இனிய மணவாழ்க்கை அமையப்பெற்றவர்கள் இறையருளுக்குப் பாத்திரமானவர்கள் என்பது உண்மை. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம், ஆயிரம் காலத்து பயிராக, தலைமுறைகளைக் கடந்து செழித்து வளர வேண்டும் எனில் தம்பதியர்களிடையே ஒற்றுமை அவசியம்.
விட்டுக் கொடுத்தலும், சகிப்புத்தன்மையும் இருந்தால் எத்தகைய இடர் வந்தாலும் மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இன்றைய தலைமுறையினர், காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் அவசரமாக முடிவு செய்து எளிதில் பிரிந்து விடுகின்றனர்.
சிறு சிறு கருத்து மோதல்களுக்காக நீதிமன்ற படியேறும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை தவிர்க்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை தெரிந்து கொள்வோம்.
அவை:
சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்,
அனுசரித்துப் போகுதல்,
மற்றவர்களை மதித்து நடத்தல்.
இவற்றை பின்பற்றினால் இல்லறம் நல்லறமாகும்.
சகிப்புத்தன்மை
இன்றைய இளம் தலைமுறையினரிடம் விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
விவகாரத்தை தவிர்க்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குடும்ப நல நீதிமன்றங்களில் எழுதி வைத்துள்ளனர். இதனை அனைத்து தம்பதிகளும் பின்பற்றி வந்தாலே பெரும்பாலான குடும்ப பிரச்சினைகள் வராது. அப்நபடியே தலைதூக்கினாலும் அவை பெரிய அளவில் உருவாகாது.
பொய்யை தவிர்ப்போம்
"ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணம் செய்ய வேண்டும்" என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், திருமணத்திற்கு முன்பு, பெற்றோர்கள் கூறும் பொய்களே, பல தம்பதியரின் பிரிவிற்கு அடிப்படையாக உள்ளது.
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பார்கள். ஆனால் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால் பலரின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் பிரச்சினை மேலும் வலுவடைந்து பிரிவும் அதிகரிக்கிறது. எனவே, பிரச்சினை துவங்கும் போதே அதைப் பற்றி இருவரும் மனம் விட்டுப் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம். எதையும்
அறிவுப்பூர்வமாக ஆராயாமல், மனப்பூர்வமாக ஆராய்ந்தால் நல்ல வழி கிட்டும்.
o ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள். o வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!
o விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.
o கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.
o உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.
o விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.
o ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.
o செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.
இதன்படி நடந்து கொண்டால் யாரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தின் வாசலுக்கு செல்ல வாய்ப்பே இல்லை.
இல்லறவாழ்க்கை இனித்திட மூன்று விஷயங்களை பின்பற்றினால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.
0 comments:
Post a Comment