Thursday, December 1, 2011

சின்னத்திரையும் வண்ணத்திரையும்

இன்று உலகம் அறிவியலில் முன்னேறிவிட்டது. தொலைத் தொடர்பு சாதனங்களின் முன்னேற்றம், தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் இன்னும் அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதன உலகில் (Media Age)-ல் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எவ்வளவுதான் விஞ்ஞானம், தகவல் தொடர்புகள் முன்னேறினாலும் அதில் ஷைத்தானிய தாக்கமும், ஊடுறுவலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணத்திற்கு தகவல் தொழில் நுட்பத் துறையை எடுத்துக் கொண்டால், நாம் வீட்டிலிருந்தபடியே அமெரிக்காவில் வாழும் சகோதரருக்கு இறைமார்க்கத்தை எத்திவைக்கலாம் அதே போன்று முறையற்ற பெண்கள் தொடர்புக்கும் பயன்படுத்தலாம். இதனால்தான் சுருங்கிவிட்ட உலகத்தை விஞ்ஞானம் ஒரு கிராமம் (Global Village) ஆக மாற்றிவிட்டது.

ஒவ்வொரு விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திலும் எவ்வளவு நன்மை இருந்தாலும் அதைவிடத் தீமைகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்துதான் அது நன்மையானதா? அல்லது தீமையானதா? என அறிய முடிகிறது. இதில் மின்னணு ஊடகங்கள் (Electronic Media) என்று சொல்லப்படும். வானொலி (Radio), ஒலிப்பதிவு (Recording), திரைப்படம் (Film), தொலைக்காட்சி (Television), போன்றவை குறிப்பிடத்தக்கது. கல்வி, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, ஆன்மீகம் போன்ற நன்மைகளை இதன் மூலம் நாம் பெற முடியும். ஆனால் இந்த நன்மையான காரியங்களில் இத்துறை பயன்படுவதைவிட ஆபாசம், விரசம், கொலை, கொள்ளை போன்ற தீய செயல்களில்தான் இத்துறை முனைப்புக் காட்டுகிறது. குறிப்பாக திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிகளில் நாம் பெறும் நன்மையை விட தீமைகள்தான் ஏராளம். இதன் பாதிப்புக்கள் குக்கிராமம் முதல் முன்னேறிவிட்ட பெரு நகரங்கள் வரை வியாபித்திருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரையின் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்பு சிண்ணத்திரையும் வண்ணத்திரையும்.

பெண்கள் அதிகாலை எழுந்து சுப்ஹுத் தொழுது, வீடு சுத்தம் செய்து, பாத்திரங்கள் விளக்கி, சமையல் செய்து லுஹர் (தொழுகை) நேரம் வந்து விட்டது என்று தொழச் சென்ற காலம் கடந்து, ஏழு மணிக்கு எழுந்து அவசர அவசரமாய் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி "இன்றைக்கு கொஞ்சம் லேட் கடையில் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கணவனை அனுப்பிவிட்டு அடுப்பில் சோற்றையும், குழம்பையும் ஏற்றி வைத்து விட்டு அப்பாடா! என்று தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து குக்கரின் ஒலி வரும் வரை சின்னத்திரையில் புதைந்து போகும் தாய்மார்களைப் பார்க்கிறோம். குழந்தைகளின் நிலைமையும் அதுதான்.

பிஞ்சுகளின் நெஞ்சங்களில் ஆன்மீகமும், நல்லொழுக்கங்களும் கற்பிக்கப்பட்டு பக்திமானாகத் திகழவேண்டியவர்கள் சின்னத் திரைத் தொடர்களில் சிக்கி சக்திமானாக உருமாறுகிறார்கள். கல்வி பயிலச் செல்லும் சிறார்கள் புத்தகப் பையிலும், நோட்டுகளின் அட்டைகளிலும் நடிகர், நடிகைகளின் கவர்ச்சி படங்களை காண முடிகிறது. சிறு குழந்தைகளுக்கு "ஸலாம்" கூறுதல் போன்ற நல்லொழுக்கங்களை கற்றுத் தர வேண்டிய பெற்றோர்கள் கூட வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம்" குழந்தைகளிடம் ஏதாவது சினிமாப் பாடலை பாடச் சொல்லி வேடிக்கை பார்த்து மகிழும் அவநிலைக்கு காரணம் நிச்சயமாக டி.வி மற்றும் திரைப்படங்களின் தாக்கம்தான். அவர்கள் பார்க்கும் போலிக்காட்சிகளை அவர்களது நடைமுறையிலும் செயல்படுத்துவதை பார்க்கிறோம்.

இந்த கட்டத்தில் "குமுதம்" வாசகி விஜயலட்சுமி என்பவரின் செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் கூறுகிறார், "சன் டி.வியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட "இந்திரா" என்ற தொடரில் வரும் ஒரு கொலைக் காட்சியை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தோம். அப்போது எனது 5 வயது மகளும், ஒன்றரை வயது மகனும் உடன் இருந்தனர். மறுநாள் காய்கறி நறுக்கும் சமையலறைக்கு நான் சென்ற போது எனது ஒன்றரை வயது மகன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு ஊ.. ஆ.. என்று டி.வியில் வந்ததைப் போன்று தன் அக்காவை மிரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். தொலைக்காட்சியின் விளைவு! கடவுளே!.." என்று தொலைக்காட்சியின் விபரீதத்தை வர்ணிக்கிறார்.
(நன்றி : குமுதம்)

இது படிப்பதற்கு சாதாரண செய்தியாக இருந்தாலும் எந்த அளவுக்கு இந்த தொலைக்காட்சித் தொடர்கள் பச்சிளங் குழந்தைகளின் நெஞ்சங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு இது ஓர் சாட்சி!

சமீப காலமாக சிறுவர்கள் ஓடிப்போகும் காட்சிகள் நடந்தேறுகின்றதே இதற்குக் காரணம் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் பாதிப்புகள். பள்ளியில் பயின்று கல்லூரி கடந்து மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாக வேண்டிய பாலகர்கள் சினிமா மாயையில் சிக்கி நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி திக்கற்றவர்களாக திரியும் காட்சிகள் எதைக் காட்டுகிறது? இதிலிருந்து இந்த ஷைத்தானிய ஊடகங்கள் நம் குழந்தைகளை வழிகேட்டிற்கு அழைத்துச் செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

"தினமணி" நாளிதழின் வாசகர் கடிதம் ஒன்றினை இங்கு மேற்கோள் காட்டினால் பொருத்தமானதாக இருக்கும். "வளர் இளம் பருவத்திடம் ஓடிப்போகும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வண்ணத்திரைகளும் தான் காரணம். பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில்தான் இந்த ஓடிப்போகும் நிகழ்வு நடைபெறுகிறது. வறுமையும், பண்பாட்டுச் சீரழிவும் காணாமல் போனால்தான் இந்த சமுதாயத்தில் ஓடிப்போகும் கலாச்சாரம் இல்லாத நிலை உருவாகும்.
"சோம நடராசன் (கரூர்) " நன்றி : தினமணி (28-05-2004)

சினிமாவில் வருவதைப் போன்று உயர்மட்ட வாழ்க்கை வேண்டும் என்ற போலி ஆசையில் தனது வாழ்வையே சூனியமாகும் அவல நிலை உருவாகுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வெள்ளித்திரைகளும் அதிக அளவிற்கு காரணமாக இருக்கின்றன.

குழந்தைப் பருவம் பாழ்பட இந்த தொலைக்காட்சி தொடர்களின் வியாபகம் எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை இன்னும் விரிவாக நோக்க "ஒற்றுமை" இதழில் வெளிவந்த "தொலைக்காட்சிகளில் தொலைந்து போகும் எதிர்கால சமுதாயம்" என்ற ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் வீணடிக்கிறான். இப்படி அவன் பார்த்த தொலைக்காட்சியில் 20 இலட்சம் விளம்பரங்கள் வருகின்றன. இதனால்தான் தம் தேவைகளைவிட அதிகமாக பொருட்களை தாங்கள் வாங்குவதாக 82% அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.
 
ஒவ்வொரு வாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் ஒரு குழந்தை தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன் பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களை குறித்துப் பேச 38.5 நிமிடங்கள் மட்டுமே ஒரு குழந்தை பயன்படுத்துகிறது. என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வயதுக் குழந்தை தொலைக்காட்சி முன் தினமும் 6 மணி நேரத்தைக் கழிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிக் கூடங்களில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் தொலைக்காட்சியைப் பார்க்க எடுத்துக் கொள்ளும் நேரம் 1023 மணி நேரங்கள். உயர்நிலைப பள்ளியை முடிக்கும் மாணவன் ஒருவன் 19,000 மணி நேரம் தொலைக்காட்சியை பார்த்த அனுபவம் உடையவனாய் அப்பருவத்தை அடைகிறான். இதனால்தான் நாம் தொலைக்காட்சியை நேரத்தை கொல்லும் இரத்தக் காட்டேறி என வர்ணிக்கிறோம்.
 
18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் இன்னும் 10,000 வன்முறைகளையும் ஒரு சராசரி குழந்தை பார்த்து விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வன்முறையை தொலைகக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சியை சிறுவர்கள் எவ்வித உணர்வும் இல்லாமல் பார்ப்பதில்லை என்றும் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொலைக்காட்சிக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சி போதைப் பொருள்களை விட கொடூரமானது. அது மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ள வைத்து தனி மனிதரையும், நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது. தொலைக்காட்சி வளர்ந்து வரும் தலைமுறையின் மனநிலை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவுகூட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட முடியவில்லை.

தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடக்கும் 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
1960 களில் இருந்த தொகையைவிட 1990 களில் மிதமிஞ்சிய உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் உடல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் முடங்கிக் கிடப்பதும் தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 
பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளெல்லாம் சிறுவர்களுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக துரோகிகளாகவும் தொலைக்காட்சி விளங்குகிறது. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவுகள் கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். பெரியவர்களின் அந்தரங்கங்கள் அம்பலப்படுத்தப்படுவதினால் குழந்தைகள் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர்.
பசுமரத்து ஆணி போல தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக்க பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் இவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. இந்த அபாயத்தை உணராமல் செயற்கைக் கோள் அலைவரிசைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி மனித வாழ்வின் நிலையை பெரும் அபாயத்திற்கு அழைத்துச் செல்கிறது. (நன்றி : ஒற்றுமை, ஜுன்-2001)

தொலைக்காட்சி வீட்டின் எஜமானாகி பலரின் வழிகாட்டியாகவும் மாறியுள்ளது. ஆக்கிரமிப்பால் சமூக ஒழுக்க மாண்புகள் உலகெங்கும் வெகுவாகச் சீரழிந்து வருகின்றது. முஸ்லிம்களைப் பொருத்தவரை இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு ஓழுக்கக் கேடகளிலும் மூழ்குவது இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி மூலமாகத்தான் நமது இளைஞர்களை சிந்தனை அடிமைத்துவத்திற்கும், ஒழுக்கச் சீரழிவிக்கும் அழைத்துச் செல்லும் இந்தத் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் கோரப் பிடியிலிருந்து நாம் பாதுகாப்புப் பெற வேண்டும்.

இன்று சமுதாயம் எந்த அளவிற்குச் சீர் கேடுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளது! நடிகர், நடிகைகள் அணிந்த உடைகளைப் போன்று உடுத்துவதிலும், அவர்களைப் போன்று சிகை அலங்காரம் செய்து கொள்வதிலும் இன்னும்
Girl friend & Boy friend கலாச்சாரம், ராக்கிங், ஈவ்-டீசிங், டேட்டிங் (Dating) என்ற பெயரில் ஹோட்டல்களில் இளம் ஆணும், பெண்ணும் சந்தித்துக் கொள்ளுதல் போன்ற மானக்கேடான செயல்பாடுகளை மேற்கத்திய கலாச்சாரம் என்ற போர்வையில் நமது இளைஞர்களை மூளைச் சலவை செய்யப்பட்டு திணித்து சமூகச் சீர் கேடுகளுக்கு காரணமாக இருப்பது இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறை அல்லவா? கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் அரைகுறை ஆடைகள் அணிவதற்கு அடிகோலியவை இந்த சின்னத் திரையில் வரும் MTVV Channel போன்ற மட்ட ரக சானல்கள் அல்லவா? மேற்கத்திய மட்டமான நாகரீகத்தை(?) கற்றுக் கொடுக்கும் இந்த கேடுகெட்ட ஊடகங்களினால் எத்தனையோ பள்ளி மாணவிகள் கருத்தரிப்புக்கும், கருக்கலைப்புக்கும் உள்ளாகின்றனறே!

டி.வி மற்றும் சினிமா போன்ற இந்த ஊடகங்களின் கோரப்பிடியில் சிக்கிச் சீர்கெட்டுக் கிடக்கும் இளைய சமுதாயத்தைப் பார்த்து அதே சினிமாத்துறையில் அங்கமாக வகிக்கும் வைரமுத்து என்ற கவிஞர் தன் உள்ளக் குமறலை பின்வருமாறு கூறுகிறார்.
"எங்கே போகின்றோம் என்று தெரியாமல் அலைகளின் முதுகுகளில் சவாரி செய்யும் நீர்க் குமிழிகளைப் போன்று நீயும் குறிக்கோளின்றி சென்று கொண்டிருக்கிறாயே!

உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம், முதுகுக்கு முன்னால் இருட்டு கண்பார்வை உனக்கு இருக்கின்றதா? இல்லையா? என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை!

ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் சாவி கொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய் நம் இளைஞர்கள் இருந்தால் அடுத்த தலைமுறை நகராத கூடமாய் நசிந்து போகும்.

இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என் குதூகூலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே போகின்றோம் இளைஞர்களே?

ஒரு கல்லூரி விடுதிக்கு விலைமாதர் வருவதாக என் செவிக்கு எட்டுகிறது! பாவிகளே! இது கல்விச் சாலையா? அல்லது கலவிச் சாலையா?

வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப் பையில் போதை மாத்திரையும், கருத்தடை மாத்திரையும் சம விகிதத்தில் சாட்சிகள் எட்டுகின்றன!

அடிப் பாவிப் பெண்னே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? அல்லது மடியை நிரப்ப வந்தாயா?

- இந்த இளைய தலைமுறை தடுமாறிக் கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு?
- இவர்கள் இப்படி கனாக் காரர்களாய் அலைவதற்கு யார் காரணம்?
- இவர்களுக்கு இந்த ஆடை கட்டாத ஆசைகளை ஆட்டிவிட்டது எது?
- வாழ்க்கையின் யதார்த்தம் பார்த்து அஞ்சும் மனோபாவம் எப்படி வந்தது?
- இவர்கள் இப்படி உள்ளீடற்றவர்களாய் உருமாற்றியது எது?

(நன்றி : "வைரமுத்து"வின் சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்)
இப்படி கவிஞன் பல கேள்விகளை எழுப்புகின்றான். அத்தனை கேள்விக்கும் ஏகோபித்த பதில் சின்னத்திரையும், சினிமாத் திரையும்தான். ஃபேஷன் என்ற பெயரில் கவர்ச்சி ஆடைகள், இரட்டை அர்த்தமுள்ள விரசல் நடை பாடல்கள் கூடவே செவியை பதம் பார்க்கும் இசை இன்னும் குடும்பத்துடன் பார்க்க முடியாத விரசக் காட்சிகள் என்று அத்தனை சீர்கேடுகளையும் ஒருங்கே பெற்ற ஷைத்தானிய ஊடகம்தான் இந்த சினிமாவும், தொலைக்காட்சியும்.

இதனால்தான் சினிமாவின் கோரப்பிடியை சுவாசித்த ஆஸ்கார் விருது பெற்ற நடிகன் ஆண்டெனி குயின் (Antony Queen) "சினிமா என்பது வன்முறையின் ஆடுகளம் (Cinema is the area of the vulgarity)" என்று கூறினான். இன்னும் நடிப்பைப் பற்றியும் தான் நடித்து வந்த சினிமாத் துறையைப் பற்றியும் மனம் வருந்தி சினிமாவினால் என் வாழ்நாட்கள் நஷ்டமடைந்துவிட்டன, என்று கூறி சினிமாத் துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டான்.

மேலும் இந்தச் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் வரும் இசை மனிதனை செவிடனாக்கி மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இஸ்லாம் இதை வன்மையாகக் கண்டிக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள்.
(அறிவிப்பாளர் : யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)

நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறியிருக்க, பொழுது போகவில்லை என்று சினிமாப் பாடல்களையும் இசையையும் நேசித்து காதுகளில் "வாக்மேன்" பொருத்தி உல்லாசத்தில் உலாவரும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளை என்ன செய்வது?

தொழுகைக்கு அழைத்தால் "நேரமில்லை" என்று கூறும் நம் சகோதரர்கள் சினிமாவும், டி.வியும் பார்ப்பதற்கு தன்னையே அறியாமல் நேரம் ஒதுக்கிக் கொள்வதைப் பார்க்கின்றோம்.
மொத்தத்தில் இந்த சினிமா, தொலைக்காட்சி மீடியாக்களினால் மனிதன் பெரு நஷ்டத்திற்கு ஆளாகின்றான். மானக்கேடான காரியங்கள் செய்யவும் முனைகின்றான்

அல்லாஹ் தன் திருமறையில்...
நிச்சயமாக, அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்குக் கொடுப்பதைக் கொண்டும் ஏவுகின்றான். அன்றியும் மானக்கேடான காரியங்கள், பாவமான காரியங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றை விட்டும் உங்களை விலக்குகின்றான். நீங்கள் நினைவுகூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கின்றான். (16:90)

எனவே அல்லாஹ் மானக்கேடான காரியத்தை விலக்குகின்றான். இந்த மானக்கேடான அத்தனை ஒழுக்கக் கேடுகளையும் பொதிந்து தரக்கூடிய இந்த தரங்கெட்ட மீடியாக்கள் இவ்வுலக வாழ்க்கையை அலங்கரித்துக் காட்டுகின்றன. இன்பத்தை ஊட்டுவது போன்ற போலியை ஏற்படுத்துகின்றன. மறுமையை மறுக்கச் செய்கின்றன.

வல்லோன் வான்மறையில் "நிச்சயமாக செவிப்புலனும், பார்வையும், இதயமும் அவற்றின் செயல்கள் பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும்"

எனவே பொழுது போகவில்லை என்று போலியான இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் நேரத்தை வீணடிப்போரை அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கை செய்கின்றான். மறுமையில் அவர்கள் கண்களையும், செவிகளையும், இதயத்தையும் இறைவன் விசாரிப்பான். இந்த உலகத்தின் மயக்கும் இன்பத்திற்கு நாம் பலியாகிவிடக்கூடாது. மறுமைதான் நிலையானது, என்று உணாந்து போலியான இன்பம் தரக்கூடிய தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறையை உடனே புறக்கணித்து நிரந்தர இன்பத்தை நோக்கி நம் கால்கள் நடைபோடட்டும். மறுமையில் நரக நெருப்பை விட்டு நம்மை வல்ல இறைவன் பாதுகாக்கட்டும். ஆமீன்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes