Saturday, June 9, 2012

செங்காந்தள் மலர்கள்


மலர்கள் மணம் மிக்கவை. ஒரு சில மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஆனால் செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் தேசிய மலராகும்.

இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், வெப்ப மண்டலமான ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது.

நிறம் மாறும் பூக்கள்

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறமானது முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கலப்பைக் கிழங்கு

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு 10-20 அடி உயரம் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் கண்வலிக்கிழங்கு அல்லது இலாங்கிலி எனவும் அழைக்கப்படுகிறது. இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.விஷக்கடிக்கு மருந்து செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பாம்பு, சாரை, அரணை, ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர்இ குப்பைமேனி வேர், நீலிவேர் இவைகளை சேர்த்து அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உப்பில்லாமல் தினமும் இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர விஷக்கடிகள் குணமாகும்.

சிறுபாம்புக்கடி, வண்டுக்கடி, இவை போன்ற விஷநோய்களுக்கு இதன் இலையை அரைத்து மேலே பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்து வர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். கார்த்திகைசெடிவேர், எட்டிப்பட்ட, வெள்ளருகு, மிளகு இவை சமபாகம் கூட்டி அரைத்துக் காலை, மாலை சாப்பிட்டால் 18 வித எலிக்கடி விஷம் நீங்கும்.

செங்காந்தள் வேர் தைலத்தை, வாரம் ஒருமுறை தேய்த்து தலைமுழுகி வர எலிக்கடி, வண்டுக்கடி, பூரான்கடி, செவ்வட்டை, சாரைப்பாம்பு முதலிய விஷ நோய் உடலை பாதிக்காமல் குறைந்து விடும். இந்த தைலத்தை தேய்த்து குளித்தால் மேகநோய், கிராந்தி, பத்துபடைஇசொறிசிரங்கு, முதலிய வியாதிகள் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பத்தியமாக புளி, புகை, லாகிரி நீக்க வேண்டும்.

விதைகள் கிழங்குகள்

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

பாம்பு விஷம் முறிக்கும்

கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும். உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமியத்தில் மூன்று நாட்கள் ஊறவைத்து மெல்லிய வில்லைகளாக அரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்ய அதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேரத்திற்குள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும். தவிர தலைவலி, கழுத்துவலி, குட்டம்,வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும்.

பிரசவ வேதனை தீரும்

வாதம்இ மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி,பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும் உள்ளது. பிரசவ காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இறங்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புள், அடிவயிறுஇ உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து காற்றுப்புகா பாத்திரத்தில் வைத்து இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் , சிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும். இது சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

ஏற்றுமதியாகும் விதைகள்

கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின்(Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine)ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள்,வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.

அண்மையில் விதையிலிருந்து ‘கோல்ச்சின்’ மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான கோல்ச்சிகோஸைடு (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது. விதைகளுக்கு வெளிநாடுகளில் அதிக அளவுத் தேவை ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes