Wednesday, November 28, 2012

அம்மா மனசு



     மஞ்சுவும், சாமிநாதனும் ஒரு கால்குலேட்டரை வைத்துக் கொண்டு வட்டிக்கணக்குப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய்விட்டனர். ரூபாய் பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு பதினைந்து வருடத் தவணையில் பதினெட்டு சதவீதம் வட்டிக்கு மாதத்திற்கு எவ்வளவு ரூபாய் வருகிறது என்பதைத்தான் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மஞ்சுவிற்கு ஒரு தொகை வந்தால், சாமிநாதனுக்கு வேறு ஒரு தொகை வருகிறது. விளைவு? வாய்த்தகராறு தான் மிச்சம். இரண்டு மூன்று நாட்களாக இரவில் படுக்கப் போகும் முன்பு இவர்களுக்கு இதே வேலையாகி விட்டதை உணர்ந்த சாமிநாதனின் அம்மா சிவகாமிக்கு மருமகள் மஞ்சு மீது எரிச்சல் வரவே, "ஏண்டா... சாமிநாதா நீங்க வீடு வாங்கறதுக்குள்ள நாமெல்லாம் ஒரு வழியா ஆயிடுவோம்னு நினைக்கிறேன். தினம் எனக்கு இந்த தலைவலி தாங்க முடியல... இந்த வயதான காலத்தில..."
     சிவகாமி இப்படி அலுத்துக் கொள்வதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.


     சாமிநாதன் ஐம்பது வயதாகியும் இன்னும் ப்ரமோஷன் ஏதுமில்லாமல் சாதாரண அரசாங்க அதிகாரியாகத்தான் இருக்கிறான். மஞ்சுவோ ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிளார்க். அவள் சம்பளம் மாதம் மூவாயிரத்தைத் தாண்டாது.

     எப்படியோ தங்கள் மகன் கண்ணனை அதிக மார்க்குகள் வாங்கியதால் குறைந்த செலவிலேயே இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்து விட்டார்கள். ஒரே மகளான புவனாவும் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறாள். கணவன், மனைவியின் மொத்த வருமானமே மாதச் செலவிற்கு சரியாகி விடுகிறது. கலர் கலர் பட்டுப் புடவைகளெல்லாம் மஞ்சுவின் கனவில்தான் வந்து போயின.

     ஏற்கனவே இருந்த சொந்த வீட்டையும் சாமிநாதனின் அப்பா அந்த காலத்தில் பட்ட கடன்களை அடைப்பதற்காக விற்றாகிவிட்டது. இப்போது திடீரென எப்படியாவது ஒரு சொந்த வீடு நமக்கு இருக்க வேண்டும் என்ற வெறியில், கிறுக்குப் பிடித்தவன் போல் கடந்த ஒரு வருடமாக எல்லா வங்கிகள், நிதி நிறுவனங்கள் படி ஏறி இறங்கிய வண்ணமிருந்தான் சாமிநாதன். இதையெல்லாம் பார்த்து சிவகாமியும் கடவுளை வேண்டாத நாளில்லை.

     "அதில்லேம்மா... வீட்டோட விலை ரூபாய் பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ஆகிறது. முதல்ல முணு லட்சம் கட்டச் சொல்றா... பாக்கித் தொகையை பதினைந்து வருடத் தவணையிலே திருப்பிச் செலுத்தணும். அதுக்கு வட்டியோட மாதம் மாதம் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் போல் கட்றாப்ல வருது. கணக்குப் பார்த்தா கடைசியிலே வீட்டோட விலையை விட டபுள் மடங்காயிருது. அந்தக் கம்பெனி மானேஜர் வட்டியைக் குறைக்க முடியாதுங்கிறான்... அதனால மண்டையை போட்டுக் குடைஞ்சிக்கிட்டிருக்கோம்."

     "உங்களைப் பார்த்து சிரிக்கிறதா... அழறதான்னு தெரியலை... ஏதோ இரண்டு பேரும் சம்பாதிக்கிறேள். கொஞ்சம் நிம்மதியா சந்தோஷமா இருக்கோம். இது போதாதா? முதல்ல மூணு லட்சம் முன்பணமா கேட்கிறானே, அதுக்கு என்ன செய்யப் போறே? நாம யார்கிட்டே கேட்க முடியும்? நம்ம வீட்ல இருக்கிற நகைகளெல்லாம் கூட ஒன்றரை லட்சத்துக்கு மேல் தேறாது..."

     இதுக்கு மேலே அம்மாவை பேசவிடாத சாமிநாதன் "நான் என்னமோ... எப்படியோ... பணத்தை பிரட்டிடுவேன்... அதுக்கெல்லாம் எனக்கு நிறைய பிரெண்ட்ஸ் இருக்கா..."

     "சரி இருக்கட்டும்... மாசாமாசம் பதினைந்தாயிரம் கட்டணுமே அதுக்கு என்ன பண்ணுவே?"

     "நமக்குத்தான் அட்வான்ஸ் கொடுத்தவுடனேயே வீடு கொடுக்கிறான்லே... அதை வாடகைக்கு விட்டா மாதம் ஐயாயிரம் வருமே..."

     "சரி... பாக்கி பத்தாயிரம்?" விடவில்லை சிவகாமி.

     "அது... அது... எப்படியாவது கட்டத்தான் வேணும்."

     "உங்க இரண்டு பேரோட சம்பளமே மொத்தம் பதினாலாயிரத்தைத் தாண்டாதேடா... அதுல பத்தாயிரத்தைக் கொடுத்திட்டா மீதம் நாலாயிரம். அதுல வாடகைப் பணம் இரண்டாயிரம் போயிட்டா... பாக்கி இரண்டாயிரம் தான்... அதுல எப்படிடா நாம காலட்சேபம் பண்ண முடியும்? அதுவும் இப்ப இருக்கிற விலைவாசில..."

     அம்மாவிற்கு இவ்வளவு கணக்கெல்லாம் தெரிகிறதா? என்று ஆச்சரியத்தில் அசந்து போனான் சாமிநாதன்.

     தொடர்ந்தாள் சிவகாமி.

     "நமக்குத்தான் ஏற்கனவே வீடு இருக்கேடா..."

     "ஏம்மா... விளையாடறியா... அதைத்தான் வித்துத் தொலைச்சிட்டோமே."

     "அதில்லை..."

     "இப்ப நாம இருக்கிற வீட்டை சொல்றியா...? இது வாடகை வீடு தானே..."

     "அதில்லேடா... ஆண்டவன் கொடுத்த வீடு..."

     மஞ்சுவும் 'இந்த கிழத்திற்கு ஏதோ ஆகிவிட்டது' என்று தன் மனதுள் புலம்பிக் கொண்டாள்.

     யாரும் பதில் பேசாமலிருக்கவே "உன் உடம்பைச் சொல்றேன்டா. நம்ப உடம்பே நமக்கு வீடு மாதிரிதான். நம்மோட ஆன்மா எப்போதும் சந்தோஷமா இருக்கணும்னு தான் உடம்பு என்கிற வீட்டை ஆண்டவன் அந்த ஆன்மாவிற்கு கொடுத்திருக்கான். எவ்வளவு வருஷத்துக்கு நீ உடம்பை நல்ல ஆரோக்கியத்தோட பாதுகாப்பா வைச்சிருக்கியோ... அந்த அளவிற்கும் ஆன்மா சந்தோஷமா குடியிருக்கும். அதை விட்டு விட்டு உன் சக்திக்கு மீறிய காரியங்களில் நீ இறங்கிண்டு உன்னோட கண்ட அபிலாஷைகளுக்கும் நீ உன் உடம்பை ஆட்டி வைச்சா நாளுக்கு நாள் உன் உடம்பு கெட ஆரம்பிச்சிடும். பின்னாடி அதை தேத்தறதுக்கு டாக்டருக்கு ஆயிரக்கணக்குல செலவு பண்ண வேண்டியிருக்கும். உன் மனசும் வேதனைப்படும்... இதெல்லாம் நமக்குத் தேவையா...?"

     "..."

     "ஒரு மனுஷன் எந்த வீட்ல வாழ்றான்கிறது முக்கியமில்ல... அவன் எப்படி வாழ்றான்கிறதுதான் முக்கியம்... நானும் பார்த்துக்கிட்டேதான் வர்றேன்... வர... வர... நேரங்கெட்ட நேரத்தில வீட்டுக்கு வர்றே... சரியாவும் சாப்பிட மாட்டேங்கிறே... நாளுக்கு நாள் உடம்பு மெலிஞ்சிண்டு வர்றே..."
     "போதும்மா... உன் அட்வைஸ்... வாழ்க்கைன்னா இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்தாத்தான் முடியும்."


     "போடா மடையா... 'சாந்தமு லேகா... சௌக்யமு லேது' தெரியுமா உனக்கு?"

     பதிலேதும் பேசாமல் மஞ்சுவும் சுவாமிநாதனும் பெட்ரூமிற்குப் போய்விட்டார்கள்.

     மறுநாள் காலை.

     வழக்கம் போல், பேரன் கண்ணனுக்கு டிபன் பாக்ஸில் தயிர்சாதம், ஊறுகாய், வடாம் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சிவகாமி. மஞ்சுவும் அப்போது மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தாள்.

     "என்ன பாட்டி... ரெடியா... நான் காலேஜுக்கு கிளம்பிக்கிட்டிருக்கேன்" கண்ணன் அருகில் வந்தான்.

     டிபன்பாக்சை வாங்கிய கையோடு வேகமாகக் கிளம்பிய கண்ணனை "டேய் கண்ணா... கொஞ்சம் எனக்காக ஒரு நிமிஷம் ஒதுக்கு... நான் உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்..."

     "என்ன... சொல்லு..."

     "நீ இன்னும் ஒரு வருஷத்திலே கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆயிடுவே இல்லே... அதுக்கப்புறம் நீ அமெரிக்கா... இல்லே... ஆஸ்திரேலியான்னு எங்கேயாவது வெளிநாடு போய் மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கணும்பா..."

     "சரி... எதுக்கு இதெல்லாம் இப்பச் சொல்றே?"

     "உன் அப்பா தனக்கு ஒரு சொந்த வீடு இருக்கணும்னு ஆசைப்படறாண்டா... அந்தக் காலத்திலே நம்ம வீடு பெரிய வீடு. அந்த சொந்த வீட்டில் சொகுசா... செல்லமா வளர்ந்தவன். இப்ப குடும்ப நிலை மாறிப் போய் இந்த வாடகை வீட்ல இருந்துகிட்டிருக்கோம்... அவனோட நண்பர்களெல்லாம் வீடெல்லாம் கட்டி கிரகப் பிரவேசத்திற்கு அழைக்கிறப்பெல்லாம் உன் அப்பா கூனிக் குறுகிப் போயிடறான். இனிமேலும் இந்த வயசுல அவனால ஓடி ஆடி மாசம் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும்னு எனக்குத் தோணல... இனிமே புவனா கல்யாணத்துக்கு வேறே அவன் ஏதாவது சேமிச்சாகணும்..."

     கண்ணனின் முகம் பரிதாபமாக மாறிக் கொண்டிருந்தது.

     "உனக்கும் நாளைக்கு சம்பந்தம் பண்ணப் போறவங்க மாப்பிள்ளைக்குச் சொந்த வீடு இருக்கான்னு கேட்பாங்க. இப்பெல்லாம் சொந்த வீடு இருந்தா தாண்டா ஸ்டேட்டஸ், கௌரவம் எல்லாம். மாசா மாசம் வாடகை கொடுக்கிற டென்ஷன்லாம் இருக்காது... நீ சின்ன வயசு. அதான் இப்பவே சொல்றேன். பின்னாடி நீ எப்படியாவது சம்பாதிச்சு அப்பாவுக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்திருடா பேராண்டி... நல்லாயிருப்பே... எனக்கும் எழுபத்தைஞ்சு வயசாச்சு. அந்த வீட்டெல்லாம் நான் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கோ என்னவோ... சரி... நீ போயிட்டு வா..." என்றவள் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

     குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டே ஜன்னலுக்குப் பின்னால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாமிநாதன் கண்களும் குளிக்க ஆரம்பித்து விட்டன கண்ணீரில்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes