நம்மை சுற்றி இருக்கும் காய்கள், கனிகள், பூக்கள், இலைகளின் மருத்துவக் குணங்களை பல வேளைகளில் மறந்து விட்டு மருத்துவரையும், மருந்துகளையும் நாடிச் செல்கிறோம். பக்க விளைவுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், உடனடித் தீர்வுக்காக காத்திருக்கிறோம். இயற்கை நமக்கு தந்த கொடைகளை சரி வர பயன்படுத்தினாலே ஆரோக்கியமாக வாழலாம்! நோய்கள் குணமாக வீட்டிலிருந்தபடியே சரி செய்ய சில எளிய வழிமுறைகள் இதோ:-
ஆசனவாசல் குடைச்சலுக்கு:
இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவர்களுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால் அரிப்பு குணமாகும்.
அம்மைநோய் வேகத்தை தணிக்க:
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைபாதியாக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனைவெல்லத்துடன் கொடுத்தாலும் வேகம் தணியும். அம்மைத் தழும்புகள் மறைய கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மறைந்துவிடும். தினம் சந்தனச் சோப்பு உபயோகிக்கவும்.
வாய்ப்புண்ணுக்கு அகத்திக்கீரை:
உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக்கொள்வது அவசியம். தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.
அக்கி குணமாக:
பப்பாளிப்பழச்சாறும், பசும்பாலும் கலந்து பூசலாம். தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினாலும் குணமாகிவிடும்.
அரைக்கருப்பன் சரியாக:
இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் சொறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காய்ச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.
தேக ஆரோக்கியத்திற்கு:
தேக ஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி, யோகாசனம் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
ஆண்மை வலுப்பெற:
அரசம்பழத்தை பாலில் போட்டு காய்ச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தளற்சி நீங்கும். ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில் கலந்து குடித்தாலும் தளற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம், உழுந்து இவைகளை தேனுடன் சேர்த்து அருந்தினால் தளர்வு நீங்கும்.. இலுப்பைப் பூ கஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.
இரத்தம் பெருக:
இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள், பழவகைகள், தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி, ஈரல், மீன் முதலியவை அதை உண்பவருக்கு உடன் இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளிப்பழமும் - பீட்ரூட்டும் இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும் சேர்த்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.
இளநீர் மருத்துவம்:
இளநீரில் தாதுப்பொருள்களாகிய இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களைத் தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.
0 comments:
Post a Comment