அழகான பூக்களை ரசித்தால் மனம் புத்துணர்வடையும். இது அனைவரும் அறிந்த உண்மை. பூக்கள் நறுமணத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும் தன்மை கொண்டவை. இந்த பூக்களில் அபூர்வமான மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றின் மருத்துவத் தன்மை பற்றி விரிவாக அறிந்து வருகிறோம்.
கடந்த இதழில் மாதுளம் பூவின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொண்டோம். இந்த இதழில் அல்லி மலரின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தாமரையைப் போல் நீரில் பூக்கும் பூ தான் அல்லி. இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். மாலைப் பொழுதில் தான் அல்லி மலர் மலரும். அல்லிக்கு ஆல்பம், குமுதம், கைவரம் என்ற பெயர்களும் உண்டு.
Tamil - Alli
English - Water lily
Sanskri - Kumudam
Malayalam - Neerampal
Telugu - Alli-kada
Botanical Name - Nymphaea alba
இது இந்தியாவில் குளங்களிலும், குட்டைகளிலும் பயிராகும் கொடி வகுப்பைச் சேர்ந்தது.
சிவப்பு, வெண்சிவப்பு நிற பூக்களைக் கொண்டது. குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் இது ஏராளமாய்ப் பூக்கும்.
மேகமறும் புண்ணாறும் விட்டேகும் நீரிழிவு
தாகந் தணியும் தழலகலும் - வாகான
மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்
அல்லி மலரால் அறி
(அகத்தியர் குணபாடம்)
உடல் சூடு தணிய
உடல் சூட்டால் பல வியாதிகள் தொற்றிக் கொள்ளும். கண்கள் பாதிப்படையும். ஈரல் பாதிப்படைந்து பித்த நீர் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல், சரும நோய்கள் உண்டாகும். இரத்த ஓட்ட மண்டலம் பாதிக்கப்படும். இதனால் சிறுநீரக பாதிப்பு உண்டாகும். தூக்கமின்மை, அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்தல், சூட்டை அதிகரிக்கக்கூடிய உணவுகள் இவற்றால் உடல் சூடு அடைகிறது. இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். உடல் சூட்டினால் உண்டாகும் நோய்களின் தாக்கமும் குறையும்.
நீரிழிவு பாதிப்பு நீங்க
சர்க்கரை நோயானது பாரபட்சமின்றி அனைத்து தர மக்களையும் பாதிப்படையச் செய்கிறது.
இந்த பாதிப்பு நீங்க வெள்ளை அல்லி மலரின் இதழ்களை காயவைத்துபொடித்து கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வர நீரிழிவு நோயின் பாதிப்பு நீங்கும்.
சிறுநீர் எரிச்சல் குறைய
சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை கஷாயம் செய்து அருந்தி வந்தால் நீர் எரிச்சல் நீங்கும்.
தாகம் தணிய
சிலருக்கு அடிக்கடி நாவறட்சி உண்டாகும். எவ்வளவுதான் நீர் அருந்தினாலும் தாகம் தணியாது. இவர்கள் வெள்ளை அல்லி மலரின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் தாகம் தணியும்.
செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள்
செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ
டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்
கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு
புண்ணின் நோய் பன்னோயும் போம்
-அகத்தியர் குணபாடம்.
கண்ணோய்கள் நீங்க
கண்கள் உடலின் பிரதான உறுப்புகளுள் ஒன்று. இன்று கணினி முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதால் கண் பார்வை நரம்புகள் நீர்கோர்த்து கண் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றன.
இதனைப் போக்க செவ்வல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.
இரத்தம் சுத்தமாக
உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். செவ்வல்லியின் இதழ்களை காயவைத்து பொடி செய்து காலை மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்
0 comments:
Post a Comment