ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக் கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது
மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும் அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!
வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் அங்கே நிம்மதியாக! இருந்து விடுகிறார்கள் ஆனால் இந்த அப்பாவிகள் இங்கே படும் பாட்டை இவர்கள் அறிகிறார்களா..?
"பாவம் இவர்கள் அறிவதில்லை" என்ற ஒரே வசனத்தில் இவர்களை தப்பவிட முடியாது, முன்பு ஒரு காலத்தில் வேண்டுமானால் இங்கு நடப்பது இவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இப்போது நிலமை அப்படி இல்லை எல்லாம் தெரிந்து இருந்தும் இவர்கள் வெளிநாட்டு மோகம் எல்லாத்தையும் மறைத்து விடுகிறது. இந்த வெளிநாட்டு மோகத்துக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருடைய வாழ்க்கையையும் பலி கொடுத்துள்ளோம்.
என் எனக்குத்தெரிந்த உறவினர் (பெண்மணி) நன்றாக படித்தவர், அழகானவர், எனக்கு தெரிந்தே ஊரில் இவரை நிறைய பேர் பெண் கேட்டு வந்தார்கள் ஆனால் என் தாத்தா கட்டிக்கொடுத்தால் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக்கொடுப்பேன் என்று பிடிவாதமாய் நின்று புரோக்கர் மூலம் வந்த ஒரு நோர்வை மாப்பிள்ளையை தெரிவுசெய்து,
அவர் குடும்பத்துக்கு கடைசி பெண் ஒரே பெண் என்பதால் அதிக சீதனம் கொடுத்து இந்தியா கூட்டிச்சென்று மிக பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்து அவனுடன் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். வெளிநாடு சென்ற சில மாதங்களிலேயே அவன் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது, எல்லாவற்றுக்கும் உச்சமாக அவனுக்கு அங்கு ஒரு ஏற்கனவே திருமணமாகி (எழுத்தில் இல்லாமல்) இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. நியாம் கேட்ட அத்தைக்கு கிடைத்தது அடி உதைதான். யாருடைய ஆதரவும் இன்றி அவனுடன் போராடி விவகாரத்து வேண்டி அத்தை வெளியே வந்த போது அவருடன் வந்த ஒரே சொத்து அவன் கொடுத்த பெண் குழந்தைதான். இனி என் வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி அந்த பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறார் பெண்ணின் குடும்பத்தார்கள் தான் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று என்று சொல்லணுமா என்ன?!
ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் ஏதோ சொர்க்கத்துக்கே அதிபதிபோல் காட்டிக்கொள்ளும் இவர்களின் உண்மை நிலை இங்கிருக்கும் எங்களுக்குத்தானே வெளிச்சம். இப்படியான இவர்களின் பந்தாவைக்கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம் ஆனால் ஊரில் தங்களுக்கு பெண் பாப்பவர்களிடம் பொண்ணு அழகாக இருக்க வேண்டும்
என்று சொல்லுவது இருக்கே..
ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் ஏதோ சொர்க்கத்துக்கே அதிபதிபோல் காட்டிக்கொள்ளும் இவர்களின் உண்மை நிலை இங்கிருக்கும் எங்களுக்குத்தானே வெளிச்சம். இப்படியான இவர்களின் பந்தாவைக்கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம் ஆனால் ஊரில் தங்களுக்கு பெண் பாப்பவர்களிடம் பொண்ணு அழகாக இருக்க வேண்டும்
என்று சொல்லுவது இருக்கே....
கடவுளே, இந்த ஆணழகன்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பாப்பதே இல்லைப்போல் இவர்களைப்போலவே அந்த பெண்களும் எங்களுக்கு வரும் மாப்பிள்ளைமார் சூர்யா மாதிரியோ ஆர்யா மாதிரியோதான் இருக்கணும் என்றாள் இவர்களுக்கு எல்லாம் எப்படி கல்யாணம் ஆகிறதாம்! அண்மையில் கூட இப்படிப்பட்ட ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளையின் கூத்தைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்கு தெரியாமல் போச்சு. அவர் என் அண்ணாவின் ப்ரண்ட் இங்கே தனியேதான் இருக்காரு அவரின் அப்பா செத்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில் நானும் அண்ணாவும் அவர் வீட்டுக்கு போய் இருந்தோம். எங்களை வரவேற்று பேசிக்கொண்டு இருந்தவர் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொன்னபோது அண்ணா பொண்ணு யாரு
எங்க இருக்கா எப்படி தெரியும் என்று விசாரித்த போதுதான் அந்த வெக்கம்கெட்ட செயலை கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் அவர் சொன்னார்.
தன்னுடைய தந்தையின் இறந்தவீட்டை தான் வீடியோ எல்லாம் எடுத்து பெருசாக செய்ததாவும் அந்த வீடியோ நகல் தனக்கு அனுப்பட்டபோது அதில் ஒரு அழகான பொண்ணு ஒடியாடி வேலை செய்துகொண்டு இருந்ததாகவும், தன் தாயிடம் போன் பண்ணி அது யார் என்று கேட்ட போது அது பக்கத்துவீட்டு பொண்ணு என்று விவரம் சொன்னதும் அவளை தனக்கு புடித்து இருப்பதாக சொல்லி பொண்ணு கேட்க சொன்னாராம், தந்தை இறந்து சில வாரங்களே ஆனதால் இப்போது போய் பெண்கேட்டால் அவர்கள் தன்னை தப்பா நினைப்பார்கள் என்று அந்த தாய் மறுத்துவிட அதை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம் ஏனெனில் அந்த அழகான பெண்ணை அதர்குள் யாராவது கொத்திப்போய் விடுவார்களாம். பின் ஒரு வழியாக தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம்.
இப்போது எல்லாம் ஓக்கே ஆகி அந்த பெண்ணுடன் போனில் பேசுவதாகவும் அவர் சொன்ன போது என் எதிரே இருந்த அவரை நிமிர்ந்து பார்த்தேன். சத்தியமாக என் கண்ணுக்கு அவர் ஒரு மனிதப்பிறப்பாகவே தெரியவில்லை ஒரு அருவருக்கத்தக்க புளுவாகவே கண்ணுக்கு தெரிந்தார். தங்களுக்கு மாப்பிள்ளையாக வருபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தால் மட்டும் போதும் என் ஊரில் இருப்பவர்கள் நினைப்பதும், தங்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் ஒரு தகுதியே போதும் ஜஸ்வர்யாராயைக்கூட பொண்ணு கேட்கலாம் என இங்கு இருப்பவர்கள் நினைப்பதும் கொடுமையின் உச்சம். சிந்திப்பார்களா இவர்கள்..?
Part 2
மணமகன் அழகானவரா? தம் மகளின் அழகிற்கு நிகரானவரா? வயது வேறுபாடு அவர்களின் எதிர்காலத்திற்கு ஒத்து வருமா என்றெல்லாம் யாருமே சிந்தித்து பார்ப்பதில்லை. தம் மக்கள் வெளி நாட்டில் வாழும் ஒருவரைத் திருமணம் செய்து வெளிநாட்டிற்குப் போனாலே போதும் என்ற நிலையிலே வாழுகின்றார்கள். கொஞ்சம் கலர் குறைந்து களையற்றுப் போன 30+++ வயதுடைய மணமகன்களிடம் மாட்டிக் கொள்ளும் 20++ வயதுடைய இளம் பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகின்றது. திருமணம் முடித்து சிறிது காலம் அலைபேசியில் தம் காலத்தை மன்னிக்கவும் வாழ்க்கையை நடத்தும் இவர்கள் மணப் பெண் வெளிநாட்டிற்கு வந்ததும் தம் விஸ்பரூபத்தைக் காட்ட முனைகின்றார்கள். இதற்கான பிராதான காரணம் மணகனிடம் காணப்படும் மனப் பயமும், உடல் நிலைக் குறைபாடுமே ஆகும்.
30++ வயதுடைய மண மகனைத் தம் மகளுக்கு கட்டி வைக்க ஆசை கொள்ளும் பெற்றோர் வெளி நாட்டில் தம் சந்ததிக்காகப் பல வருடங்கள் உழைத்த மண மகனுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்கின்றதா? தம் இளைய வயதுடைய மண மகளை நன்றாக கவனிப்பாரா இம் மணமகன் என்றெல்லாம் அறியாது பெற்ற கடமைக்கு கலியாணம் முடித்து வைத்தால் சரி என்று அனுப்பி வைக்கின்றார்கள்.
தன்னை விட அழகான பெண்ணை மண முடித்து கூட்டிச் செல்லும் பெரும்பாலான புலம் பெயர் ஆண்களிடம் காணப்படும் உளவியல் ரீதியான குறைபாடு என்னவென்றால்;தன்னை விட அழகிலும், தோற்றத்திலும் உயர்ந்த பெண் எங்கே தன்னை விட்டுப் போய்விடுவாளோ எனும் அச்ச நிலையாகும். இல்லை தன்னை விட அழகான இப் பெண் அடுத்தவன் அழகினால் கவரப்பட்டு, தன்னை விடத் தொழில் ரீதியில் உயர்ந்திருக்கும் அடுத்த நபரோடு ஓடிவிடுவாளோ எனும் உளவியல் ரிதியான ஐயப்பாடே இந்த நிலைக்கு காரணமாகும்.
ஒரு 20+ வயதையுட பெண்ணைத் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு கூட்டிச் செல்லும் பெரும்பாலான ஆண்கள் தம் மனைவிமாரை வீட்டுச் சிறைக்குள்ளே வாழ வைத்து விட்டு தாம் வேலைக்கு சென்று விடுவார்கள். மனைவியும் ஒரு சராசரி மனித இனம் தானே எனும் இயல்பேதுமின்றி காலையில் வேலைக்குப் போனால், மாலையில் வீடு திரும்பும் இவர்கள் மனைவியை வெளியே கூட்டிச் செல்லும் போதும் இளம் பெண்ணாக இருப்பின் அப் பெண் பிரியப்படும் ஆடைகளை அணியக் கூடாது என்றும் முற்று முழுதாக உடலைப் போர்த்திய ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றார்கள். அல்லது கலாச்சார உடைகளை அணிய வேண்டும் என்கின்ற பாரம்பரிய நிலையினைப் பின்பற்றுகின்றார்கள்.
இதில் பரிதாபமான விஷயம் என்னவென்றால் ஐரோப்பிய வீதிகளில் பல பெண்கள் தலையினை ஸ்ரைற்றினிங் (Hair Straightening) பண்ணிச் செல்ல எம் தமிழ்ப் பெண்களோ ஈழத்தில் வாழ்ந்த அதே சிக்குப்பட்ட பரட்டைத் தலை முடியோடு செல்ல வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.
தாம் தம்மைச் சூழ்ந்துள்ளோருக்கு காண்பிப்பதற்காக பெயருக்குப் பொம்மைக் கலியாணம் செய்து விட்டு, மனைவியைப் பற்றிய எந்த விதமான கரிசனையேதுமின்றி வாழும் ஆண்களும் எம் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது தான் இன்னுமோர் வேதனையான விடயமாகும்.இத்தகைய வகையறாக்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் செய்கின்ற மிக நல்ல விஷயம் "காலம் பூராவும் உன்னைக் கண் கலங்காமல் பார்க்கிறேன்" என்று கூறி விட்டு வீட்டினுள் மனைவியை விட்டு விட்டுத் தாம் வேலைக்குச் சென்று மனைவிக்கும் சேர்த்தே உழைத்து வருவதாகும்.
ஆனால் மனைவி டீவியைத் தவிர வீட்டில் உள்ள ஏனைய தொடர்பாடற் பொருட்களை உபயோகிக்க கூடாது. கம்பியூட்டர் இருந்தால் அதில் இணையத்தைப் பாவிக்க கூடாது, கணவன் உறவினர்கள் எடுக்கும் தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்த்து ஏனைய அழைப்புக்களுக்கு பதில் சொல்லக் கூடாது. வெளிச் செல்லும் (Out going) அலைபேசி அழைப்புக்களை மேற் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டு சிறைக் கைதியினைப் போல வாழுகின்ற பெண்கள் பலரும் உள்ளார்கள் என்று அறியும் போது வேதனை தான் எஞ்சுகிறது.
சமீபத்தில் நான் அறிந்த செய்தி 29 வயதுடைய ஆண் ஐரோப்பியக் கண்டத்திலுள்ள ஓர் நாட்டில் வசிப்பவர் 20 வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்து கூட்டிச் சென்றிருக்கிறார். பெண்ணுக்கு வேண்டிய இளமைச் சுகத்தினையோ அல்லது தாம்பத்தியச் சுகத்தினையோ அவரால் கொடுக்க முடியாத நிலை. இதற்கான காரணம் அவர் நீண்ட காலம் கடினமாக உழைத்த காரணத்தினால் முள்ளந் தண்டுப் பகுதியில் சத்திர சிகிச்சை (ஓப்பரேசன்) மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதாம். இவர்களைப் போன்று பலர் தம் நிலை தெரிந்திருந்தும் ஏன் ஈழத்தில் உள்ள அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள் என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது. இதே வேளை புலம் பெயர் நாட்டில் வாழும் சில நல்ல உள்ளங்கள் ஈழத்தில் விவாகாரத்தானவர்களைத் திருமணம் செய்து அவர்களுக்கு நல் வாழ்வைக் கொடுத்து வாழ வைத்துமிருக்கின்றார்கள்.
ஒரு பெண் வருடத்தில் 365 நாளும் டீவிப் பெட்டியின் முன் உட்கார்ந்திருப்பதும், கணவனின் உடையினைத் (துணி துவைப்பதும்) துவைப்பதும், வெளி உலகினைத் தரிசிக்காது, வீட்டினுள் விம்மி வெடித்து வாழுவதும் தான் வெளி நாட்டு மோகத்தின் பின்னணியில் சில பெண்கள் பெற்றுக் கொள்ளும் அவல நிலையாகும். அட...இவர்களும் மனித இனம் தானே! இவர்களும் படிக்க வேண்டுமே! அல்லது வெளி உலகில் ஏனைய இன மக்களோடு பழகி வாழ வேண்டும் இவர்கள் என்று எண்ணுவோரின் தொகை சிறிதளவு தான்.
பெற்றோர்கள் விடும் தவறு ஒரு புறம், தம் நிலையினை மறைத்து உளவியல் ரீதியில் தமக்கு உள்ள அச்சத்தை மறைத்து அப்பாவிப் பெண்களைத் திருமணம் செய்து வீட்டுச் சிறைக்குள் அடைத்து வைக்கும் ஆண்கள் விடும் தவறு மறுபுறம் எனப் பல செயல்கள் சுதந்திரமாகப் பறக்க வேண்டிய சிட்டுக்களின் கட்டுக்களை அறுத்துப் போடுகின்றது. பெற்றோர்கள் தம் பிள்ளையின் வளமான எதிர்காலம் பற்றிய தெளிவோடு மணமகனைத் தேடினால் இந்த அவலத்தினை இல்லாதொழிக்கலாம் என்பது யதார்த்தம்.
0 comments:
Post a Comment