தாய் விதவையானால் சகுணம் இல்லையாம் வீதியில் விதவை போனால் குற்றமாம்!
“மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.
வீடு கட்டுவார்கள் மனையடி சாஸ்திரம், வாஸ்து பார்ப்பார்கள் இறுதியாக அது சரியில்லை, இது சரியில்லை, இது மூலக்குத்தல், இது அந்த கடாட்ஷம் என்று நொண்டிச்சாக்கு கூறி இறுதியாக வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிடுவார்கள். வீட்டின் மேல் மாடியில் கக்கூஸ் இருக்கும் கீழ் வீட்டார்கள் அடிக்கடி மலஜலம் கலிக்க மேல்மாடிக்கு வருவார்கள். சமையல் அறையின் அருகில் கக்கூஸ் இருக்கும் நாற்றம் சமைத்த உணவுக்குள் வந்துவிடும் கேட்டால் இதுதான் வாஸ்து என்பார்கள்! வீட்டுக்கு வெளியே சாக்கடை ஏரியாக ஓடும் அங்கே ஜன்னல் வைத்தால் யோகம் வரும் என்பார்கள் ஆனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு மலேரியா, டெங்கு போன்ற வைரல் நோய்கள்தான் தான் வரும்! வீடு உள்பக்கம் தாழ்வாக உள்ளது மனையடி சாஸ்திரப்படி உயரப்படுத்துகிறோம் என்று கூறி வீட்டிற்குள் 10-15 அடி நீளம் கொண்ட சிறிய திட்டு அமைப்பார்கள் அதில் தடுக்கிவிழுந்து பல் உடைபட்டவர்கள் எத்தனைபேர்? இதற்குப் பெயர்தான் மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து!
ராசியாம் ராசிக்கல் மோதிரமம்! பச்சை மரகதக் கல்லை மோதிரத்தில் வைத்தால் சிலருக்கு யோகம் கொட்டுமாம், கோமேதகம் மற்றும் பவளம் போட்டால் சிலருக்கு லாபம் கொட்டுமாம்! தங்கத்தை போன்று கற்களை விற்க முடியவில்லை உடனே ராசி என்று பெயர் வைத்துவிட்டார்கள். மனிதன் ஒரு உயிர் வாழக்கூடிய படைப்புதானே ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் மனிதனுக்கு நல்ல நேரம் வரும் எனில் குரங்கும் ஒரு உயிரினம் தானே அதற்கு அந்த ராசிக்கல் மோதிரத்ததை போட்டுவிடுங்களேன் ராசியினால் வாழைப் பழமாவது தினமும் கிடைக்கிறதா என்பதை பார்ப்போம்! ராசிக்கல் கடைக்காரர் தன்னுடைய கடையில் 1000 வகைவகையான ராசிக்கற்களை வைத்திருக்கிறார் எனவே கற்களால் ராசி வருகிறது உண்மையானால் ஏன் தன்னுடைய கற்களை பிறருக்கு விற்பனை செய்ய வேண்டும்! விற்காமல் இருந்தாலேயே ராசி கொட்டுமல்லவா? இதுவெல்லாம் பணம் கறைக்கம் நாடகம் சகோதரர்களே நம்பி மோசம் போகாதீர்கள்!
முகத்தில் மச்சம் இருப்பது ஏதாவது இரத்த ஓட்ட குறையினால் வரலாம் அல்லது இயற்கையாக அமையலாம் அதில் கூட கணிக்க ஆரம்பிக்கிறார்கள். மூக்குக்கு மேலே மச்சம் வந்தால் ஒரு கருத்து, கண்ணங்களில் மச்சம் இருந்தால் ஒரு கருத்து! தெருவில் சுற்றித்திரியும் நாய்க்கும் தான் மச்சம் இருக்கிறது அதற்காக அது மனிதனாக மாறிவிடுமா? நாயை பிடித்து மச்சம் பார்த்தால் நாய் கடித்து குதறிவிடும் மனிதனை பிடித்து மச்சம் பார்த்தால் பல்லை இழித்துக்கொண்டு கேட்பான்! நாய்க்கு உள்ள அறிவு கூட கணிக்கும் மனிதனுக்கும் அதை கேட்பவனுக்கும் வருவதில்லை இவர்கள் அறிவாளிகள்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார்.
அவர்கள், ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?’ என்று கேட்க நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’ (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.
நபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (ரலி), ஆதாரம் : புகாரி
உங்களுக்கு ஒரு தீங்கு வந்துவிட்டால் உடனே அதற்காக அல்லாஹ்விடம் துவா கேட்டு நல்லுணர்வு பெறாமல் கேடு கெட்ட மாற்றுமத கலாச்சரங்களை பின்பற்றுகிறீர்களே நீங்கள் ஈமானின் சுவை சுவைப்பது எப்போது!
திருமறை வசனம்முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)
அல்ஹம்துலில்லாஹ்
0 comments:
Post a Comment