Saturday, May 26, 2012

நந்தியா வட்டம் பூ



பூக்களின் மணத்தை நுகராதவர்கள் எவரும் இருக்க முடியாது. வாசனையோடு நோயையும் குணப்படுத்தும் சிறப்பு இந்த பூக்களுக்கு உண்டு. சடங்கு சம்பிரதாயங்களில் பூக்களே முதலிடம் வகிக்கிறது.

பூக்களின் மருத்துவக் குணங்கள் அளப்பரியவை. இந்த மலர்களின் மருத்துவத் தன்மைகளை வைத்து நோய்தீர்க்கும் மலர் மருத்துவம் என்ற மருத்துவ முறை இருந்து வருகிறது.

மலர்களின் மருத்துவக் குணம் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் நந்தியாவட்டப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இது பெருஞ்செடி வகுப்பைச் சேர்ந்தது. பூக்கள் வெண்மையாய் ஒற்றை அல்லது இரட்டையாயிருக்கும். ஒற்றை அடுக்கு பூவே சிறந்தது. இது பாலுள்ள செடியாகும்.

இதன் பூ, வேர், பால் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

இதனை நந்திபத்திரி, நத்தியாவர்த்தம், பட்டிடை, வலம்புரி, சுயோதனன் மாலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

காசம் படலம் கரும்பாவை தோடமெனப்

பேசுவிழி நோய்கடமை பேர்ப்பதன்றி-ஓசை தரு

தந்திபோ லேதெறித்துச் சாருமண்டை நோயகற்றும்

நந்தியா வட்டப்பூ நன்று

(அகத்தியர் குணபாடம்)

நேத்திரி வாயுகமழ் நேத்திரப்புண் வெட்டருகல்

நேத்திரங் பாலசன்னி நீசவினைக் கோத்திரங்கள்

மாளநொருக்குதலால் வாகடர்கைக் கேற்றவச்ர

வாளாஞ் சுயோதனனார் மாலை

(தேரன் வெண்பா)

நந்தியாவட்டப்பூ சித்தமருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகம் பயன் படுகிறது.

கண் நோய்கள் நீங்க

உடலின் முக்கிய உறுப்புகளில் கண்கள் முதலிடம் வகிக்கின்றது.

ஐம்புலன்களில் ஒன்றான கண்களை பேணிக் காப்பது மிகவும் அவசியம். கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. அனைத்து வேலைகளும் கணினி மூலம் செய்யப்படுவதால் கண்களுக்கு அதிக பளு உண்டாகிறது. மேலும் இரவை பகலாக்கும் மின்சார விளக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல வகைகளில் கண்களை பாதிக்கும் மீடியாக்கள் தற்போது பரவி வருகின்றன. இதனாலும் இரவு உறக்கமின்றி வேலை செய்வதாலும் கண் நரம்புகள் சூடாகிவிடுகின்றன.

இதுபோல் ஈரல் பாதிப் படைந்தாலும் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்று பலருக்கு 40 வயதிலேயே வெள்ளெழுத்து என்கின்றனர். மேலும் சிறு குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லாமல் கண்ணாடி அணிந்துள்ளனர். கண் லேசர் அறுவை சிகிச்சைகள் அதிகம் நடைபெறுகின்றன.

இந்த நிலை மாற நந்தியாவட்டப் பூ சிறந்த மருந்தாகும்.

நந்தியாவட்டப் பூவை சாறு எடுத்து அதனை கண்களில் சிறு துளி விட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறு, கண் படலம், கரும்பாவை முதலியன மாறும்.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண் நரம்புகள் பலப்படும்.

காச நோயின் பாதிப்பு குறைய

மனிதனை அழிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்று. காச நோயால் இந்தியாவில் வருடத்திற்கு பல லட்சம் மக்கள் பலியாகின்றனர். இந்த நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபட நந்தியாவட்டப் பூ உதவுகிறது.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை மாலை என இருவேளையும் உண்டு வந்தால் காச நோயால் ஏற்பட்ட களைப்பு, இருமல் நீங்கும். தேகம் வலுப்பெறும். மேலும் உடலுக்கு வனப்பையும் கொடுக்கும்.

மண்டைக் குத்தல் நீங்க

தலை வலிக்காமல் தலையில் குத்துவது போல் சிலருக்கு தோன்றும். பித்த அதிகரிப்பு மற்றும் தலையில் நீர் கோர்த்துக்கொள்ளுதல் போன்றவையே இதற்குக் காரணம்.

இவர்கள் நந்தியாவட்டப் பூவை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் மண்டைக் குத்தல் நீங்கும்.

கண் எரிச்சல் நீங்க

நந்தியாவட்டப் பூவின் சாறுடன் நல்லெண்ணெய் கலந்து கண்களில் விட்டால் கண் எரிச்சல் நீங்குவதுடன் உடல் சூடு தணியும்.

வெட்டுக்காயம் ஆற

நந்தியாவட்டப் பூவை அரைத்து வெட்டுக் காயத்தின் மீது பற்று போட்டால் காயம் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும்.

இத்தகைய நற்பயன் கொண்ட நந்தியாவட்டப் பூவை பயன்படுத்தி நோயிலிருந்து காத்துக் கொள்வோம்

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes