Monday, September 26, 2011

தங்கம் உருவான கதை

தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.
இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத் துகள்கள்
மண்ணுடன் கலந்துள்ள தங்கத் துகள்கள்
பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes