Wednesday, May 23, 2012

காலை உணவு அவசியமா

வரும் போது மலம் கழிக்கலாம்; காசு தந்தால் பின்னிரவிலும் வேலை செய்யலாம்; அழகாய் தெரிவேன் என்றால் அணுசக்தி ரசாயனத்தையும் அள்ளிப்பூசிக் கொள்ளலாம்; ருசியாய் இருக்கும் என்றால் பெயர் தெரியாத வேதிக்கலவையையும் உறிஞ்சி உள்ளம் களிக்கலாம், என்ற மனோபாவம் உச்சி முதல் பாதம் வரை ஒட்டிப்போனதுக்கு இந்த நிலையில்லா அறிவியலும், அதன் நிழலில் நங்கூரமிடும் பெரும் வணிகப்பிடியும்தான் காரணம்.

உலகின் பல வளர்ந்த நாடுகளின் காலை உணவை நிர்ணயிப்பது என்பது ஓரிரு மிகப்பெரிய உணவு நிறுவனங்கள் மட்டுமே!.. “சோள அவலா?..ஓட்ஸ் கஞ்சியா? கோதுமை ரொட்டியா?..கொழுப்பு நீக்கிய பதப்படுத்தப்பட்ட கலவை பாலா?”- எது வேண்டும் உங்களுக்கு? என்ற வணிக முழக்கத்துடன், அந்த அண்ணன்மார் கம்பெனிகள் இப்போது இந்திய காலை உணவையும் கபளீகரம் செய்ய துவங்கி விட்டன. 100 கோடி மக்களின் காலை உணவைக் குறி வைத்து இயங்கும் அந்த சந்தையில் சத்தமில்லாமல் நசுங்கிப்போய் கொண்டிருப்பது நம்ம ஊர் காலை உணவு!

இரவு சந்திரனின் ஆட்சிக்காலம்; பகல் சூரியனுக்கானது. இரவில் மொத்த பிரபஞ்சமும் குளிர்ச்சியடைவதும், பகல் சூரியனின் வெம்மையால், போர்த்தப்பட்டிருப்பதும், சித்தம், ஆயுர்வேதம், சீன மருத்துவம் இன்னும் ஏனைய பல பாரம்பரிய மருத்துவ முறைகளின் அன்றைய அறிவியல் புரிதல்!  காலையின் குதூகலம் குறித்துப் பாடாத கவிஞன் இல்லை. ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’- என்ற புத்துணர்வு கண் விழிக்கும் சமயம், மனதுக்குள் பொங்கியதென்றால், அன்று உங்கள் வாழ்வின் மற்றொரு மிகச் சிறந்த தினம்.

 குளிர்ந்த இரவில், வெம்மையாய் உடல் தூங்கிப் பின் விழித்த உடன் மெல்ல மெல்ல பிரபஞ்சத்தின் வெம்மைக்கு ஏற்றாற் போல் உடல் குளிர, காலை குளியலும் காலை உணவும் வழிநடத்த வேண்டும்.  “காலங்கார்த்தாலே சுரீர் என பில்டர் காபியோ அல்லது சேட்டனின் மசாலா தேனீரோ சாப்பிட்டால் தான் அந்த நாள் இனிக்கும். இன்னும் கூடுதலாய் கக்கூஸில் இருந்து கொண்டு, அந்த மணத்துடன் புகைத்தால் தான் மலமே கழிக்க முடியும், என்ற பிடிவாதம் வந்ததுதான் நம் ஆரோக்கியத்தின் அழிவின் ஆரம்பம்.

காலை உணவும் நம்மைக் குளிர்ப்பிக்க வேண்டும். காலையில் சாப்பாட்டில் கோதுமையில் செய்யும் சப்பாத்தி, கோதுமை ரவா உப்புமா, கோழிக்கறி, கொள்ளுப்பயறு பொதுவாக தவிர்க்கப்பட வேண்டியவை. அதே சமயம் குளிர் காலத்தில், பனிக்காலத்தில் காலை நேரத்தில் இவைகளுக்குச் சிறப்பு அனுமதி உண்டு.

காலை உணவில்  “கோல்டு மெடல் கொடுக்க வேண்டும் என்றால், அது வெண்பொங்கலுக்குத் தான். குளிர்ச்சியான பாசிப்பருப்பும் அரிசியும் சேர்ந்த பொங்கல் குளிர்ச்சியுடன் உடல் ஊட்டம் தருவது. சிறு குழந்தைகளின் உடல் எடை உயர, நோய் எதிர்ப்பு ஆற்றல் கூட்ட, வெண்பொங்கலுக்கு இணை ஏதும் இல்லை. கொஞ்சம் மிளகு, கறிவேப்பிலை, பசுநெய் சேர்த்து பொங்க வேண்டிய வெண்பொங்கலை வரகரிசியில் செய்தால் அது கூடுதல் சிறப்பு. வரகு, சோளம், ராகியெல்லாம் நாம் மறந்துவிட்ட காலை உணவுக்கான பொக்கிஷங்கள். சிறுசோளம்-உளுந்து சேர்த்த தோசை, ராகி இட்லி, தினை அரிசி உப்புமா என செய்து கொடுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, தேசத்தையும் உழவையும் சேர்த்து பாதுகாப்பீர்கள். குழந்தைகளுக்கு காலை உணவில் புரதத்திற்கு முக்கிய இடம் வேண்டும். சத்துமாவுக் கஞ்சி, முளைகட்டிய பாசிபயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்(இஞ்சி சேர்த்து) அவசியம் அடிக்கடி கொடுக்க வேண்டும்.

பழங்கள் காலை சிற்றுண்டியின் வரப்பிரசாதம். உடலைக் குளிர்ப்பித்து, உரமாக்கும் நல்ல பல தாவர கூறுகளை, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை காலை நேரத்திற்கேற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11 மணி அளவில் சாப்பிடலாம். காலை உணவாக பழங்கள் சாப்பிடுவதில் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும்(low glycemic smart carbohydrates) உடல் உறுதியும் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும் பழ உணவுப்பழக்கம் உதவும். சர்க்கரை நோயாளிகள் எனில், குறைவான பழத்துண்டுகளுடன், ராகி உப்புமா, ஒட்ஸ் உப்புமா, கோதுமை ரவை உப்புமா( காய்கறிகளுடன் கிச்சடி போல் சமைத்தது) சாப்பிடுவது நல்லது.

ஓட்ஸ்-க்கு பெரிய உசத்தி ஒய்யாரம் நிறுவப்படுகிறது. அது பணக்கார அப்பாவுக்கு பிறந்த புது ஹீரோவுக்கு, அவர்களே வைக்கப்படும் கட் அவுட் மாதிரிதான். ஓட்ஸை விட மிகச்சிறப்பான  நம்நாட்டு தானியங்கள் நம்மிடையே ஏராளம். பாவம் அவை பிறந்த வீடு ஏழை நாடு என்பதால் புகுந்த வீட்டில் மரியாதை இல்லை; ‘அத்திப்பூக்கள்’- சீரியலை சுமந்து வர கேபிள் டிவியில் அதற்கு இடம் இல்லை;   அலங்கரிக்காத அந்த சிறு தானியங்களில் கஞ்சி, உப்புமா, கிச்சடி இட்லி என சமைத்து சாப்பிடுங்கள். ஓட்ஸுக்கு ஒரு துளியும் குறைவில்லாதவை அவை.

 “காலை உணவா..? நான் டயட்டிங்கில் இருக்கிரேன்.. “கரீனா கபூர் மாதிரி  ‘ஸீரோ ஸைசில் இடுப்பு வேண்டும் எனக்கு!”, என பீரோ சைஸில் இருக்கும் உங்க பிரியாமனவர் சொன்னால் பதட்டப்பட வேண்டாம். காலை உணவு சாப்பிடுவது மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும் என பல வெள்ளைக்கார சித்தப்பாக்கள் பலத்த குரலில் சொல்ல ஆரம்பித்துவிட்ட்தால், அட! அவுகளே சொல்லிட்டாங்க..அப்புறம் என்ன? என நம்ம ஊர்  ‘மேதாவிகள் கேட்டுப்பார்கள். ஆம்! காலை சிற்றுண்டி உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று  journal of american nutrition சமீபத்தில் 12,000 நபர்களில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை தவிர்க்கின்றன. அதைப்பார்த்து நம் தாய்மார்களும் என்ன தான் செய்வது என தவிக்கின்றனர். பெற்றோரும் பிள்ளையும் 6 மணிக்கு எழும் பழக்கத்தை முதலில் கொண்டுவாருங்கள். கொஞ்சமாய் விளையாட்டு, பரபரப்பில் உங்களை கோமாளியாக்கி நிறைய ஜோக் என காலையை குதூகலமாக்கி இட்லியை ஊட்டுங்கள். இரவில் அருகில் படுத்து உற்ங்குகையில் சோளக்கொல்லையை ஒலிம்பிக் டார்ச் போல் நீங்கள் சுற்றி வந்த்தை சொல்லி சிரியுங்கள். காலையில்  “இந்த சோளமாமா அது? என சாப்பிடும் போது அது கேட்கும். உங்கள் குழந்தைக்கு காலை உணவு தருவது அறிவியலல்ல. கலை. அந்த கலையை ரசித்து செய்யும் பெற்றோரின் குழந்தைகள் மட்டுமே நாளைய வரலாற்றின் ஆரோக்கியமான பக்கங்கள்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes