Thursday, July 7, 2011

அல்லாஹ்வின் அழகிய பண்புகள்

அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன் அவனே முதலாமவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.  (ஸூரா அல்ஹதீது 57:3)

 பூமிக்குள் பதிகின்ற (வித்து முதலிய)வைகளையும், அதிலிருந்து வெளிப்படும் (மரம், செடி முதலிய) இவைகளையும் வானத்திலிருந்து இறங்குபவைகளையும் அதன் பக்கம் ஏறுகின்றவைகளையும் அவன் நன்கறிவான். (ஸூரா ஸபா 34:2)

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை, அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும், உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும். (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (ஸூரா அல்அன்ஆம் 6:59)
 
அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து – பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.(35:11)

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (ஸூரா அத்தலாக் 65:12)
மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். (ஸூரா அல்கஸஸ் 28:69)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யா அல்லாஹ்! ஏழு வானங்கள், பூமியின் ரப்பே! மகத்தான அர்ஷின் ரப்பே! எங்களது ரப்பே! ஒவ்வொரு வஸ்துவின் ரப்பே! வித்துக்களையும், தானியங்களையும் உடைப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆனை இறக்கியவனே! உன்னிடம், எனது நஃப்ஸின் தீங்கிலிருந்தும், நீ உச்சி முடியை பிடித்துள்ள  ஒவ்வொரு ஊர்ந்து செல்லும் பிராணியின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். நீயே முதலாமவன். உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே முடிவானவன். உனக்கு பின்பு எதுவுமில்லை. நீ வெளிப்படையானவன். உனக்கு மேல் எதுவுமில்லை. நீயே மறைந்தவன். உன்னை விட்டும் (மறைந்தது) எதுவுமில்லை. என் சார்பாக கடன் அனைத்தையும் நிறைவேற்றிவிடு. ஏழ்மையிலிருந்து (இரட்சித்து) என்னை பிறரின் தேவையற்றவனாக ஆக்கிவிடு! (ஸஹீஹ் முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட சான்றுகள் மூலம் தெரிந்துகொள்வதாவது:
1) அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
2) இப்பிரபஞ்சத்திலுள்ள எந்த ஒன்றும் அவனது அறிவிலிருந்து தப்ப முடியாது.
3) வானங்களில் உள்ளதையும் வானங்களுக்குக் கீழ் உள்ளதையும், பூமிக்கு மேல் உள்ளதையும் பூமிக்கு கீழ் உள்ளதையும், வானம் பூமிக்கு இடையில் உள்ளதையும் அவன் பூரணமாக அறிந்தே இருக்கின்றான்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes