Thursday, July 7, 2011

சின்னதொரு வலையினிலே

சின்னதொரு வலையினிலே

சிந்தனைகள் சேர்த்துவைத்தேன்
சில்லறையாகச் சில
தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்!

வலைப்பதிவர் வரம் வாங்கி
வக்கணையாய் வலம் வந்தேன்
வேலைநேரம் ஓய்ந்தபின்னர்
வலையினுள்ளே நான்கிடந்தேன்!

காகிதத்தின் முகத்தினிலே
கிறுக்கிவைத்த எண்ணங்களை
காலவோட்ட சுழற்சியிலே
தொலைத்துவிட்டு நின்றவன்...

கல்வெட்டின் தரத்தினிலே
தளம் கிடைக்கப் பதிந்துவைத்தேன்
வண்ணவண்ணப் பூக்களாலும்
வலைப்பூவை அலங்கரித்தேன்!

கவிதையில் கட்டுரையில்
கருத்துகளைச் சொல்லிவைத்தேன்
இலட்சியமும் இனியவையும்
இடுகைகளாய் இயம்பிநின்றேன்!

பின்னூட்ட அன்பர்களால்
புரத ஊட்டம் உண்டேன்
பத்திரிகைப் பரவசம்
ப்ளாக்குகளில் பெற்றேன்!

இணையவலம் இல்லையெனில்
இதயபலம் குறைந்துவிடும்
ஒற்றையென உலகத்திலே
ஒதுங்கியேதான் போவேன்.

இத்தனையும் இருந்தும்
எழுகிறதொரு கேள்வி
இணைய உலகே சொல்:
"நீயி நல்லவனா கெட்டவனா?"

கேள்வி கேட்ட பதிவரை
கேலியாகப் பார்த்து
இணய உலகு இயம்பியசொல்
இதயத்திலே தைத்தது!

"நாயனின் தீர்ப்பு நாளில்
நரகமுண்டு சொர்க்கமுண்டு
நானிலத்தின் காரியத்தில்
நல்லதுண்டு தீயதுண்டு,

நல்ல எண்ணம் கொண்டோர்
நன்மை கொள்வர்; தீமை கொல்வர்
வன்மை உள்ளம் கொண்டோர்
தீதைத் தானே தேர்ந்து கொள்வர்!

நன்மை-தீமை கலந்தியங்கும்
நானிலத்தில் நான்மட்டுமென்ன
விதிவிலக்கா? சொல்லு!
நான் நல்லவனா கெட்டவனா?

தெரியாத உன் வினாவுக்கென்
தெளிவான விடையுண்டு:
தெரியலையேப்பா, எனக்குத்
தெரியலையே!"

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes