Monday, May 28, 2012

ரோஜாப் பூ

ரோஜாப் பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும், இதயத்திற்கு வலுவூட்டும். ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும். ரோஜா மொக்குகளில் ஒரு கையளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்க பூரணமாகக் குணமாகும்.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயத்தில் பித்த்தை உற்பத்தி செய்யும் பண்டங்களை சேர்க்கக்கூடாது. ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும்.

போட்டது முதல் காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். காலையில் வெய்லில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும். ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.

பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண் சீராகும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும். ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீருடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes