Thursday, October 4, 2012

ஆமணக்கின் மருத்துவ குணங்கள்


ஆமணக்கு செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து காணப்படுகின்றன.  ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக்கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றார்கள்.

ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.

ஆமணக்கின் மருத்துவ குணங்கள் 

குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு விதமான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள். சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறிது அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குக் கொடுத்து வர, சளித்தொல்லை குணமாகும்.

ஆமணக்கு இலை, விதை மற்றும் எண்ணெயின் மருத்துவ குணங்கள் இதன் இலைகளைச் சாறு பிழிந்து, கொடுத்து வந்தாலும் இந்த இலைகளை அரைத்து மார்பின் மீது கட்டி வந்தாலும் பால் சுரக்க ஆரம்பிக்கிறது. இலைகளை நறுக்கி, அதில் சிற்றாமணக்கு நெய் விட்டு வதங்கிச் சூட்டுடன் வலியுடன் கூடிய கீழ்வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் இடலாம்.

இதன் இலைகளை, கீழாநெல்லி இலைகளுடன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று முறை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோய் தீர்ந்துவிடும்.

சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால் மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும். இதன் இலைகளைப் பொடியாய் அரைத்து, அதில் ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுப்பதால் மூலக்கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம்பெறும்.

ஆமணக்குச் செடியின் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக் கட்டினால் மூலம், வயிற்று வலி குணம்பெறும். சிறுநீர்ப்பை வலிகளுக்கு ஆமணக்கு இலைகள் உதவுகின்றன.

ஆமணக்கு விதைகளைப் பாலில் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து மூட்டுவலி, பின்தொடை, நரம்பு வலிகளுக்கு மருந்தாகத் தரலாம். சொட்டு, சொட்டாக சிறுநீர் கழியும் போக்கிற்கு சிவப்பு வகை ஆமணக்குச் செடியின் மலர்கள் பயன்படுகின்றன. மேலும், இதன் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes