Thursday, October 4, 2012

அதிசய பூவான பிரம்ம கமலத்தை வீட்லயும் வளர்க்கலாம்

பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், அந்த மலர் மலரும் போது, நாம் என்ன நினைத்து வேண்டினாலும், அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
அதிலும் அந்த அற்புத மலர், ஹிமாலாயாவிலேயே அதிகம் காணமுடியும். ஆனால் தற்போது இந்த மலரை சிலசமயங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக்க காலநிலைகளிலும் காண இயலும். ஆகவே இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க, ஒரு சிறந்த தோட்டப்பராமரிப்பு மற்றும் இந்த செடி பற்றிய அறிவு இருந்தால் இந்த செடியை வளர்க்கலாம். இல்லையென்றாலும் அந்த செடிப் பற்றிய சில டிப்ஸ்களை தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். அதை கவனமாகப் படித்து, அந்த செடியை வளர்த்துப் பயன் பெறுங்களேன்!!!
பிரம்ம கமலச் செடியை வளர்க்க சில டிப்ஸ்...
இந்த செடி பொதுவாக வெட்டப்பட்ட மற்றொரு செடியின் துண்டிலிருந்தும் வளரும். அதிலும் அதன் இலைகளைப் பார்த்தால், தட்டையாக மற்றும் தடிமனாக இருக்கும். இதன் தண்டு பகுதி எப்போதும் இலைகளால் சுற்றப்பட்டிருக்கும். மேலும் இதிலிருந்து வரும் பிரம்ம கமலப் பூ இலைகளிலிருந்தே வளர்கிறது.
பிரம்ம கமலச் செடியை குளிர் காலத்திற்கு சற்று முன்னர் வைக்க வேண்டும். அதிலும் இந்த செடி, மிகவும் குளிர்ந்த ஹிமாலயாவில் வளர்வதால், தோட்டத்தில் சற்று குளிர்ந்த இடத்தில் வைத்து வளர்த்தால், மிகவும் நன்றாக வளரும்.
அந்த மலர் வருவதற்கு நேரடியான சூரிய வெளிச்சம் படாதவாறு மற்றும் வளமான, பாறை மண்ணில் வைக்க வேண்டும். அதற்காக மிகவும் கடினமான மண்ணை நான் சொல்லவில்லை, மலைப்பிரதேசத்தில் வளர்ந்ததால், சற்று மலை மண்ணாக இருந்தால் நல்லது. அதிலும் மண் தண்ணீரை நன்கு உறிஞ்சுமாறும், சற்று சீரை தேக்கி வைக்குமாறும் இருக்க வேண்டும்.
பிரம்ம கமலம் ஒரு வித காக்டஸ் செடி. இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் வற்றி, செடி வாடி இறந்துவிடும்.
இந்த செடி மிகவும் நீளமாக வளராது. இது ஒரு குறுந்தாவரம் தான். மேலும் இது சற்று அதிகமான நீளத்தில் வளர்ந்தால், அதனை வெட்டி தனியாக ஒரு தொட்டியில் வளர்க்கலாம்.
அதிலும் இந்த பிரம்ம கமலம் பொதுவாக இரவிலேயே மலரும் பூ வகையை சேர்ந்தது. சிலசமயங்களில் மாலை நேரத்தில் பூவானது முழுமையாக மலர்ந்துவிடும், இல்லையெனில் இரவு 10 மணிக்கு மேல் தான் முழுமையாக மலரும். ஆகவே அதிர்ஷ்டம் இருந்தால், இந்த செடியை வைத்து மகிழுங்கள். மேலும் இந்த அதிசயப் பூவைப் பற்றிய சிறப்புக்கள் தெரிந்திருந்தால், கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆமணக்கின் மருத்துவ குணங்கள்


ஆமணக்கு செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து காணப்படுகின்றன.  ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக்கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றார்கள்.

ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.

ஆமணக்கின் மருத்துவ குணங்கள் 

குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு விதமான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள். சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறிது அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குக் கொடுத்து வர, சளித்தொல்லை குணமாகும்.

ஆமணக்கு இலை, விதை மற்றும் எண்ணெயின் மருத்துவ குணங்கள் இதன் இலைகளைச் சாறு பிழிந்து, கொடுத்து வந்தாலும் இந்த இலைகளை அரைத்து மார்பின் மீது கட்டி வந்தாலும் பால் சுரக்க ஆரம்பிக்கிறது. இலைகளை நறுக்கி, அதில் சிற்றாமணக்கு நெய் விட்டு வதங்கிச் சூட்டுடன் வலியுடன் கூடிய கீழ்வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் இடலாம்.

இதன் இலைகளை, கீழாநெல்லி இலைகளுடன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று முறை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோய் தீர்ந்துவிடும்.

சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால் மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும். இதன் இலைகளைப் பொடியாய் அரைத்து, அதில் ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுப்பதால் மூலக்கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம்பெறும்.

ஆமணக்குச் செடியின் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக் கட்டினால் மூலம், வயிற்று வலி குணம்பெறும். சிறுநீர்ப்பை வலிகளுக்கு ஆமணக்கு இலைகள் உதவுகின்றன.

ஆமணக்கு விதைகளைப் பாலில் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து மூட்டுவலி, பின்தொடை, நரம்பு வலிகளுக்கு மருந்தாகத் தரலாம். சொட்டு, சொட்டாக சிறுநீர் கழியும் போக்கிற்கு சிவப்பு வகை ஆமணக்குச் செடியின் மலர்கள் பயன்படுகின்றன. மேலும், இதன் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது.

ஆகாயத்தாமரை


நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகளே மருத்துவப் பயனுடையவை. வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம். 1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும். 2. 25 மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும். 3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும். 4. இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத் தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

கீரை மற்றும் வெந்தயம்

 நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது குறித்து, நாம் அதிகம் சிந்திப்பதில்லை. திருப்பூரைச் சேர்ந்த கபீர் என்பவர், கீரை மற்றும் வெந்தயம் குறித்த விவரங்களை தொகுத்தளிக்கிறார்:கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்: கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரக்கீரை, பாலக்கீரை, தண்டு கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும். கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். கீரை சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 5 வயதிற்குட்பட்ட 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைப்பாட்டால், கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது, உடலில் வைட்டமின் ஏவாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது. கீரையில் உள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதால், கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது. கீரைகள் பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது. கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு (ஒரு நாளைக்கு) பெண்களுக்கு 100 கிராம். ஆண்களுக்கு 40 கிராம். பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளுக்கு (46 வயது) 50 கிராம். 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.
குறிப்புகள்:கீரை வகைகள் சிறுப் பிள்ளைகளில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. எனவே, பெரும்பாலான பெண்கள், கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்டீரியாக்கள், கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் பிற மாசுப் பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரையை மாசுப்படுத்துகின்றன. எனவே, கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க, சமைப்பதற்கு முன், கீரையை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கீரைகளை நன்கு சமைத்து, மசித்து, கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே, சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் பயனுள்ளதாக அமைய, நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரம், கீரை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரை சமைக்கும் போது, பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். கீரையை வெயிலில் உலர்த்தினால், அதில் உள்ள பீடா கராட்டின் சத்து அழிந்து விடும். சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்க உதவும் வெந்தயம்: ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதன் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுப்படி, வெந்தயம், ரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. வெந்தயம் எந்த அளவு, எந்த நிலையில் மற்றும் என்ன முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதன் விவரம் கீழே உள்ளது. வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும்.
வெந்தயம் அதிக நார்சத்து (50 சதவீதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், ரத்தத்திலுள்ள அதிக கெலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இத்தன்மையானது, வெந்தயத்தில் உள்ளது. உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைப் பொறுத்தது. 25 முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது. ஆரம்ப காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம். வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாக இடித்தோ, தண்ணீரிலோ, மோரிலோ கலந்து, உணவுக்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்து கொள்ள வேண்டும். இரவு முழுவதும் ஊற வைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது, அவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும் போது, விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவுக்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும் போது, உண்பவரின் ருசிக்கேற்ப, உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கும் வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்து கொள்வதுடன், தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதன் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்கச் செய்யும். எனவே, அதிக கலோரி கொடுக்கக்கூடிய, குறிப்பாக “சாச்சுரேட்டேட்’ கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு, ஆரம்பத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும். வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன், பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரை நோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது, சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம். ஆயினும், உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும். சர்க்கரை நோயால் திடீரென ஏற்படும் உடல்நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes