Saturday, February 2, 2013

இந்த வாரச் சிந்தனை

ஜாபர் என்பவர் நபிகளாரின் நெருங்கிய தோழர். உறவினரும்கூட. அவர் மிகவும் ஏழை. ஜாபருக்கு ஒன்பது சகோதரிகள். அவர்களின் தந்தை ஓர்  அறப்போரில் வீரமரணம் அடைந்துவிட்டார். ஆகவே அத்தனை சகோதரிகளையும் பராமரிக்க வேண்டிய சுமை ஜாபரின் தோள்களில் விழுந்தது. வீட் டில் வறுமைதான் என்றாலும் ஜாபர் தன்மானமுள்ள இளைஞராக இருந்தார். யாரிடமும் உதவி என்று கைநீட்ட மாட்டார். இந்த இளைஞருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டுமே என்று நபிகளார் விரும்பினார். ‘‘இந்தா பணம், எடுத்துக்கொள்’’ என்று கொடுத்தால்  மிகவும் தன்மானமுள்ளவரான ஜாபர் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிடக் கூடும்; ஆகவே நபியவர்கள் ஒரு தீர்மானத்துடன் ஜாபரிடம் பேச்சு  கொடுத்தார். இருவரும் அவரவரின் ஒட்டகங்களில் அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஜாபரின் ஒட்டகம் மெலிந்து போய் நடப்பதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருந் ததை நபிகளார் கவனித்தார். இருவரும் பேசிக் கொண்டே பயணித்தனர்.

‘‘எப்படி இருக்கிறீர்கள் ஜாபர்?’’

‘‘இறையருளால் நலமாக இருக்கிறேன் இறைத்தூதர் அவர்களே!’’

‘‘நீங்கள் திருமணம் முடித்துவிட்டீர்கள்தானே?’’

‘‘ஆம். என்னை விட வயதில் மூத்த ஒரு விதவையைத்தான் மணமுடித்துள்ளேன்.’’

‘‘ஏன் அப்படிச் செய்தீர்கள்? நீங்கள் இளைஞர்தானே? ஒரு கன்னிப் பெண்ணாகப் பார்த்து முடித்திருக்கலாமே?’’

‘‘முடித்திருக்கலாம்தான். ஆனால், எங்களுக்குத் தாய், தந்தை இரண்டுபேரும் இல்லை. எனக்கு ஒன்பது சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களைக்  கவனித்துக் கொள்ளவும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும் சற்று வயது கூடிய பெண் இருந்தால் நல்லது என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு விதவையை மணமுடித்தேன்.’’ அந்தச் சகோதரனின் தியாக உள்ளத்தை நினைத்தோ என்னவோ நபிகளார் சற்றுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு மீண்டும் உரையாடலைத்  தொடர்ந்தார்: ‘‘உங்களுடைய இந்த ஒட்டகத்தை எனக்கு விலைக்குத் தருவீர்களா ஜாபர்?’’

‘‘விலை எதற்கு இறைத்தூதர் அவர்களே? நீங்கள் விரும்பினால் இதை இலவசமாகவே தருகிறேன்.’’ ‘‘வேண்டாம். விலைக்குத் தருவதாக இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.’’ ‘‘சரி. நீங்களே ஒரு விலை சொல்லுங்கள்.’’ நபிகளார் மிகக் குறைவாக ஒரு தொகையைக் குறிப்பிட்டார். உடனே ஜாபர், ‘‘என்னதான் மெலிந்த ஒட்டகமாக இருந்தாலும் இவ்வளவு குறைவான  தொகைக்கு எப்படித் தரமுடியும்? நீங்கள் இதை இலவசமாகவே எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். 
நபிகளார் சிரித்துக்கொண்டே விலையை இன்னும் சற்றுக் கூட்டினார். அதுவும் குறைவே என்று ஜாபர் சொல்ல, விலையை இன்னும் அதிகப்படுத்ததி னார். இப்படியே அதிகப்படுத்தி, அதிகப்படுத்தி நல்ல கணிசமான தொகையுடன் அந்தப் பேரம் முடிந்தது. நல்ல விலைக்கு ஒட்டகத்தை விற்றுவிட் டோம் என்று ஜாபருக்குத் திருப்தி. 

விலை முடிவானதும் ஜாபர் ஒட்டகத்திலிருந்து இறங்கி அதை நபிகளாரிடம் ஒப்படைத்தபோது, நபிகளார் அவரைத் தடுத்தார். ‘‘நீங்கள் ஒட்டகத்துடன்  வீடு செல்லுங்கள். நான் பணத்தைக் கொடுத்த பிறகு ஒட்டகத்தைப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார். நபிகளார் தம் வீடு வந்ததும் தோழர் பிலாலை அழைத்து, ‘‘இந்தப் பணத்தை ஜாபரிடம் கொடுத்து விடுங்கள். அவரிடமிருந்து நான் வாங்கிய ஒட்டகத் தையும் அவருக்கே அன்பளிப்பாகத் தந்துவிட்டேன் என்றும் சொல்லிவிடுங்கள்’’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

நபிகளாரின் அற்புதமான அணுகுமுறை இது. வறுமையில் வாடும் ஓர் இளைஞரின் சுயகௌரவத்திற்குச் சற்றும் ஊறு விளைவிக்காமல், அந்தக் கு டும்பத்தின் வறுமையைப் போக்க எப்படி உதவி செய்தார் பாருங்கள்! ஏழைகளின் தன்மானம் பாதிக்கப்படாமல் இதுபோன்ற வழிமுறையை நாமும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

‘‘உங்கள் செல்வத்தை (அறவழியில்) செலவிடுங்கள். இது உங்களுக்கே சிறந்ததாகும். தம்முடைய உள்ளத்தின் கஞ்சத்தனத்தைவிட்டு யார் விலகி இருக்கிறார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்’’(குர்ஆன் 64:16).

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes