உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டுள்ள பாலூட்டிகளில் பெரும்பாலான இனங்கள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இன்றளவிலும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான புதைப்பொருள் எலும்புக்கூடுகளை கண்டுபிடிக்கின்றனர். கிட்டதட்ட ஒரு லட்சம் பாலூட்டிகள் இந்த உலகில் இருந்ததாகவும் அவற்றில் பெரும் பகுதி அழிந்துவிட்டதாகவும் தற்போது 4000 பாலூட்டிகள் மாத்திரமே உள்ளதாகவும் கூறுகின்றார்கள். மேலும் இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு பிறகு பல உயிரினங்களை உயிரியல் கண்காட்சிகளில் மாத்திரமே காணக்கூடிய நிலை ஏற்படும் என்றும் திட்ட வட்டமாக கூறுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் பல விலங்குகளின் நிலை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனமாகும். நாம் இந்தத் தலைப்பில் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் மற்றவற்றிலிருந்து வவ்வால் எந்த பண்புகளில் எந்த தகவமைப்பில் வேறுபட்டுள்ளது என்பதை விரிவான முறையிலே பார்ப்போம்.
"பறக்கக்கூடிய" தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான்
குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி
உலகில் உள்ள பாலூட்டிகளில் மிகச்சிரியது பம்பல்பீ வவ்வால் ஆகும். தங்கள் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக் உண்ணக்கூடிய அதிசயத்திலும் அதிசயம்.
வவ்வால்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) எனவும் சிரிய வவ்வால்கள் (Mictro bats) எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய வவ்வால்களில் குறிப்பிடத்தக்கது பிளையிங் ஃபாக்ஸ் (Flying fox) வவ்வால் ஆகும். இவை அதிகபட்சமாக 41 செ.மீ வரை வளரக்கூடியது. சிறிய வகை வவ்வால்களில் குறிப்பிடக்தக்கது பம்பல்பீ(Bumble Bee) வவ்வால் ஆகும். இவை மூன்று செ.மீ நீளமும் இரண்டு கிராம் எடையும் உள்ளதாகும். இதுதான் உலகில் உள்ள பாலூட்டிகளில் மிக சிறியதாகும். மேலும் இவைகளின் உணவு முறைகளை வைத்தும் இரண்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பழங்கள், பூக்கள் மற்றும் பூக்களின் குளுகோஸ், மகரந்தத் தூள் ஆகியவற்றை உண்டு வாழக்கூடியவை. மற்றது சிறிய பூச்சிகள் வண்டுகள் சிறிய வகை பாலூட்டிகள் சிறிய பறவைகள் ஈக்கள் கொசுக்கள் தவளை மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்டு வாழுகின்றன. வவ்வால்களில் மொத்தம் 951 இனங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். அவற்றில் மூன்றே மூன்று வகைகள் உயிர் பிராணிகளின் இரத்தத்தை மட்டுமே குடித்து உயிர் வாழக்கூடியது. உதாரணமாக வம்பயர் வவ்வால்கள் (Vampire) இவைகளின் கூறிய பற்களைக்கொண்டு முதலில் பிராணிகளின் உடலில் காயத்தை ஏற்படுத்துகின்றன. அதிலிருந்து ஒரு முறைக்கு 20 மில்லி வரை இரத்தத்தை குடிக்கின்றன. இந்த அளவு அவற்றின் எடையில் 40 சதவிகிதம் ஆகும். மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் வோல்ட் வார்ல்ட் புரூட் வவ்வால்கள் (Old world fruit bats) ஒரு நேரத்திற்கு 500 கிராம் வரை பழங்களை உண்ணுகின்றன. இந்த அளவு இவற்றின் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். இதுவே அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிதான். நம்முடைய பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விசயமாக இருப்பினும் கூட அல்லாஹ்வுடைய ஆற்றலை எண்ணி வியப்படையக்கூடிய சம்பவமாகவே இது அமைந்துள்ளது.
தங்குமிடங்கள்
வவ்வால்கள் பொதுவாக ஒரு சமுதாயமாக கூடி வாழுகின்றன. ஒரு கூட்டத்தில் 2000க்கம் மேற்ப்பட்ட வவ்வால்கள் வாழுகின்றன. இவைகள் வருடம் முழுதும் தங்களுக்கு உணவுத்தட்டுபாடின்றி கிடைக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து வாழுகின்றன. உலகின் அனைத்து பிரதேசங்களில் காணப்பட்டாலும் கூட மிக அதிக அளவில் வெப்பம் மிகுந்த நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவைகள் குகைகள் பாறை இடுக்குகள் பொந்துகள் பள்ளங்கள் ஆகியவற்றில் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளுகின்றன. இன்னும் சில வவ்வால்கள் நாம் காணக்கூடிய வகையிலே மரங்களின் கிளைகளிலே தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. இவைகள் தலைக்கீழாக தொங்கக்கூடிய இந்க செயலும் கூட மற்ற எல்லாவற்றிலும் வேறுப்பட்டுள்ள ஒரு நிலைதான். மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நிலையில் தூக்கி வைக்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவைகள் தலைகீழாக தொங்கும் போது இவற்றின் உடல் எடையின் காரணமாக பின்புற கால்களின் தசை நார்கள் ஒன்றுடன் ஒன்று தன்னிச்சையாக கோர்த்து இணைந்துக்கொள்வதன் மூலம் இவற்றின் விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுகின்றன. இதனால் எந்த விதமான சிரமமுமின்றி இவை உறக்கத்தில் ஈடுபடுகின்றன.
உலகில் உள்ள உயிரினங்களில் ஆண் இனத்தின் மார்பில் பால் சுரக்கும் சம்பவம் தயாக் (Dayak) வவ்வால்களில் மட்டுமே காணக்கூடிய அதிசயம்
நாம் பொதுவாக அறிந்திருப்பது என்னவென்றால் முட்டையிடுதல் கர்பமடைதல் பாலூட்டுதல் போன்ற பண்புகளை பெண் உயிரினங்கள்தான் பெற்றிருக்கின்றன. 1994 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் ஓர் உண்மையினை கண்டறிந்தார்கள். மலேசியாவில் வசிக்கக்கூடிய தயாக் (Dayak) பழந்தின்னி வவ்வால்களில் 10 ஆண் வவ்வால்களை ஆராய்ச்சி செய்து ஓரு அதிசியத்தக்க முடிவினை வெளியிட்டார்கள். நம் கற்பனையிலும் உதிக்காத ஒன்று ஆண் வவ்வால்களின் மார்பகங்களில் பால் சுரந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலூட்டிகளில் ஆண் உயிரினத்தின் மார்பில் பால் சுரக்கக்கூடியது இது ஒன்றாகத்தான் இருக்கும். இந்த தகவமைப்பு அல்லாஹ்வுடைய அரும்பெரும் ஆற்றலை காட்டக்கூடியதாகவும் நான் அனைத்திற்கும் ஆற்றலுடையவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தக் கூடிய நிகழ்ச்சியாகவே நமக்கு தோன்றுகின்றது.
தூரப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைகளை துல்லியமாக அறிந்து 1600 மைல்களைக் கடந்து செல்லும் அதிசய ஆற்றல்
வவ்வால்கள் சராசரியாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலுடையவை. சில வகை வவ்வால்கள் வருடம் முழுதும் ஒரே மரத்தில் தங்கிவிடுகின்றன. ஆனால் சிலவகை வவ்வால்கள் உதாரணமாக மெக்ஸிகன் பிரிடெய்ல் வவ்வால்கள் குளிர் காலங்களில் தங்கள் இருப்பிடத்தை மாற்றி வெப்பப் பிரதேசங்களுக்கு பெரும் தூரத்திற்க்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றன. அமெரிக்காவிலிருந்து 1600 மைல்களைக் கடந்து மெக்ஸிகோவை வந்தடைகின்றன. இவைகள் எப்படி இவ்வளவு தூரப்பிரதேசத்தின் கால தட்ப வெப்பநிலையை துல்லியமாக அறிகின்றன என்பதை விஞ்ஞானிகளால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. இவைகளின் மூளைப்பகுதியில் பூமியின் காந்த மண்டலங்களை அறியக்கூடிய அமைப்பு எதுவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள். நம்மைப் பொருத்த வரை தேனீக்களுக்கு வஹீ அறிவிக்கக்கூடிய இறைவன் இந்த வவ்வால்களுக்கும் வஹீ அறிவித்துத்தருகின்றான் என்பதில் மிக எளிதாக விடை கிடைத்தவிடுகின்றது.
அடர்ந்த இருளிலும் பார்க்கக்கூடிய கண் அமைப்பு
வவ்வால்கள் பகல் பொழுதை ஒய்விற்கும் இரவு பொழுதை தங்கள் வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன. இவைகள் அந்திப்பொழுது முதல் வைகறைப்பொழுது வரை மிகச்சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இரவில் இயங்கக்கூடிய சில உயிரினங்களில் வவ்வாலும் ஒன்றாகும். இரவில் நன்குப்பார்க்கக்கூடிய கண் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.அடர்ந்த இருளிலும் குறைந்க வெளிச்சத்திலும் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பினை பெற்றுள்ளன. தூரக்கடல் தீவுகளில் வசிக்கக்கூடிய சில வவ்வால்கள் மாத்திரமே பகல் பொழுதில் தங்கள் இறையைதேடுகின்றன. இவைகளோடு மனிதர்களுக்கு உள்ளத்தொடர்பு இவற்றின் திடீர் குறுக்கீடு காரணமாக மனிதர்கள் சிலசமயம் பயத்திற்கு ஆட்படும் சம்பவம் நடைப்பெறுகின்றன. சராசரியாக வருடத்திற்கு ஒரு மனிதர் வவ்வாலினால் கடிக்கப்பட்டு இறப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இவை நாய் மற்றும் வண்டு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக்குறைவு.
வம்பயர் வவ்வால் ஒரு விலங்குனுடைய இரத்தத்தை குடிக்கும் காட்சி
"'மஸ்டிப் வவ்வால்களின் ஒரு காலனி ஒரு இரவில் 250 டன் எடையுள்ள இரையை உண்டு முடிக்கக்கூடிய அபரிதமான ஆற்றல்"
"எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாக படைக்கவில்லை". (அல்குர்ஆன் 3:191)
சமீபக் காலங்களில் மனிதர்கள் வவ்வால்களின் பயன்பாடுகளை வெகுவாக அறிந்து வருகின்றார்கள். பொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர். இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன. மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்(mastiff) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன என்றுச்சொன்னால் சுபஹானல்லாஹ், இறைவன் இவற்றைக்கொண்டு மனிதர்களுக்கு ஏற்படுத்தியுள்ள(Pest control) பாதுகாப்பு அரணை வார்த்தைகளால் விளக்க முடியாது. சிறிய பழுப்பு நிற வவ்வால்கள் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை. இதிலிருந்து இவை மனித குலத்திற்கு ஆற்றக்கூடிய அளவற்றத் தொண்டினை வார்த்தைகளினால் எங்ஙனம் விளக்க இயலும். பல நாடுகளில் இன்று மக்களுக்கு நோய்களையும் இன்னபிற தொல்லைகளையும் கொடுக்கும் கொசுக்களை அழிக்க பட்ஜட் போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம். இது கருணை மிக்க நம் இறைவன் அமைத்துள்ள வாழ்க்கைச் சுழற்ச்சி என்பது ஒன்றை ஒன்று சார்ந்து வாழக்கூடிய அமைப்பாகும். மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. இவைகளின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடைப்பெற்று வருவதாக அரிய வந்துள்ளது. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன. பல நாடுகளில் இவை வசிக்கக்கூடிய இடங்களிலிருந்து இவற்றின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான மிக உயர் தரமான உரம் தயாரிக்கப்படுகின்றது. இவையும் இவற்றின பயன்பாடுகளின் மிகமுக்கியமானதாகும்.
மனிதர்களுக்கு நேரடியான பயன்களும் இவற்றில் உள்ளன.
வம்பைர்(vampire) வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேரும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன. பிரிடெய்ல் வவ்வால்களின் இருப்பிடங்களில் சேர்ந்த இற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சோடியம் நைட்ரேட்டைக் கொண்டு அமெரிக்காவில் நடந்த சிவில் போரில்(1861-1865) வெடிமருந்து தயார் செய்துள்ள வரலாறும் நமக்கு காணக்கிடைக்கின்றது.
அல்லாஹ்வின் படைப்பாற்றலை பறைச்சாற்றும் அதிய உடல் அமைப்பு
உறை நிலையை கடந்து -5 (Minus 5) டிகிரி வரை தாங்கக்கூடிய ஆற்றல் பெற்ற சிவப்பு வவ்வால்கள்
வவ்வால்கள் வெப்ப இரத்த பிராணியாக இருப்பினும் கூட இவை மற்றவற்றிலிருந்து வேறுபட்ட அம்சத்தை கொண்டுள்ளது. இவை இயங்கக்கூடிய நேரத்தில் மாத்திரமே உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துள்ளன. இவை தலைக்கீழாக ஓய்வெடுக்கும் போது சுற்றுப்புற சூழலின் வெப்ப நிலைக்கு ஏற்ப இவற்றின் உடல் வெப்ப நிலை மாறிவிடுகின்றது. மனிதர்களைப் பொருத்த வரை 37 டிகிரிக்கு அதிகமாக உடல் வெப்பமானால் வியர்க்க ஆரம்பித்து விடுகின்றது. இதற்கு குறைந்து விட்டாலோ குளிர ஆரம்பித்து விடுகின்றது. மனிதனின் ஆற்றலில் குறிப்பிடத்தக்க அளவு கலோரி உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள செலவாகின்றது. சிவப்பு நிற வவ்வால்களின் உடல் வெப்பநிலை உறைநிலையை கடந்து -5 டிகிரிவரை தாங்கிக்கொள்ளுகின்றன என்றுச்சொன்னால் அல்லாஹ் மகா தூய்மையானவன். (0 டிகிரியில் தண்ணீர் பனிக்கட்டியாகிவிடும்) வவ்வால்களின் வேறுபட்ட வெப்ப நிலையை தாங்கக்கூடிய இந்த உடலமைப்பு இறைவன் இவற்றிற்கு அளித்த அருட்கொடையாகும். இவைகளின் உடல் அமைப்பு மற்ற பாலூட்டிகளை ஒத்திருப்பினும் இவைகளின் முன்னங்கால்களின் அமைப்பே மற்றவற்றிலிருந்து மாறுப்பட்டதாகவும் இவற்றிற்கு பறப்பதற்கு உறுதுணையாகவும் அமைந்துள்ளன. இவற்றின் முன்னங்கால்களில் உள்ள விரல்களுக்கிடையே தோலினால் இடைவெளியின்றி பினைக்கப்பட்டுள்ளன. இந்த தோல் அமைப்பே இவற்றிற்கு பறவையின் சிறகினைப்போன்று அமைந்து இவைகள் பறக்க உதவுகின்றன. இவற்றின் விரல்களில் பிணைக்கப்பட்டுள்ள இந்த தோல் அமைப்பு இவற்றின் உடலின் பக்கத் தசையுடன் இணைக்கப்பட்டு பின்புற கால்களில் இணைக்காப்பட்டுள்ளன.
"எதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசியமான ஆற்றல்" ECHO LOCATION
"ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒலி அலை அமைப்பு"(1) முதல் படம் மாறுப்பட்ட அலை வரிசைகளைக்கொண்ட ஒலியை வவ்வால் அனுப்புகின்றது,
(2) இரண்டாவது படம் அதனால் அனுப்பப்பட்ட ஒலிஅலையின் பாதையில் தடங்கள் ஏற்பட்டு அது எதிரொலியாக திரும்பி வருதல்.
(3) ஒலிப்பாதையில் தடங்கள் ஏற்பட்ட இடத்தை நோக்கி துல்லியமாக இரையின் அளவையும் தொலைவையும் அறிய அனுப்பும் ஒலி.
(4) இரையை விரைந்துச்சென்று பிடித்தல்.
(2) இரண்டாவது படம் அதனால் அனுப்பப்பட்ட ஒலிஅலையின் பாதையில் தடங்கள் ஏற்பட்டு அது எதிரொலியாக திரும்பி வருதல்.
(3) ஒலிப்பாதையில் தடங்கள் ஏற்பட்ட இடத்தை நோக்கி துல்லியமாக இரையின் அளவையும் தொலைவையும் அறிய அனுப்பும் ஒலி.
(4) இரையை விரைந்துச்சென்று பிடித்தல்.
இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு இயக்கம்தான் வவ்வால் தனது இரையை அடைய மேற்கொள்ளும் உத்தியாகும். இந்த பண்புகளை தன்னிச்சையாக எவ்வாறு பெற்றிருக்க முடியும். இத்தகைய திட்டமிட்ட ஒரு செயல் அமைப்பு தன்னிச்சையாகவோ அல்லது வவ்வாலே சிந்தித்து இத்தகைய ஒரு ஏற்பாட்டை அமைத்துக்கொண்டதாகவும் நம்மால் எடுத்துக்கொள்ள முடியுமா?. ஒரு சட்டையின் பொத்தான் தானாகத் தோன்றியதாக சொன்னால் நம்ப நம் பகுத்தறிவு ஏற்க மறுக்கின்றது. ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை நிலைநாட்ட எத்தனிக்கக் கூடியவர்கள் இதற்கு எந்த ஏற்புடைய காரணத்தை சொல்லப்போகின்றார்கள். இனி எவ்வளவு காலம்தான் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை தூக்கி பிடிப்பார்கள். அமெரிக்க விஞ்ஞானி ஸ்பென்சர் வெல்ஸின் கண்டுபிடிப்புகளின் மூலம் புதைக்குழியை அடைந்த இவர்களுடைய இந்த தத்துவத்தை இனி எவ்வாறு இவர்கள் நியாயப்படுத்த முடியும். இனி எந்த புதிய தத்துவத்தை இறைவனை மறுக்க இவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தப்பண்புகளை உடையவர்களைப்பற்றி அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.
ஷைத்தான் அவர்களை மிகைத்துவிட்டான் அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச்செய்தான். அவர்களோ ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்கவர்கள்.(58:19)
இவர்கள் அல்லாஹ்வுடைய ஜோதியை தங்கள் வாய்களினால் ஊதி அணைக்க நாடுகின்றனர். இருப்பினும் அல்லாஹ் இந்த நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் தன் ஜோதியைப் பூர்த்தியாக்கி வைப்பான். (9:32)
பொதுவாக வவ்வால்கள் எதிரொலிமூலம் தங்கள் இரையை பிடிப்பினும் கூட விதிவிலக்காக எதிரொலியின்றி கண் பார்வையைக்கொண்டு இரையைப்பிடிக்கக்கூடிய வவ்வால்களும் இருக்கின்றன. உதாரணமாக பிளையிங் பாக்ஸ் வவ்வால்கள் இவை மிக கூர்மையான பார்வை திறன் அமையப்பெற்றுள்ளன. இந்தத்தன்மை விதிவிலக்குகளில் விதிவிலக்கான அம்சமாகும்.
"சுயம்வரம் நடத்தி ஆண் வவ்வால்களைத் தேர்வு செய்யும் பெண் வவ்வால்களின் வியப்பூட்டும் ஓர் அம்சம்"
"ஆயிரக்கணக்கான குட்டிகளிடையே தன் குட்டியை மிகச்சரியாக அறியக்கூடிய நினைவாற்றல்"
வவ்வால்களின் இனப்பெருக்கத்தை பொறுத்தவரை இனங்களுக்கு இனம் வேறுப்பட்டு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு முறைக்கு ஒரு குட்டிகளை மட்டும் ஈன்றெடுக்கின்றது. இவைகளின் கர்ப காலம் 40 நாட்கள் முதல் 8 மாதங்கள் வரை இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஹாமர் ஹெட் வவ்வால்களின் இனப்பெருக்க முறை மிக வித்தியாசமானதாகும். இவ்வினத்தின் ஆண் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும். இவைகள் பெண் வவ்வால்களைக் கவர வித்தியாசமான சப்தங்களை எழுப்புகின்றன. இதனால் கவரப்பட்ட பெண் வவ்வால்கள் அங்கு வருகைத்தருகின்றன. ஒவ்வொரு ஆண் வவ்வாலும் தான் தேர்வு செய்யபட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. இருப்பினும் கூட அந்த நூற்றுக்கணக்கான வவ்வால்களில் ஒன்றினை மட்டும் தேர்வு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இந்த நிகழ்ச்சி பழங்கால இளவரசிகள் சுயம்வரம் நடத்தி தங்களுக்கு பிடித்த ஆண்களை தேர்வு செய்த சம்பவத்தைதான் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இனப்பெருக்கத்தின் மூலம் கர்பமடையும் பெண் வவ்வால் குட்டிகளை ஈன்றெடுக்க இடம் பெயர்ந்து இதைவிட வெப்பமான இடத்தில் சென்று மற்ற கர்பமுள்ள வவ்வால்களுடன் சேர்ந்துக்கொள்ளுகின்றன. ஆயிரக்கணக்கான வவ்வால்களின் குட்டிகளுக்கிடையே இவை தங்கள் குட்டியை மிக சரியாக அடையாலம் கண்டுகொள்ளும் இந்த ஆற்றல் மனித இனம் கூட அடையாத ஒன்றாகும். மருத்துவ மனைகளில் குழந்தை பிறந்தவுடன் அடையால அட்டை கட்டாவிட்டால் எந்த தாயும் தன் குழந்தையை அறிய முடியாது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
அழிவின் விளிம்பை நோக்கிச் செல்லும் வவ்வால்கள். ஓர் அதிர்ச்சி தகவல்
வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழுகின்றன. இன்றைய சூழ்நிலையில் காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள (Elnino) பருவநிலைக்கோளாறுகளினால் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் ஏறபடும் காட்டுத்தீயினாலும் மிக வேகமாக வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயின் காரணமாக சில வவ்வால் இனங்கள் 99.99 சதவிகிதம் அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றது. மனிதர்களினால் வவ்வால்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படாவிட்டாலும் கூட சில வேளைகளில் உண்பதற்காகவும் சோதனைச்சாலைகளில் ஆராயச்சி செய்வதற்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.
இந்த சிரிய உயிரினத்தில்தான் இறைவன் எவ்வளவு அத்தாட்சிகளையும் அதிசயமான பண்புகளையும் வைத்து நம்மை சிந்தனை வயப்படுத்தி பிரமிக்க வைத்துவிட்டான். இதைக்காட்டிலும் பல பிரமாண்டங்களை படைத்துள்ள இறைவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்.
நீங்கள் பார்க்கக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானத்தைப் படைத்தான். நீங்கள் சாய்ந்து விடாதிருக்கும் பொருட்டு முளைகளை (மலைகளை)நாட்டினான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச்செய்தான். வானத்திலிருந்து தண்ணீரை (நாமே) இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொன்றையும் முளைக்கச் செய்தோம் (31:10)
ஆதாரங்கள்:
கலைக்களஞ்சியம், என்கார்டா என்சைக்ளோபீடியா, டேஞ்சர் கிரியேச்சர்ஸ்
0 comments:
Post a Comment